நட்பு - நண்பனும் நானும்

நான் உனக்காக ஒன்றும் செய்ததில்லை தோழா ...
எனக்கு தோழிகளே உண்டு ... நண்பன் என்றால் நீ ... தாய் ஆண் உருவில் எப்படி இருக்கும் என்று உன் உருவில் காண்கிறேன் ...
மனதில் எதையும் வைக்காமல் வெளிப்படையாக பேசிவிடுவேன் ...
என் நண்பன் நீயும் அப்படியே வெள்ளந்தி மனிதன் ...
நட்பில் மிக முக்கியமே இந்த வெளிப்படைத் தன்மை தான் ... நட்புக்கு மாத்திரம் அல்ல எல்லா உறவுகளுக்கும் , வாழ்க்கைக்கும் ...
நம் நட்பை நான் தாய் பாசத்திற்கு ஈடாய் உணர்கிறேன் ...

நான் கொஞ்சம் வாலு நிறையவே வாயாடி ...
என் அத்தனை தொல்லைகளையும் நட்போடு ஏற்றுக்கொள்கிறாய் தோழா ...

உண்மையான நட்புக்கு அழிவில்லை ...
அது நாம் வாழும் காலம் வரையும் ...
வாழ்ந்து முடித்த பின்னும்...
என்றைக்குமே நம் தூய்மையான நட்பு இன்று போல் உலகம் உள்ளவரை வாழ்ந்து கொண்டே இருக்கும்

நண்பர்கள் சாவார்கள் ...
நட்பு சாகாது ...

நண்பா ...
உயிரில் உடலை தேடும் காதலை வெறுக்கிறேன் ...
உடலில் உயிரை பார்க்கும் நட்பை நேசிக்கிறேன் ...

ஆறடி நிலத்திற்கு சொந்தமானவர்கள் என்று சொல்கிறார்கள் ...
ஆனால் அதுகூட உண்மை இல்லை ...
காரணம் மண்ணோடு மண்ணாகி மக்கி தான் போகும் உடல் ...
ஆனால் இந்த வாழ்க்கையில் தான் எவ்வளவு அழுக்கு ...
என்ன கொண்டு செல்லப் போகிறோம் ஒன்றும் இல்லை ...
அழகான இந்த உலகில் நல்ல உள்ளங்களை நமக்காக சம்பாதித்தோம் என்பதே ...
நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கான அடையாளம் .....

(நான் உயிரோடு இருக்கும் வரை
ரத்த தானம் செய்வேன் ..எம்மால் முடிந்தவரை ...
என் ரத்த வகை : O +ve
இறக்கும் வரை இல்லை என்று வருவோர்க்கு
அன்னதானம் செய்வேன் ...
இறந்த பின்பு என் கண்களையும் மற்றும் எவை எல்லாம் வாழுமோ அவ்வனைத்து உடல் உறுப்புகளையும் தானமாக தந்துவிடுங்கள் .....
ஒரு வேளை நான் மூளை சாவு அடைந்திருந்தால் தாமதிக்க வேண்டாம் விரைந்து பெற்றுக்கொள்ளுங்கள் ...)

தோழா ...
இந்த உலகில் நான் அதிகம் நேசிப்பது யாரை என்று என் குடும்பம் தோழிகள் எல்லோரும் அறிவீர்கள் ...
ஆம் என் கணவரை தான் .....
ஒரு வேளை அவர் எனக்கு ஒரு நொடி முன் நான் பார்க்கா நேரத்தில் இறந்து விட்டால் நிச்சயம் அவர் மார்பில் நான் இறந்திருப்பேன்...
எம் இருவரையும் ஒன்றாக ஒரே குழியில் புதைத்து விடுங்கள் .....எரிப்பதென்றால் ஒன்றாக வைத்து எரித்து விடுங்கள் ...
எங்களை பிரித்து விடாதீர்கள் ...என் உடலில் ஓடும் உயிரிலும் ரத்தத்திலும் சுவாசத்திலும் அவர் கலந்திருக்கிறார் ...
அவருடையவளை அவரோடு எரிப்பது/ புதைப்பது தானே முறை ...

நண்பா ...
என் நட்பு என்றைக்கும் நிலைத்து வாழ வேண்டும் என்றால்
இறைவன் எமக்களித்த பெறுமதியான என் உயிரை தரவும் அஞ்ச மாட்டேன் .....

நாம் யார் என்பதை நம் வார்த்தை சொல்வதில்லை
நம் வாழ்க்கை தான் சொல்கிறது ...
அதே போல் செய்த உதவியை சொல்லி காண்பிப்பதில்லை நட்பு ...
நான் என்ற விளம்பர தம்பட்டமும் இல்லை ...
இது தான் உண்மையான வாழ்க்கை ...
இப்படி வாழ்ந்துவிட்டால் மனிதனின் மனதில் மதம் பிடிக்காது மனிதம் பற்றிக்கொள்ளும் ...
என்னுடையது தான் என்ற எண்ணம் இல்லாமல் இது இயற்கை தாயின் கொடை என்பதை உணர்வான் ...
இசை கேட்டு மனதை இலகுவாக்கி உறங்குவான் நட்பெனும் தாய் மடியில் ...

நட்பு ஒரு மனிதனை சிறந்தவனாக்குகிறது ...
நட்பின் மறுபெயர் உண்மை ...
நட்போடு எல்லோரும் உண்மையாக வாழுங்கள் இயற்கை அருளிய பூமியில் ...

தோழா ...
உன்னை நான் சுமக்கவில்லை ...
அதனால் தான் இறைவன் எனக்கு உன்னை தோழனாக்கி இருக்கிறார் ...

நிலத்தை பிரிக்க தான் எல்லைக்கோடு ...
நட்பை பிரிக்க எந்த கோடும் இல்லை ...
எமக்காக நீ செய்த யாவையும் என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் நண்பா ...
உனக்காக நான் இறப்பதற்குள் என்னால் இயன்றதை செய்து விடுவேன் என்ற நம்பிக்கையோடு
என் எழுத்தை முடிப்பதற்குள் ...நினைவில் நிறுத்து எழுத்தை தான் நம் நட்பு என்றைக்கும் முடியாது ...
உன்னிடம் சொல்லிக்கொள்கிறேன்
என் மெய் கூட்டை விட்டு என் உயிர் போனாலும் என் நட்பு வாழும் உன்னில் இந்த மண்ணில் ...

வாழட்டும் உண்மை நட்பு ...
மாறட்டும் பூமி தூய்மையாக ...
~ உண்மையான நட்புடன் உன் தோழி
பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (1-Jul-17, 8:08 am)
பார்வை : 1320

மேலே