மேற்கு வாசல் ---முஹம்மத் ஸர்பான்
நட்சத்திரப் பூக்களை தூவிய இருளெனும் சேலையை அணிந்து கொண்டிருந்தது ஆகாயம் ஜலதோஷம் பிடித்த மேகக் கூட்டங்கள் சில நாட்களாக மழைத் துளிகளாக மூக்கை சிந்திக் கொண்டிருந்தது பூமியில் ஆனால் இன்று கர்ப்பமாகி மறுவாசல் சென்றிருந்த நிலவும் கொஞ்சம் மெருகேறி கண்களைக் கவரும் வானிலை வானில்... பனையோலையால் நெய்யப்பட்ட குடிசைக்குள் மரணத் தருவாயில் ஒளி பரப்பிக் கொண்டிருந்து குப்பி விளக்கு... நிசப்தம் கலந்த மௌனத்தில் கண்ணீர்த் துளிகள் தரையில் விழுகின்ற சத்தம் மாரிகாலத்து வெள்ளோட்டம் போல் அக்கம் பக்க வீடுகளின் ஜன்னலை தட்டியும் அவர்களது செவிகள் எதனையும் கேட்காததை போல் தூக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தது உள்ளம் துடிக்காமல் நெடு நேரமாய் தந்தை தர்மாவின் மடி மீது உறங்கிக் கொண்டிருந்தாள் ஐந்து வயதும் நிரம்பாத மகள் அபிநயா.
தூங்கிக் கொண்டிருக்கும் மகளை தட்டி எழுப்ப மனமில்லாத தர்மாவின் கண்ணீரை உலகத்து நதிகள் தத்தெடுக்கும் போட்டியில் களமிறங்கியிருக்கக் கூடும்.
பல மாதங்களாய் படுத்த படுக்கையில் நாழிகையை கடத்திக் கொண்டிருந்தாள் அபிநயா. பிறக்கும் போதே இவளது உள்ளத்தில் ஆயிரம் குளறுபடிகளை உண்டு பண்ணி படைத்து விட்டான் இறைவன். சாதாரண காய்ச்சலைக்கூட தர்மாவை போன்ற ஏழைகள் பல மாதங்கள் தாங்கிக் கொண்டு இயற்கையால் நிவாரணம் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் இந்த வியாதியை குணப்படுத்த ஆயிரம் ஜென்மங்களும் இவர்களுக்கு போதாது. அரசாங்க வைத்தியசாலைகள் கூட இன்றைய காலகட்டத்தில் அரசியல்வாதிகளையும் அளவுக்கு மேல் கொள்ளையடித்த செல்வர்களையும் சட்டத்திலிருந்து காப்பாற்றும் உல்லாச மனைகளாகி விட்டது.
அபிநயா பிறந்து, தவழ்ந்து, நடந்து, ஓடி விளையாடிய திண்ணையில் இன்று பேச்சு மூச்சின்றி உறங்கிக் கொண்டிருக்கிறாள். தர்மாவின் உள்ளம் மரணத்தைக் காட்டிலும் கொடிய வேதனையை உள்ளுக்குள் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
தன்னுடைய அன்பு மகள் இறந்த சேதி ஊர் முழுவதும் அறிந்த சத்தியமான உண்மை, ஆனாலும், இவனது வாசற்படியை நோக்கி எந்தவொரு மனித நடமாட்டமும் இதுவரை தென்படவில்லை. இனி காத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை என்பதை உணர்ந்த தர்மாவின் உள்ளம் வேரற்ற மரமாய் அவனை எழச் செய்தது. நிலவை விட ஓர் அழகான வட்ட முகம் கிழிந்த பாயில் கிடத்தப்பட்டிருப்பதை எந்தவொரு தந்தையால் தாங்கிக்கொள்ள முடியும்.
இருப்பினும் உயிருள்ள இதயத்தை கல்லாக்கிக் கொண்டு தன்னுடைய மகளுக்கு இறுதிக் கிரியைகளைச் செய்ய தயாராகிக் கொண்டிருந்தான் தர்மா...
குடிசையின் தெற்கு மூலையில் வைக்கப்பட்டிருந்த ரங்குப்பெட்டியை நோக்கி தர்மாவின் கண்கள் பாய்ந்தன. சோகம் கலந்த தயக்கத்துடன் அதனருகே சென்று சில நிமிடங்கள் தாமதத்தின் பின் பெட்டியை துறந்தான். அப்போது அவனது கண்களில் கசிந்து கொண்டிருந்த கண்ணீரின் அளவு மேலும் அதிகரித்தது. கண்ணீரை விட அதிகமாய் தர்மாவின் உடலும் வேர்த்துக் கொட்டியது.
மிகுந்த போராட்டத்தின் பின் பெட்டியை துறந்த போதே தர்மாவின் கண்கள் கறுப்பு நிறத் துணியில் வெள்ளை வண்ண பூக்கள் பதிக்கப்பட்ட கொஞ்சம் பழசுபட்ட சேலை மேல் விழுந்தது. பின் தர்மாவின் கண்கள் அபியையும் அந்த சேலையையும் மாறி மாறி நோக்கம் போட்டுக் கொண்டேயிருந்தது. தன் சுயவுணர்வை மறந்த அவனது செயலை மாரி கடந்து போன ஈரமாய் தவளைகளின் இரைச்சல் போர்வைக்குள்ளிருந்து மீட்டது.
