கண்கள் மட்டுமே பேசி கொண்டன பாகம் 1 கதை

ம்ம்ம்
நந ன
தேர்வுகள் முடிந்தது
தொல்லைகள் மடிந்தது
தேரோட்ட்டம்தான் இனி
எனக்கு தினமும்
தேவதையாய் மாற தான்
போகிறேன் நானும்
அதிகாலை காண வேண்டாம்
அலாரமுமும் கேட்க வேண்டாம்
அவசரமாய் ஓட வேண்டாம் .......

என்று கவிதை எழுதுதுவதாய் நினைத்து எதோ எழுதி கொண்டிருந்தாள் அவள் துண்டு காகிதத்தில். எதோ எழுதுவதும் பின் அது காற்றில் பறந்து எங்கோ போவதும் வழக்கமே. சில நேரங்களில் அவளே அதை குப்பையிலும் போடுவாள் . சில நேரம் அவளே அதை அலமாரிகடியிலும் மறைப்பாள். எழுதும் விஷயத்தை பொறுத்ததே பத்திரப்படுத்தலும் பறக்க விடுதலும் நடக்கும்.

தேர்வுகள் முடிந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது. எங்கோ வானில் பறப்பதாய் உணர்ந்தாள் இந்த இரண்டு நாட்களும். அப்பறம் என்ன +2 தேர்வு இது தான் உங்க வாழ்க்கையே தீர்மானிக்க போகுது என்று அப்பா அம்மா ஒரு பக்கம் பயம் காட்ட.. மறுபக்கம் நல்ல பெயர் பள்ளிக்கும் உங்களுக்கும் நீங்க தான் வாங்கி தரணும் என்று பள்ளி ஆசிரியர்கள் ஏதேதோ சொல்லி வைக்க .. போதாத குறைக்கு தானே கிணத்தில் விழுந்த தவளையாய் நண்பர்கள் எல்லோரும் போகிறார்கள் என்றும் அங்கு போனால் தான் முழு மதிப்பெண்கள் பெற முடியும் என்ற மாயையில் தானே போய் சேர்ந்த டியூஷன் என ஒரு வழி இல்ல இல்ல பல வழி ஆகி போனாள்.

ஓட்டமும் நடையுமாக நகர்ந்த ஒரு வருடத்தில் தான் எத்தனை தேர்வுகள்.மாறி மாறி எல்லா பக்கங்களையும் எழுதி தீர்த்து முடித்தாயிற்று பள்ளி படிப்பை . எழுதி தீர்த்த பேனா மையை சேர்த்தால் ஒரு நீல கடல் உருவாக்க முடியாவிட்டாலும் ஒரு நீல குளமாவது உருவாக்கலாம். அப்பப்பா.. பாறாங்கல் ஒன்றை கஷ்டப்பட்டு அகற்றி விட்டு ஒரு நிமிடம் பெருமூச்சு விடும் ஒரு உழைப்பாளியை போல தான் எல்லாரும் இந்த விடுமுறையை உணர்வார்களோ தெரியவில்லை ஆனால் அவள் அப்படி தான் உணர்ந்தாள்.

அலாரத்தை மறந்த தூக்கம் . இப்போது ஒன்பது மணிக்கு காலை காபியோடு அம்மா மெல்ல எழுப்பி காபி குடி என்பாள்.அப்போதும் அம்மா எழும்பு என்று சொல்வதில்லை. இதுவரை ஐந்து மணிக்கு அடிக்கும் அலாரத்தை அவள் அணைத்து விட்டு போர்வைக்குள் மடங்கி கொள்ள அம்மா வந்து மெல்ல தட்டுவாள் . இன்னும் இரண்டு நிமிஷம் அம்மா என்று சொல்லி கண் அசர அடுத்த ஐந்து நிமிடத்தில் அம்மா கொண்டு வரும் பூஸ்ட் காபிக்காக எழுந்துவிடுவாள். பூஸ்ட் காபிக்காக மட்டும் இல்ல தினம் நடக்கும் தேர்வுகளுக்காகவும் தான். காபி காப்போடும் புத்தகத்தோடும் சுவரோடு சாய்ந்த அதிகாலை பொழுதுகளை நினைத்தால் இப்போது இவ்வளவு நேரம் கண்மூடி கிடப்பது சுகமாக தான் இருந்தது அவளுக்கு.

