சில்கின் ஸ்பரிசம்

"அன்று பெய்த மழை"க்குப் பிறகு
இன்னொரு படப்பிடிப்புக்கு
அவள் வந்திருந்தாள்
நீல மலைக்கு...

குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில்
பழைய தொலைப்பேசி அலுவகத்திற்கு
ஐந்தாறு நாள்
அவள் தொடர் வருகை..

ஐதராபாத்துக்கு இரவுகளில்
அலையாடும் குரலில்
என்ன துயரமோ...
அவள் பேசுவதைப்
பார்த்ததுண்டு ..
ஐந்தாறு நாளும்
அவளோடு
பேசியதும் உண்டு

ஆங்கொரு அலுவலக அறையில்
தங்கிப் பணிபுரிந்த
இளம் பொறியாளன் நான்..
அது..
ஆயிரத்து தொள்ளாயிரத்து
தொண்ணூறு .

கவர்ச்சி காட்டுபவர்களின்
கலையுலகில்
அவளிடம் மட்டுமே
கவர்ச்சி பூத்திருந்தது

'அடுக்கு மல்லிகையின் ' அழகு மல்லிகை
'நேத்து ராத்திரியின்' அனார்கலி
'காளிதாசன் கண்ணதாசன் '
பாடலில் நனையும்
அரை நிர்வாண அழகி,
மம்மட்டியானைக் காக்கும்
வெள்ளரிக்காப் பிஞ்சு

கண்ணீரும் புன்சிரிப்பும்
ஏழ்மையும் செழுமையும்
காமமும் கலையும்
பெண்களும் மயங்கும் கண்ணும்
'உருகும் பொன்மேனி'யும்
ஒருங்கே கொண்ட
ஊர்வசி ..

வெள்ளித்திரைக் கடலில்
சதிச் சுழலில்
மூழ்கிப் போன
தங்க ஓடம்

ஆட்டோ கிராப் தந்தாள் அன்று..
"Loving
S .Smitha "

அந்தக் கண்ணீர்த் தேவதை
கை குலுக்கிய
மென் ஸ்பரிசம்
இன்னும் சிலிர்க்கிறது
என்னுள்.....

சில்க் ...
ஓர்
உதிர்ந்த உயிர்
உதிராத கனவு !

***

எழுதியவர் : கவித்தாசபாபதி (8-Jul-17, 8:50 pm)
சேர்த்தது : கவித்தாசபாபதி
பார்வை : 100

மேலே