அபிநயா பிறந்த போது அவளது தாய் ரதியும் கண்மூடி விட்டாள். ஆனாலும் அவள் தன் தாயின் பிரிவை உணராமலிக்க இந்தச் சேலையில் தான் சீராட்டி பாலூட்டி வளர்த்தான். ஆனால் இன்று காலத்தின் கட்டளையில் மண்ணுக்கு இவளை பலிகொடுக்கப் போகிறான். பாவம் ஏற்கனவே தன் பெற்றோரையும், மனைவியையும் நிரந்தரமாக பிரிந்தவன், கைகளின் நடுக்கத்தோடு சேலையை பெட்டிக்குள்ளிருந்து வெளியெடுத்தான் தர்மா.
குடிசையை விட்டு பின்புறமாக இருக்கும் கிணற்றில் தண்ணீர் இறைத்து பாத்திரத்தில் நிறைத்து குடிசைக்குள் கொண்டு சென்றான் தர்மா, வானிலை பனியை இடைவிடாமல் பூமியில் கொடிக் கொண்டிருப்பதால் அவனிறைத்த நீரும் குளிராக இருந்தது.
குளிர் என்றால் அபிக்கு அச்சம் என்று அறிந்திருந்த தர்மா விறகு மூட்டி அதனை மென் சூடாக மாறும் வரை காத்திருந்தான்; நீரும் சிறிது நேரத்தில் தன்மை மாறியது. ஆனாலும் இவனது சோகம் மட்டும் கடல் கடந்து சமுத்திரம் பாயும் நதிகளாய் எல்லையின்றி கடந்து போய்க்கொண்டு இருந்தது.
வழமையாக அபியை குளிக்க வைப்பது போல் தாலாட்டுப் பாடி கடைசியாக குளிப்பாட்டிக் கொண்டிருந்தான். சிறிது நிமிடங்கள் கடந்த பின் அவன் பெட்டியிலிருந்து எடுத்த சேலையை விரித்து அதற்குள் அவனது தேவதையைக் கிடத்தி போர்த்திய போது தந்தை இல்லாத உலகத்தில் உன் தாய் உன்னோடு இருப்பாள் என்று நான் நம்புகிறேன் என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான் தர்மா.
‘இன்னும் சில வருடங்கள் என் மகள் உயிரோடு இருந்திருந்தால் பருவமடைந்திருப்பாள்; அதன் பின் மணக்கோலம் பூண்டிருப்பாள் ஆனால்... இன்று... என்னை விட்டு போகிறாளே! நிரந்தரமாக போகிறாளே...!” என்று மார்தட்டி கதறிக் கதறி அழுதான். கண்ணீரை கரங்களால் துடைத்தபடி அபியை மார்போட அணைத்தபடி தூக்கிச் செல்ல ஆயத்தமானான். குடிசையின் வாசலை தாண்டிய போது விழுகின்ற பனியின் தன்மை அபிக்கு ஆகாது என்றுணர்ந்த தர்மா, அவளுக்கு மிகவும் பிடித்த அந்த மஞ்சள் நிற துணியில் ‘டோரா’ படம் போட்ட அந்தக் குட்டிக் குடையையும் அவளுக்காய் விரித்து ஒரு கை பிடித்து மறு கையால் அபியை மாரடைத்து வாசற்கடந்தான்.
எந்நாளும் இந்நேரத்தில் ஊரே வெளியிறங்கி சிரிப்பும் பேச்சுமாய் இருக்கும். ஆனால் இன்று முழுக் கதவும் சாத்தப்பட்டிருப்பதை நோட்டமிட்டான். யாருமற்ற சாலையில் அவனும் அவன் அபியும் இறுதி ஊர்வலம் செல்கின்றனர்.
கிராமத்து பாதைகள் என்றாலே கல்லும் முள்ளும் நிறைந்திருப்பது அதனது இயல்பு. ஒவ்வொரு கால்நடை எட்டி வைக்கும் போதும் அவனது பாதணியணியாத கால்களிலிருந்து உதிரங்கள் சொட்டுச் சொட்டாய் மண்ணை நனைத்துக் கொண்டிருந்தது. ஆனாலும், உள்ளத்தில் இருக்கும் வேதனையைக் காட்டிலும் தர்மாவுக்கு வேறு எதுவும் பெரிதாக தென்பட்டிருக்க முடியாது.
பாதைகள் நீண்டு கொண்டு போக பயணங்கள் சுருங்கிக் கொண்டிருந்தது. தர்மாவின் உள்ளம் பல கோடி வார்த்தைகளை மனதுக்குள் முனங்கிக் கொண்டேயிருந்தது. “ஊரிலுள்ள பூக்களே! உங்களோடு விளையாட வந்த ஒரு குட்டி தேவதை இன்று மண்ணை விட்டு விண்ணுலகம் போகிறாள்; வழியனுப்பி வைக்க இங்கு யாருமில்லை அவளை, உங்கள் காதலர்களான காற்றை நாங்கள் போகும் திசையின் பக்கம் துணையாக வரச் சொல்லுங்கள்” என்றவாறு தர்மாவின் உள்ளம் அவனுக்குள் ஓயாமல் முனங்கிக் கொண்டே இருந்தது.
