நாங்கள் விவசாயிகள்

[] நாங்கள் விவசாயிகள் ...
----------------------------------------------------------------------------

இல்லை என்று சொல்லி
பழக்கமில்லாதவர்கள் நாங்கள் !
இன்று எங்கள் மொழி -
இல்லை என்ற
ஒற்றை வார்த்தையால் ஆனது !

எங்கும் ஆடம்பரம் - அது
எங்களையும் ஆட்கொண்டது ..
இச்சை அதிகமானது - அதனால்
இயற்கை மீறினோம் !
உண்மை தெரியாமல் - செயற்கை
உரங்களை நாடினோம் ..!

உரங்கள் வரங்கள் இல்லை என
தினங்கள் கடந்தே அறிந்தோம் ..!
செயற்கை - போந்தா கோழியென்று
காலங்கள் இழந்தே தெளிந்தோம் !
ஆசையால் கொஞ்சம் அழிந்தோம் !

விவசாயத்தை -
சேவை என்றது இயற்கை !
வேலை என்றாக்கியது செயற்கை !

சேவை துறந்தது பாவம் ஆனது !
செயற்கை தொட்டதால் -
பசுமை நிலங்கள் பாலை ஆனது !

இன்று -

அளவுகள் மிஞ்சி
செலவுகள் செய்ய
செல்வங்கள் கேட்கவில்லை ..!
அரைகுடல் கஞ்சி
உழைப்பினை மிஞ்சி
எதுவும் தெரியவில்லை - எங்களுக்கு
அதுவும் கிடைப்பதற்கில்லை ..!

இன்புற்று உழுது வாழ்ந்தவர்கள்
இன்று அழுது வாழ்கிறோம் !
இயற்கை பழுது ஆகும்போது
நாங்களே முதலில் வீழ்கிறோம் ..!

தலையினில் மழை வந்து
விழவில்லை ..!
எங்கள் விதையினில்
உயிர் உண்டு முளையில்லை ..!

மழையினை பிழை சொல்லி
பயனில்லை ..!
மழைமரம் முளைவிட
மரம் எனும் மழையில்லை ..!

ஆற்றின் தேகத்தில்
ஆதார குருதி இல்லை ..!
அதனால் எங்களுக்கு
ஆகாரம் உறுதியில்லை ..!

காற்று வாங்கும் போதும்
ஆற்றுக்கும் எங்களுக்கும்
ஜீவ சுவாசம் இல்லை ...

எதிர்காலத்தில் ஆறுகள்
எரியும் சுடுகாடு ஆகலாம் ..!
எதிர்காலம் இல்லாத நாங்கள்
அதிலே முதலாய் வேகலாம் ..!

எங்கள் பிணம் தொட்டு
பரவும் தீ -
யாம் அன்னமிட்டு காத்த
இவ்வையத்தை நெய்யும் முன் ..
வசந்தமே எங்கள் வயலில் வா ..!

----------------------------------------------------------------------------
[] யாழ் ...

எழுதியவர் : யாழ்கண்ணன் (2-Jul-17, 7:52 am)
சேர்த்தது : யாழ் கண்ணன்
பார்வை : 1581

மேலே