அகம் , புறம் , அறம் --- மரபு கவிதை -- கொச்சகக் கலிப்பா

அகம் , புறம் , அறம் --- மரபு கவிதை -- கொச்சகக் கலிப்பா


அகம் :-

ஐந்திணையும் சேர்ந்திங்கே ஐந்நிலமாய் அகத்தினிலே
செந்தேனாய்த் தித்திக்கும் செந்தமிழர் வாழ்வியலும்
பைந்தமிழில் எடுத்தியம்ப பைம்பொழில்கள் நிழல்தரவே
இந்தாளில் அகவன்பை இன்பமாய்ச் செப்பிடுவேன் !

புறம் :-

புறத்திணைகள் பன்னிரெண்டாம் புவிதனிலே உண்டென்பார்
மறத்தினையும் வீரத்தையும் மங்காது பாதுகாத்தல்
திறமான தீரர்கள் திடமுடனே வழிவந்த
உறவான வெட்சியுடன் உருவாகும் வாகையுமே !

அறம் :-

அறத்தினையும் செய்தலன்றோ ஆளுமைக்கே அழகென்பார்
சிறந்ததொரு கொடைகுணத்தைச் சீராகப் பற்றிடவே
மறந்திடுமா அறநெறிகள் மகத்துவமாய் நின்றிடுமே .
விறலியர்தம் தூதும்தான் விவேகத்தின் அறமன்றோ !


அகம் , புறம் , அகம் - ஒன்றிணைதல் :-

அகத்திணைகள் அன்புடனே அகலாது பேணிடுங்கள்
புகவேண்டும் வீரமான புறத்திணைகள் காலத்தால்
சகத்தினையும் ஆள்வதற்குச் சான்றாகும் அறம்தானே !
யுகத்தினையே வென்றிடலாம் யாவருமே மூன்றாலே !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (30-Jun-17, 3:34 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 75

மேலே