கல்லறையில் ஓர் காதல் பயணம்_பாகம்2
குரல் வந்த திசை நோக்கி மெதுவாய் திரும்பினான் வருண். இருட்டில் யாரோ அவனை நெருங்கிக் கொண்டிருந்த உணர்வுடன் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். வயதான ஒருவர் தன்னை நோக்கி விரைவதை கண்டான் வருண். அருகில் வந்தவர் தம்பி கொஞ்ச நேரம் வெளில இருங்க ரூம் கிளீன் பண்ணி முடிச்சுடுறேனு சொல்ல வருண் அவர்கிட்ட நானு சேந்து கிளீன் பன்றேன்னு சொன்னான் .இறுதியில் ஒருவழியாக இருவரும் சேர்ந்து அறையை சுத்தம் செய்து விட்டனர். முதியவர் வருணிடம் விடை பெற்றுச் சென்றார். மயான அமைதி நிலவிய அவ்விடம் வருணை தனிமையில் கொன்றது. எண்ண ஓட்டங்கள் அவனை பதைபதைக்க வைத்து கொண்டிருந்தன. பூட்டப்பட்ட தனியறையில் விழி மூடி ஏதேதோதேடியவனாய்இருந்தான்.ஒருவழியாக பொழுது விடிந்தது. காலை 5 மணி பரந்து விரிந்த கல்லூரிச் சாலையில் ஒரு நடை பயணம் காலை நேர காற்று, மலர் உதிர்த்த மரங்கள், மொட்டு விரிக்கும் மலர்கள், என எதுவும் மாற்றம் காணாமல் இருந்தன. நினைவுகள் ஏதேதோ கூற இயற்கையின் வனப்பை முழுதும் இரசிக்க இயலாதவனாய் இருந்தான் வருண். தனிமையின் வலியை விட நினைவின் ஏக்கங்கள் அவனை கொன்று புதைத்துக் கொண்டிருக்க எதனையும் வெளிக்காட்டாமல் பயணத்தை தொடர்ந்தான்.சிறிது தூரம் சென்றவுடன் மீண்டும் வந்த பாதை வழியே விடுதிக்கு திரும்பினான். கடந்த ஐந்து வருட காலத்தில் அனைத்தும் மாறாமல் இருந்தது அவனைத் தவிர. எதோ சிறையில் அடைத்தது போன்ற உணர்வு. மாடம் வழியாக வெளியே பார்த்தான் கம்பீரமாத் தோன்றிய கல்லூரி உணர்வுகளை ஊக்கப்படுத்திய வண்ணம் இருந்தது. காலை மணி 8 குளித்து விட்டு வெளியே கிளம்பினான் வருண். சென்ற இடமெல்லாம் கடந்த கால நினைவுகள் அவனை சிறை பிடித்த வண்ணம் இருந்தன.காலை உணவு எடுத்துக் கொண்ட பின்பு தனிமையில் நடக்கத் தொடங்கினான் வருண் பூட்டிய அறையில் புலம்புவதற்கு பதில் அது எவ்வளவோ மேலாக இருந்தது. ஒத்தயடிப் பாதை, ஓங்கி உயர்ந்த மரங்கள், குயில்கள் குரலெழுப்ப கூத்தாடும் குரங்குகள் கண்ணைப் பறிக்க மலை அருவியின் ஓசை செவிகளில் பாய துவங்கின. இங்கேயே இருந்துவிடலாமா? என்ற எண்ணம் மனதை வருடிய வண்ணம் இருந்தது. களிப்பில் காலம் மறந்து போனான் வருண். அனைத்து நினைவுகளும் அங்கேயே புதைக்கப் பட்டது போன்ற உணர்வு அவனை அவ்விதம் எண்ண வைத்திருக்கலாம். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எவரும் தென்படவில்லை. இருப்பினும் அத்தனிமை அவனை முழுதுமாக கவர்ந்தது. வெள்ளி மேகங்கள் மழைத்துளிகளை உதிர்க்கத் துவங்கின. அனைத்தயும் ஆழமாக ரசித்தவனாய் ஆராய்ந்து கொண்டிருந்தான் அவன். பொழுது சாய்ந்த வேளை தெரிந்து விழித்துக் கொண்டவன் திரும்பிச் செல்ல மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பினான். மழைக் காலம் என்பதால் எங்கும் கும்மிருட்டு சூழ்ந்திருந்தது, காற்றின் ஓசை காதைத் துளைக்க கவனமாய் நோக்கினான் வருண். அடர்ந்த மரங்கள் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன வீசும் காற்றின் வீரியத்தால். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் யாரோ உடன் வருவது போன்ற உணர்வு. இருப்பினும் அதை பற்றி அதிகம் சிந்திக்காதவனாய் அங்கிருந்து நகர்ந்தான். மண் பாதைகள் முழுதும் மழை நீரால் சிதைக்கப் பட்டிருக்க கவனமாய் கடந்து கொண்டிருந்தான் வருண். தடுமாறி விழச் சென்றவனை யாரோ தாங்கிப் பிடித்ததாய் தோன்றிட சிறிது நேரம் அதிர்ந்து போய் அங்கேயே நின்று சுற்றி முற்றி பார்த்துக் கொண்டிருந்தான். கால்கள் நகர மறுக்கின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவரும் தென்படவில்லை. மனதை திடப் படுத்திக் கொண்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தவனுக்கு எவரோ உற்று நோக்குவது போன்ற உணர்வு பரவத் துவங்கியது. இதய ஒலிகள் கட்டுக்கடங்காமல் துடிக்க கண்கள் எதையோ தேடிய வண்ணம் கால்கள் பயணத்தை தொடர ஆயிரம் குழப்பங்கள் ஆட்கொண்டன அவனை. திரும்பிப் பார்த்துக் கொண்டே பயணத்தை தொடர்ந்தான். கண்களில் பயத்தின் வெளிப்பாடு மறைக்கப் பட்டிருப்பினும் உள்ளம் அடங்க மறுத்தது. ஆளற்ற அடர்ந்த காட்டில் மேலும் பயணத்தைக் தொடர்கிறான் வருண்.
__தொடரும்.