கவிதைகள்
அப்துல் ரகுமானின் முதல் கவிதைத் தொகுப்பு நூல் பால்வீதி. 1974-இல் வெளிவந்தது. பாலைச் சுண்டக் காய்ச்சித் திரட்டாகக் கட்டிப் படுத்தியது போன்று, சிந்தனையையும் கற்பனையையும் திரட்டி வடித்த புதுக்கவிதைகள் கொண்டது.
அடுத்து வெளிவந்தது, கவியரங்கங்களில் அவர் பல ஆண்டுகளாகப் படைத்த கவிதைகளுள் தெரிந்தெடுத்த சிலவற்றையும், இந்தி உருது இசைப்பாடல் வடிவங்களைத் தமிழில் அறிமுகப்படுத்திப் படைத்த பாடல்களையும் கொண்ட நேயர் விருப்பம். இது 1978-இல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து சுட்டுவிரல் (1989), ஆலாபனை (1995), விதைபோல் விழுந்தவன் (1998), முத்தமிழின் முகவரி (1998), பித்தன் (1998) ஆகிய புதுக்கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். 2002 - இல் வெளிவந்துள்ளது மின்மினிகளால் ஒரு கடிதம் என்னும் நூல். இது அரபி, உருது மொழிகளின் கஸல் என்னும் காதல் கவிதை வடிவத்தைத் தமிழில் அறிமுகம் செய்ய இவர் படைத்த அழகிய காதல் இலக்கியம்.
இக்கவிதை நூல்கள் மட்டுமின்றி இரு ஆராய்ச்சி நூல்கள், பத்துக்கும் மேற்பட்ட இலக்கியக் கட்டுரை நூல்கள், பிறமொழிக் கவிதைகளை மொழிபெயர்த்து விளக்கி எழுதிய பல கட்டுரைத் தொகுதிகள் என்று பல நூல்களைப் படைத்து வெளியிட்டுள்ளார். தொடர்ந்து எழுதி வருகின்றார்.
நண்பர்களே, ந.பிச்சமூர்த்தி, சிற்பி ஆகியோரின் கவிதைகள் பற்றிய பாடங்களை முன்பு படித்தீர்கள். அவற்றின்வழி புதுக்கவிதை பற்றி அறிந்திருக்கிறீர்கள்.
புதுக்கவிதை வடிவம்
சிற்பியும் அப்துல் ரகுமானும் தமிழ் கற்றுப் புலமை பெற்ற பேராசிரியர்கள். இவர்களும் மீரா, அபி, மேத்தா, தமிழன்பன், இன்குலாப் போன்ற பிற தமிழ்ப் பேராசிரியர்களும் யாப்பு இலக்கணக் கட்டுப்பாட்டை மறுத்த புதுக்கவிதையை எழுதத் தொடங்கினர். இதன் பிறகுதான் ‘இலக்கணத்தை மீறிக் கவிதை எழுதினால் தமிழ்மொழி அழிந்துவிடும்’ என்ற தவறான எண்ணம் அகன்றது. புதுக்கவிதையைக் கடுமையாக எதிர்த்து வந்த பலர் அமைதி அடைந்தனர். கவிதையின் பரிணாம வளர்ச்சி என்று புதுக்கவிதையை ஏற்றுக் கொண்டனர். விலங்குகள் இல்லாத கவிதை என்ற அப்துல் ரகுமானின் கட்டுரை நூல் புதுக்கவிதை பற்றிய பல தவறான ஐயங்களைப் போக்கியது.
இக்கால வாழ்வியல் சூழல் ஏற்படுத்தும் உள்ள உணர்வுகளை, வாழ்க்கைச் சிக்கல்களைக் கவிஞன் சரியாக வெளியிடப் பொருத்தமான வடிவம் புதுக்கவிதைதான் என்பது அப்துல் ரகுமானின் நம்பிக்கை.