பல நிமிடங்கள் கடந்த பின் ஓர் ஒற்றையடிப் பாதை அவன் கண்களில் தென்பட்டது. என் தேவதையின் கடைசிப் பயணம் முடிவடையப் போகும் தருவாயும் இருவென்பதை தர்மாவின் உள்ளம் உணர்ந்து கொண்டது.
இருப்பினும், வழமையாக இவ்விடத்தில் இந்நேரத்தில் பேய்களின் நடமாட்டமும் நாய்களின் தீராத ஓலமும் இடியை போல் பலமாக முனங்கிக் கொண்டேயிருக்கும் ஆனால், அவைகளும் ஏழை வீட்டு குட்டி தேவதை அஞ்சிவிடுவாள் என்ற அச்சத்தில் ஊமையாகி போய்விட்டது என்று கண்ணீர்த் துளிகள் நிலத்தில் சிந்த அவனது உள்ளம் நினைத்துக் கொண்டது. பாதையின் பயணமும் முடிவைத்தொட அண்மித்திருந்தது.
ஊரை விட்டு விண்ணுலகம் சென்ற பலரது ஆன்மாக்கள் அங்கே மௌனமாக தூங்கிக் கொண்டிருந்தது.
இன்று அபியும் புதிதாக இங்கே இவர்களோடு சேர்ந்த நிரந்தரமாக உறக்கம் கொள்ளப் போகிறாள்.
“பல மனிதர்கள் கலந்து கொள்ளும் இறுதி ஊர்வலம் இறந்தவன் புனிதன் என்பதன் அடையாளம் என்று அவன் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் முஸ்லிம் தோழர்கள் சொன்ன ஞாபகம்” ஆனால், இந்தப் பாவமும் செய்யாத என் மகளின் இறுதி ஊர்வலம் யாருமின்றி என்னோடு முடிகிறது என்று அவனது உள்ளம் ஏங்கிக் கொண்டிருந்தது.
ஏழை, செல்வம் என்று பாராமல் இதுவரை பல ஆயிரக்கண்ககான சடலங்களை தகனம் செயதும், அது மட்டுமின்றி சிலரது கட்டளையின் படி சடலங்கள் புதைத்த இந்த வெட்டியாளனின் மகளை வழியனுப்ப யாருமில்லையே... எங்கே அந்த நன்றி கெட்ட மனிதர்கள் எங்கே என்கே என்று பலமாய் சத்தமிட்டு ஆத்திரத்தோடு கத்தினான்.
இனி யாரும் என் மகளுக்கு தேவையில்லை. “என்னை விட யாரும் என் அபியை நேசித்தவர்கள் இங்கில்லை அவளுக்கு உலகமும் நானே! அவளுக்கு சுவாசமும் நானே! ஆனால் நான் ஓயாமல் துடிக்கின்றேன். அவளே என்னை விட்டு நிரந்தரமாக போகப்போகிறாள்” என்று மீண்டும் அவனது வலிகள் உச்சம் தொட்டது.
உள்ளத்தை கல்லாக்கிக் கொண்டு நான்கு அடி நீளமான குழியொன்றை தோண்டினான். தீ வைத்தால் அவளது பூப்போன்ற தேகம் தாங்காது என்றறிந்த தர்மா குழிக்குள் தோண்டி அவளை அடக்கும் செய்ய தீர்மானித்தானோ தெரியாது.
அதன் பின் பல நிமிடங்கள் அபியின் முகத்தை வைத்து கண் வாங்காமல் பார்த்துக் கொண்ட இருந்தான். நினைவுகள் சுயநினைவை மீண்டும் கொண்டு வர நள்ளிரவில் அபியை குழிக்குள் கிடத்தி அவளது தேகத்திற்கு நோகாமல் மண்ணை கைகளால் மெதுமெதுவாய் அள்ளிப் போட்டான்.
சிறிது நேரத்தில் அபியின் முகம் முழுமையாக மண்ணுக்குள் மறைந்து போனது. குளிரினால் அவளது இறுதி தூக்கம் கெட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காய் அபிநயா மிகவும் நேசித்த அவளது குட்டிக்கிடையையும் மண்ணறை மேல்விரித்தான். எத்தனையோ மாற்றங்கள் இந்த பூமியில் வந்த போதிலும் மேல் சாதி, கீழ் சாதி என்ற பிரிவினையை கொண்டு தீட்டென்ற சொல் இன்னும் சாகாமல் பல உயிர்களை கொன்று கொண்டுதான் இருக்கிறது என்பதை உணர்த்துகின்றது நாம் அடங்கிப் போகும் ‘மேற்கு வாசல்’
மேற்கு வாசல் என்பது சுடுகாட்டை குறிக்கின்றது