சோம்பல்
நானோ சோம்பல் முறிக்கிறேன்
நீண்ட வரிசையில் எதிரும் புதிருமாக
எறும்புகள்
கோபமாய் ஒருத்தி
காதில் விழுகிறது
துவைக்கும் சத்தம்
வீட்டருகே சாலை
சத்தமிடவில்லை
நகரும் எறும்புகள்
ஓய்ந்து சாய்கிறேன்
சோம்பல் முறிக்கிறது
நாற்காலி
நீண்ட இரவு
பகலை விழுங்குகிறது
தூக்கம்
புரட்டிய பக்கங்களில்
மெது மெதுவாய்
மறைகிறது எழுத்து
கண்சொக்கும் நேரம்
ஊருக்கே காட்டியது
தவறிய புத்தகம்
ஜன்னலருகே
திறந்து விடுகிறேன்
மேல் பொத்தானை
சுழலும் மின்விசிறி
அனல் வீச ஆடுகிறது
நாட்காட்டியில் மேமாதம்
யாருமில்லை
தைரியமாக எழுகிறேன்
நாற்காலியில் வியர்வை
வியர்த்தொழுக
வெளிவருகிறது
துவைக்காத ரகசியம்
- கி.கவியரசன்