5.2.1 தம் கவிதை பற்றிய கொள்கை அறிக்கை
பாரதியார் ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல்’ என்று கொள்கை அறிவிப்புச் செய்தார். தமக்குத் தொழிலே கவிதை படைப்பதுதான் என்பது அவர் கருத்து. அவர் வழியில் வந்த தமிழ்க்கவிஞர் அப்துல் ரகுமானோ, தமக்கு உயிரும் வாழ்க்கையுமே கவிதைதான் என்கிறார். எழுதுகோலைத் (பேனா) தம் கையின் ஆறாவது விரலாகவே உணர்கிறார். ‘இந்த ஆறாவது விரல் வழியே வடியும் இரத்தமும் சதையும்தாம் தம் எழுத்துகள்’ என்று அவர் சொல்கிறார்.
என் ஆறாவது விரல் வழியே
சிலுவையிலிருந்து
வடிகிறது ரத்தம்
ஆம் -
என் ‘மாம்சம்’
வார்த்தை ஆகிறது
அவரது முதல் நூலான பால்வீதியின் முதல் கவிதையே இவ்வாறு அவர் கவிதை பற்றிய கொள்கை அறிக்கையாக அமைகிறது.
நண்பர்களே, திருமறை பைபிளைப் படித்தவர் ஒவ்வொருவருக்கும் இக்கவிதை ‘ஆதியாகமத்தில்’ வரும் மனிதன் படைக்கப்பட்ட செய்திகளை நினைவூட்டும். ஆதியில் தேவனிடம் இருந்த ‘வார்த்தை மாம்சம் ஆகியது’ - அதாவது ‘வார்த்தையால் தேவன் முதல் மனிதன் ஆதாமைப் படைத்தார்’, என்பதே அச்செய்தி. அப்துல் ரகுமானின் கவிதையில் ‘மாம்சம் வார்த்தை’ ஆகிறது.
இந்தக் கவிதை நமக்கு எதை உணர்த்துகிறது?
1. சிலுவையில் ஏசுபெருமான் சிந்திய இரத்தம் மனித குலத்தைப் பாவ வழியிலிருந்து மீட்டது. அன்பு என்னும் தூய நெறியில் செலுத்தியது. உலகம் அடையும் வாழ்க்கைச் சிக்கல்களால் கணந்தோறும் சிந்தனைச் சிலுவையில் அறையப்படுகிற கவிஞனின் இரத்தமே அவன் கவிதை. இது மனித குலத்தை மீட்டு நல்வழியில் செலுத்தும்.
2. சிலுவையில் ஏசு சொன்ன வாக்கியம் ‘என் தேவனே ! ஏன் என்னைக் கைவிட்டீர்?’ என்பது, அப்துல் ரகுமான் அதை ‘என் தேவனே ! எனக்குக் கைகொடுத்தீர்’ என மாற்றி இக்கவிதைக்குத் தலைப்பாகக் கொடுத்துள்ளார். எழுதும் கையைக் கொடுத்ததற்கு நன்றி கூறுவதற்காகவே இந்த மாற்று உரை.
5.2.2 பாடுபொருள் வகைகள்
‘மானிட முன்னேற்றம் தமது கவிதைகளின் குறிக்கோள்’ என்ற அவரது படைப்பு நோக்கம் இன்று வரை அவர் எழுதியுள்ள கவிதைகள் அனைத்திலும் செயல்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
காதல், இயற்கை, அரசியல், சமூகம், அறிவியல், ஆன்மிகம் முதலிய வாழ்வியல் துறைகள் எதையுமே அவர் விட்டுவைக்கவில்லை. தெளிந்த சிந்தனையுடனும், ஆழ்ந்த தூய உணர்வுடனும், இனிய அழகியலுடனும் கவிதைகளைப் படைத்து வழங்கி வருகிறார். சான்றாக ஒருசில கவிதைகளே இங்குத் தரப்படுகின்றன.
சமயம் - ஆன்மிகம்
இறைவனுக்கு எத்தனையோ பெயர்கள் ! எல்லாப் பெயரும், ஒருவனான இறைவனையே குறிக்கின்றன என்று சமய ஒற்றுமை பேசுகிறார் அப்துல் ரகுமான்.
