உன்னை நீயே தூண்டிக்கொள்

உன்னை நீயே தூண்டிக்கொள்
------உலவும் தடைகளைத் தாண்டிச்செல்
இன்னும் இன்னும் வேண்டுமென
------இமயம் தீண்ட எண்ணம்கொள்

உள்ளத் துணிவைத் துணையாக்கு
------உறக்கத்தை உனது பகையாக்கு
கள்ளச் சிந்தை நீவிடுத்து
------கடமைக்குப் பொழுதை இரையாக்கு

ஊக்கம் பெருக்கி உன்பணியில்
------உள்ளம் ஒன்றிச் செய்தாலே
தேக்கம் உன்னைத் தீண்டிடுமா
------தேர்ச்சியும் விலகி போய்விடுமா

சாதி சமயங்கள் மறந்தாலே
------சகலருக்கம் நீ உறவாவாய்
மோதி சண்டைகள் செய்தாலே
------மோசம் போவாய் மறவாதே

உன்னை நம்பி கரம்பற்றி
------உள்ளம் தந்த மங்கையரை
கன்னா பின்னா எனப்பேசி
------கலங்கச் செய்வது அழகாமோ?

உந்தன் வாழ்க்கை ஒளிவீச
------உறவை இழந்து வந்தவளை
சந்தனம் போன்று மணம்வீசி
------சந்தோஷம் தந்தே காத்திடுவாய்

வெள்ளம் போன்று வேர்வைத்துளி
------வழிந்திட நித்தம் உழைத்தாலே
பள்ளம் எல்லாம் மேடாகும்
------பாறையும் பொடிந்து தூளாகும்

நெஞ்சில் நஞ்சை சேர்க்காமல்
------நித்தம் அன்பாய் வாழ்ந்தாலே
விஞ்சும் வாழ்க்கை வேறுண்டோ?
------விண்ணைத் தீண்டும் புகழன்றோ?

எழுதிய விதியும் உழைப்பாலே
------எரிந்து சாம்பல் ஆகாதோ?
புழுதிகள் படிந்த உன்வாழ்வில்
------புத்தொளி நித்தம் வீசாதோ?

பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ,பாஸ்கரன் (23-Jul-17, 7:43 am)
பார்வை : 67

மேலே