“குழந்தையின் குரல்”

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு:: “குழந்தையின் குரல்”

நன்றி கவிதைமணி வெளியீடு::22-05-17

படஉதவி:: கூகிள் இமேஜ்
========================================================

குழந்தையின் குரல்:
===================

கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்பர்
குழந்தையில்லா வீட்டில் குதூகல இருக்காதெனலாம்..!

குடும்பமொன்றில் குழந்தையின் குரலொன்று கேட்கநீ
கோடி புண்ணியம் செய்திருத்தல் வேண்டுமம்மா..!

பெருஞ்செல்வ மெளிதில் கிடைக்கும் குழந்தையெனும்
அருஞ்செல்வம் இறையருளால் மட்டுமே கிட்டும்..!

மண்டியிட்டு மண்சோறு உண்டபல நாட்கள்..
வேண்டியவரம் கேட்டு கும்பிட்டபல கோவில்கள்..

உள்ளம்குளிர நீராடிய புண்ணிய திருக்குளங்கள்..
பிள்ளை வரம்வேண்டி பித்தாக அலைந்த நாட்கள்..

இவை யனைத்தும் வீணாகவில்லை யொருநாள்..
அவை யனைத்துப் பலனுமுடன் பலித்தது..!

கும்பிடவந்த சாமியிடம் குழந்தைவரம் கேட்கும்போது..
குழந்தையின் குரல்கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினேன்..

வேண்டுவோர்க்கு வானத்தில் எழும் அசரீரிபோல..
வேண்டாமென வீசிச்சென்ற குழந்தையினழு குரலொடு..

அரும்புமலர் சோலைதனில் இறையருட் கொடையால்..
ஆதரவின்றிக் கிடந்தன்று பிறந்த குழந்தையொன்று..!

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளைபோல்..
பெரிதாக அரியசெல்வமென கிட்டிய தெனக்கும்..!

அன்னையின் பிரசவலிகூட மறக்கும்...குழந்தையின்
அழுகுரல் கேட்டவுடன்..பட்டதனைத்தும் மறந்தேன்..!

குறையேதும் வலியேதும் இல்லாமல் குழந்தையொன்று..
இறையருளால் பெற்றதுபெரும் பேறென்றன் பாக்கியமே..!

கூப்பிடும் குரல் கேட்டு கண்ணன் வந்ததுபோலென்
குழந்தையின் குரல்கேட்டால் ஓடோடி வருவேன்நான்

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் . . . .எனும்

ஐயன் வள்ளுவன் கூற்றுக் கிணையாக
ஐயமுற வலிமை சேர்த்தோர் ஆருமில்லை

இவ்வுலகில்..!

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (22-May-17, 9:02 pm)
பார்வை : 125

மேலே