சர்வமும் அன்பின் ரூபம்

தன் பசிப்பிணியை போக்க இயலா உடலுள் கட்டூண்டு உணவை உண்ணத் தூண்டலுக்குட்பட்டு,
உண்ணும் உணவில் ருசி வேண்டி வாயிலுள் நாக்கும் தாண்டவமாட,
காய்கறி, கனி, தானியவகைகளும் போதாதென மிருகங்களையும் பலியிட்டுண்டு திரிகிறோம் இவ்வுலகில் வயிறு பெருத்த பெருச்சாளிகளாய்...

போதுமென்ற மனமென்னும் பொன்செய்யும் மருந்தறியா மானிடன்,
ஆசைகளை அறிவை மறைக்கும் மாயைகளாய் கோட்டைகள் பல கட்டிக்கொண்டே செல்ல,
கோட்டைகளும் நிலைக்குமோ நிலைமாறும் உலகில்??

பசியென்று வருவார்க்கும் புசியென்று உணவைத் தராது தனது பசியே மேல்லென்று எண்ணினால் சுயநலமே குடிகொண்டு அன்பென்னும் ஞான ஒளியுணராது இரவில் விழிக்கும் ஆந்தைகளாய் நாம் வாழ்வோம் உண்மைப் பரம்பொருளின் சிறுதுளி நாமென்றறியாமல்...

அவனியில் அவதரிக்கும் எவ்வுயிரும் இறையம்சமென்றே வேதங்களும் கூற அதை ஓதுபவனோ ஏற்க மறுத்து ஏற்படுத்தினான் இவ்வுலகில் சாதிகள் ஓராயிரம்...

குழப்பங்கள் திணிக்கப்பட்டு, மேலும், மேலும் சுயநலமே மேலோங்க, நாக்கும் நயமுடன் உயர்ந்தவன், தாழ்ந்தவனென்று நவிலும் இவ்வுலகில் உயர்ந்தவனோ, தாழ்ந்தவனோ கூடுவிட்டுயிர் போனால் பிணமென்றே நவில்வீர் ஞாநிலத்தாரே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (10-Jul-17, 9:34 am)
பார்வை : 511

மேலே