மலரே

++++++
மலரே மலரே மனதின் நிழலே
புலரும் பொழுதின் பணியே – நிலவின்
ஒளியே உயிரின் உயிரே பசுமை
வெளியே உனது வனப்பு.

அழகைப் புகழும் அதிசய மாந்தர்
பழகும் முனைப்பில் பலதும் – வழங்கி
வலையை விரிக்க விழுந்து விடாதே
நிலையை மறக்காதே நீ.

முற்களைக் காம்பில் முளைவிடச் செய்திடும்
கற்பனைப் பூவெனக் கண்மலர்ந்து – அற்புத
வாசனை வீசு வளைகரத்தை தற்காப்பில்
நீசரை தாக்க நிமிர்த்து

ஒப்பனை ஓவியம் உன்னிடம் வந்தொரு
கப்பலைக் காட்டிடும் கண்முன்னே – தப்பதை
ஏற்று தலைவிதி என்றே தவிப்பதை
மாற்று தனித்துவ மாகு.

விற்பனை பண்டம் வனிதைய ரென்று
கற்பனை செய்பவர் காலடி – நிற்பதை
விட்டுயர் நோக்கில் விதியினை மாற்றிட
சட்டென் ரெழுநீ சிலிர்த்து .

வெட்டும் அரிவாள் விழிகளில் நீசரை
சுட்டுப் பொசுக்கு. சுடருனை – தொட்டுத்
தழுவி துயரினில் தோய்த்திடு முன்னே
நழுவிடு வாய்மல ரே!
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (20-Jul-17, 2:20 am)
Tanglish : malare
பார்வை : 114

மேலே