ஜன்னல் வழிவந்த சூரிய கதிர்கள் அவளை எழுப்ப எவ்வளவு முயன்றும் தோற்று போய் கண் மூடி கிடந்த அவளை ரசித்து கொண்டிருந்தது. எலுமிச்சை நிறம் இல்லை என்றாலும் கோதுமை நிற தேவதை தான். என்னடா அவளை தேவதை என்று சொல்கிறேன் என யோசிக்கிறீர்களா? பதினெட்டுகளில் எல்லா பெண்களும் தேவதைகள் தானே . அதனால் தான் கதிரவனும் கண் அசராமல் அவளை பார்த்து கொண்டிருந்தாள். மூடிய விழிகளின் திறக்க செய்து எப்படியேனும் புருவ குடைகளுக்குள் ஒளிந்து கிடக்கும் அவள் கண்களை தேடியது. விண்மீன்களை விட அழகிய அந்த இரு கண் மீன்களையும் காண துடித்தது. அவள் போர்வை மேல் கோபம் கொண்ட சூரியன் இன்னும் அதிகமாய் கதிர்களை வீச தொடங்கினான்.

சரட் சரட் என அப்பாவின் செருப்பு சத்தம் கேட்டது போல தோன்றியது அவள் காதுகளுக்கு. பிரமையா எனவும் நினைத்தாள். அப்பாவை பற்றிய பயம் எப்போதும் உண்டு அவளுக்கு. செல்லமாக அழைப்பதிலும் சத்தமாக திட்டுவதிலும் என்று அப்பாவின் இரண்டு பக்கங்களையும் அவள் ரசித்திருக்கிறாள்.

அவள் அப்பா ரத்தினம் வாத்தியார் என்றால் அந்த ஊரில் எல்லோருக்கும் தெரியும். போலீஸ் போன்ற மீசை நல்ல உடல்வாகு. பள்ளி மாணவர்களை அச்சுறுத்த தான் அந்த மீசையை வைத்தாரோ என்னவோ. எது எப்படியோ அவருக்கு அந்த முறுக்கு மீசை தான் அழகு.

அம்மா கூட அந்த காலத்தில் அந்த மீசையை பார்த்து மயங்கி அவரை கட்டிக்கொண்டதாய் அடிக்கடி சொல்லி சிரிப்பார் அப்பா. ஆமா ஆமா அந்த நினைப்பு வேற இருக்கா என்று வெட்டி கொண்டு செல்லும் அம்மாவின் முகத்தில் அடக்க முடியாத வெட்க ரேகைகள் ஓடுவது தெரியும். அதை மறைக்க தானோ என்னவோ உடனே அடுக்களை பக்கம் நகர்ந்து விடுவாள். அன்னை ஒருவேளை அந்நேரம் அடுப்பங்கரை குடிதண்ணீரில் அவள் முகம் நோக்கினால் தெரியும் அவளுக்கு அவள் இத்தனை அழகா என்று. அம்மா எப்போதும் அழகாகவே தெரிவாள். ஆனால் வெட்கப்படும் போது அம்மா இன்னும் அழகாக தெரிவாள் மலர்ந்த மல்லிகை மொட்டு போல.

செல்லம் கொஞ்சும் அப்பாவாக அவர் எப்பவும் இருக்க கூடாதா என்று ஆசைப்படுவாள். ஒரு வேளை கடிந்து கொள்வது தந்தையின் கடமையோ என்னவோ அப்பா பல நேரங்களில் இப்படி தான் என அவர் கோபப்படும் போது நினைத்து கொள்வாள். சட சடவென கோபத்தை கொட்டிவிடும் அவர் சற்று நேரம் கழித்து பாச மழை பொழியும் பனியாகி விடுவார்.

வெளியில் இருந்து வந்த அப்பா அம்ம்மா கையில் எதோ பையை திணித்தபடி உள்ளே வந்தவர் மெல்ல இவள் அறையை எட்டி பார்த்தபடியே மணி பத்து ஆகப்போகுது. மினு எதாவது எழுந்து சாப்பிடு என்று சொன்னபடி நடந்தார். அவ்வளவு தான் தந்தையின் வார்த்தைகளை கேட்டதும் தரையில் எறிந்த பந்தை போல வேகமாக துள்ளி எழுந்தாள் மினு குட்டி, மினி , மினி மா என செல்லமாக அழைக்கப்படும் இந்த வீட்டின் செல்ல மான்குட்டி மினுஜா.

காதல் புத்தகத்தின் பக்கங்கள் விரியும்....

யாழினி வளன்

எழுதியவர் : யாழினி வளன் (9-Jul-17, 9:16 pm)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 589

மேலே