அரன் என்றழைப்பினும்
வரன் கொடுப்பவன்நீ
அரியென்று இசைப்பினும்
சரியென்று இசைப்பாய்
கர்த்தன் என்று உரைப்பினும்
அர்த்தம் நீதான்
அல்லா எனினும் நீ
அல்லாது வேறு யார்?
(ஆயிரம் திருநாமம்பாடி - நேயர்விருப்பம், ப.31)
(அரன் = சிவன்; அரி = திருமால்; வரன் = வரம்; அல்லா = இறைவன்)
இயற்கை
இயற்கைப் பொருள்களை அப்படியே வருணனை செய்வதில்லை அப்துல் ரகுமான். அவற்றுக்குள்ளும் ஆழ்ந்த வாழ்வியல் உண்மைகளைக் காண்கிறார்.
சின்னஞ் சிறிய பனித்துளிகளையும் பெரிய சூரியனையும் ஒரு கவிதையில் நிறுத்திக் காட்சி படைக்கிறார். அது ஒரு புதிய காட்சி. நம் மனச்சாட்சியை உசுப்பும் சாட்சி என்ற கவிதை :
வெண்புள்ளி குத்திய
இரவு நீக்ரோவைப்
படுகொலை செய்கிறான்
வெள்ளையன்
தரையின்
பச்சை நாக்குகளில்
வார்த்தையாக முயலும்
ரத்தத் துளிகள் (சாட்சி, பால்வீதி, ப.74)
(இரவு = நீக்ரோவாகவும்; சூரியன் = வெள்ளையனாகவும்; புல் இதழ்கள் = பச்சை நாக்குகளாகவும்; பனித்துளிகள் = இரத்தத் துளிகளாகவும் உருவகப் பொருளில் வந்தன; வெண்புள்ளி குத்துதல் = நட்சத்திரங்கள் மின்னுதல், இங்கு நீக்ரோக்களைப் புள்ளி குத்தி அவமானப்படுத்துதல்)
வெள்ளை இனத்தவரின் இனவெறிக் கொடுமைக்கு உள்ளாகும் நீக்ரோ மக்களின் மீது கவிஞர் கொண்ட பரிவு இந்த உருவகக் கவிதையாய் உருவாகியிருக்கிறது. உலகையெல்லாம் தன் உறவாகப் பார்க்கும் கவிஞருக்கு ‘அந்த விடிகாலைப் பொழுது நீக்ரோக்களுக்கு எப்போது விடியும்?’ என்ற தவிப்பு !
உழைப்பு
உழைத்துச் சிவந்த கைகளைத் திருமகளின் இருப்பிடமான செந்தாமரையாகக் காண்கிறார். தனரேகை, கையில் இல்லை, தரிசுகளில் ஏர்முனை கீறும் கோடுகள் தாம் தனரேகை என்கிறார். (நகமகுடம், நேயர் விருப்பம், ப.42)
மணி வயிரத் தோள்என்ற
மந்தரங்கள் இங்கிருக்கத்
தயக்கமென்ன அமுது எடுக்கத்
தரைக்கடலையே கடைவோம் !
(மந்தரம் = பாற்கடலைக் கடையப் பயன்பட்ட மந்தர மலை; தரைக்கடல் = தரையாகிய கடல்)
வயிரம் பாய்ந்த தோள்கள் என்னும் மந்தர மலையைக் கொண்டு, பூமியாகிய பாற்கடலில் உழைத்து, மானிடம் சாகா இருப்பதற்குரிய அமுதாகிய அனைத்துப் பயன்களையும் அடைவோம் என்பது பொருள்.
சமூக உணர்வு
காற்றைப் பாடும்போது, சமூகத்தில் சாதியின் பெயரால் வளர்ந்து நிற்கும் கொடிய நோயான தீண்டாமையைக் கண்டிக்கிறார்.
கை இல்லாத நீ
எல்லாரையும் தழுவுகிறாய்
கை இருக்கும் நாம்
சக மனிதனிடமே
தீண்டாமையைக்
கடைப்பிடிக்கிறோம்
கையிருப்பது ஒரு குறையோ?
