திரு இலஞ்சி முருகன் உலா


கணபதி துணை


திரு இலஞ்சி முருகன் உலா


காப்பு
(வெண்பா)

1. ஏர்கொண்ட தென்னிலஞ்சி யீசன் குரபரன்மேற்
சீர்கொண் டுலாமாலை சேர்க்கவே - நார்தருமால்
ஐந்துகர நால்வாய்மூன் றானவிழி யோரிருதாள்
எந்தை யொருமருப்ப னே

2. ஒண்டா மரைமலர்த்தாள்வேல னுலாத்தமிழ்க்குத்
தண்டா மரையாள் தமிழ்முனிவன் - பண்டருமோர்
அப்பன் முதன்மூவ ரானதிரு வாசகத்தேன்
அப்பனுமே காப்ப ரடுத்து

நூல்
(கலி வெண்பா)
[முருகக்கடவுள் திரு அவதாரம்]

1.சீர்கொண்ட மாலுந் திசைமுகனுந் தேவர்களும்
கார்கொண்ட கந்தரனைக் கைகுவித்தே - ஏர்கொண்ட

2.நாடெங்கே யெங்கடிரு நங்கைமா ரெங்கேயெம்
வீடெங்கே யென்று மெலிவுரைப்ப - வாடுமுங்கள்

3.வாட்டங்க ளெல்லா மதலை தவிர்ப்பனென்று
நாட்டமிசை யோராறு நற்பொறிகள் - ஈட்டியே

4.அக்கினிநல் வாயுகங்கை யாம்வா கனமீதில்
உய்க்கச் சரவணத்தி னுள்ளுருவாய்த் - தக்கபுகழ்

5.ஆராறு மீன்முலைப்பா லாரவுண்டு வாழுங்காற்
சீரார் சிவபெருமான் றேவியுடன் - பேரான

6.பொய்கைக் கரையிற் புகுதுங்கான் மைந்தரைக்கண்
டைய னனுக்கிரகத் தாலெடுத்தே - மெய்யுமையாள்

7.ஈராறு காலை யிருகாலாத் தானிருவிப்
பேராத வன்பாற் பிரியமுற்றாள் - சீராளன்

8.அஞ்சுமுகம் போதாவென் றாறுமுகத் தோடெழுந்து
வஞ்சச்சூர் மாய்க்கவந்த வான்பொருளான் - தஞ்சமுற்ற

9.பின்னவர்க ளோடே பிரியமுறு மந்நாளும்
தென்னிலஞ்சி யாகச் செழித்ததலம் - மின்னயிலான்

10.வெள்ளிக் கயிலை விளையாடு மப்பொழுதும்
உள்ளக் களிப்பா லுகந்ததலம் - தெள்ளுமறைப்

11.பூமேவு நான்முகத்தோன் பொன்னிலஞ்சி யென்றுதிரு
நாமேவு வாக்கா னவின்றதலம் - காமேவு

12.கற்பகநா டாளி கருதி யிணைமலர்த்தாள்
அற்பகலு நாடி யருச்சித்துப் - பொற்புடனே

13.போற்றாரை யெங்கோன் பொருதுவெல்லப் பொன்னாட்டை
மாற்றா தடிவணங்கி வாழ்ந்திருந்தான் - ஏற்றார்வாழ்

14.குற்றால மிந்தக் குவலயத்துண் டாகுமுன்னே
பற்றா யிருந்த பழையபதி - கற்றாரோ

15.டந்நாட் கயிலைக் கயன்வருங்கால் வேதத்தின்
முன்னாம் பொருளை மொழிகென்ன - என்னாலே

16.ஊகமில்லை யையா வுனதுசித்த மென்றுரைக்கச்
சேகரத்திற் குட்டிச் சிறைப்படுத்தி - வாகயிலான்

17.அண்டபகி ரண்ட மசரஞ் சரங்களெல்லாம்
உண்டுபண்ணு முன்னே யுகந்துகந்து - பண்டதும்பு

18.கோயில் படைத்துக் குலவு மதில்படைத்து
வாயிலொரு நான்கு வகைபடைத்துத் - தாயினிலும்

19.அன்பு படைத்த வரிய குடிபடைத்தே
இன்பம் படைத்த வெழில்படைத்து - முன்பெல்லாம்

20.வாழை பலாப்படைத்து மாங்கனிகள் தேன்பிலிற்றப்
பாளைக் கமுகு பலபடைத்து - வேளையே

21.நேராம் புருடரெலா நேரிழையா ரேயிரதி
யாரா மெனவே யருள்படைத்துச் - சீரான

22. நீதிமன்னர் செங்கோ னெறிபடைத்துப் பைந்தொடிமார்
காதலுறுங் கற்புக் கதிபடைத்து - மாதங்கள்

23. மும்மழைகள் பெய்யு முறைபடைத்துப் பைங்கூழ்கள்
செம்மைபெற வோங்குந் திருப்படைத்து - மும்மைபெறத்

24. தங்கையினா லள்ளியிடா தார்பிச்சை பிச்சையென்ன
எங்கோ னிருந்து படைத்தவிடம் - மங்காத

25. தென்னிலஞ்சி யென்றாற் செழிக்கும்வள மத்தனையும்
என்னி லியம்ப வெளியதோ - மன்னு

தொடரும்

எழுதியவர் : (7-Jun-17, 7:54 pm)
பார்வை : 87

மேலே