புதைத்திடுவோம் இப்பூமியை

பிரளயம் ஒன்றெழுந்து
இப்பிரபஞ்சம் தின்று
செரிக்கட்டும்!
சூரியன் தன்
சுற்றளவு பெருக்கி
சுருட்டி விழுங்கட்டும்
இச்சூனிய பூமியை!
எடைமிகுந்த
எரிகல் விழுந்து
எட்டாய் உடையட்டும்
இம்முட்டாள் உலகம்!
ஆழிப் பேரலைகள்
ஆர்ப்பரித்தெழுந்து
அழித்தொழிக்கட்டும்
இவ்வகண்ட பூமியை!
எல்லா திசையிலும்
எரிமலை வெடித்து
இல்லாமல் போகட்டும்
இப்பொல்லாத உலகம்!
துருவப் பனியனைத்தும்
உருகி வழிந்து
நிலப்பரப்பனைத்தையும்
நிர்மூலமாக்கட்டும்!
மத இன சாதி வெறிகளால்
மதிப்பற்ற மனித உயிர்கள்
நிதம் நிதம் வதமாவதை
தடுக்க இயலா முடக்க நிலை
இனியும் தொடரும்பட்சத்தில்
இவற்றில் ஒன்று
இன்றே நடக்கட்டும்!
இன்னொரு பூமி
இனிமேல் பிறக்கட்டும்!