(அந்த இடம், ஆலாபனை)
கைகள் இல்லாத காற்று எல்லாரையும் தழுவுகிறது. கையிருக்கும் மனிதன் தன் உடன்பிறப்பான இன்னொரு மனிதனை இழிந்த சாதி âன்று தீண்ட மறுக்கிறான். இதைச் சொல்லும் கவிஞர் “கையிருப்பது ஒரு குறையோ?” என்று கேட்கிறார்.
சுட்டுவிரல் என்னும் நூலில் சமுதாயச் சீரழிவுகளுக்குக் காரணமானவர்கள் அனைவரையும் குற்றம் சாட்டுகிறார். சினம் கொண்டு சாடுகிறார். அதில் அப்துல் ரகுமானின் ‘கவிக்கோபம்’ பொங்குகிறது. கோபம் கூட மிக அழகாக இருக்கிறது.
இசை
கவிஞர் மெழுகு வத்தியைக் கூர்மையாகப் பார்த்திருக்கிறார். நமக்காக அழுது உருகும் அதன் தோற்றத்தில் ஒரு புதிய கற்பனை பிறக்கிறது :
ஒற்றை நெருப்பு உதட்டின்
வாசிப்பில்
புல்லாங்குழலே
உருகுகிறது (பால்வீதி. ப . 51)
மெழுகு வத்தியின் சுடர் ஒற்றை உதடாகத் தெரிகிறது. மெழுகுவத்தி புல்லாங்குழலாகத் தோன்றுகிறது. வெளிச்சம் இசையைப்போல் பரவுகிறது. நமக்கு இன்பம் தருகிறது. அந்த இசையின் இனிமையில் புல்லாங்குழலே உருகிக் கரைகிறது. ஒளியையும் ஒலியையும் ஒன்றிணைத்து இசைக்கு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்குகிறார் கவிஞர்.
ஆலாபனை நூல் முழுக்க வாழ்வின் சிறந்த அம்சங்களை, அழகை எடுத்துக் காட்டி, அவருக்குள் இருக்கும் பாடகன் பாடுகிறான். ஆலாபனை : ராக விரிவை இசைக்கலைஞர் இசைக்கும் முறை. வாழ்வையே இசை ஆலாபனையாக உணர்ந்து ரசிக்கும் ரசிகனை இங்குக் காணலாம்.
காதல்
உலகக் கவிஞர்களில் காதலைப் பாடாதவர் எவரும் இல்லை. காதலர் பிரிந்து இருக்கும் போது தோன்றும் துயரத்தில்தான் காதலின் உயிர்த் துடிப்பே இருக்கிறது. அந்தப் பிரிவும் ஏக்கமும்தாம் காதலை வளர்க்கும் ஊட்டச் சத்து; கண்ணீர்தான் காதலை வாடாமல் வாழவைக்கும் ஊற்று நீர். அப்துல் ரகுமானின் காதல் கவிதைகள் எல்லாம் இந்தப் பிரிவையும் ஏக்கத்தையும் துன்பத்தையுமே பாடுகின்றன. பலநூறு கவிதைகள் படைத்தும் நிறைவு அடையாமல் ஒரு தனி நூலே படைத்திருக்கிறார். அதுதான் மின்மினிகளால் ஒரு கடிதம். தான் பாடுவதற்கே காதலியின் நினைவுதான் காரணம் என்று சொல்கிறார் :
கற்களில் இடறும்போது
பாடும் நதியைப்போல
உன் நினைவுகள் இடறும்போது
நான் பாடுகிறேன்
(மின்மினிகளால் ஒரு கடிதம், ப. 69)
(இடறுதல் = மோதிக்கொள்ளுதல்)
உண்மை அழகு
உலகத்தில் நாம் ‘உயர்ந்தவை அல்ல’ என்று கருதும் பல பொருள்களிலும் சிறந்த அம்சங்கள் இருப்பதை இவருக்குள் இருக்கும் பித்தன் பாடுகிறான். பித்தன் நூல் முழுதும் இந்த முரண் அழகைப் பாடுகிறது.
தமிழ் இணைய கல்விக் கழகம்