நூல்பல கல்

படிப்பாய் படிப்பாய் பலநூலை - தினம்
துடிப்பாய் இருப்பாய் அலைபோல
கொடுத்தார் வள்ளுவர் திருக்குறளை - அதை
படித்தால் பறக்கும் மனக்கவலை

வாசிக்கும் பழக்கம் இருந்தாலே - உன்
வாழ்வில் துயரங்கள் சேராதே!
நேசிக்கும் எண்ணம் இருந்தாலே - உன்
நெஞ்சில் பகையும் வளராதே!

அறிவினை செதுக்கு அன்றாடம் - அதன்
ஆற்றல் தந்திடும் வெகுமானம்
வறுமையை விரட்டும் வெகுதூரம் - அது
மறுமையின் வாழ்வுக்கும் வழிகோலும்

அறிஞர்கள் எழுதிய நூல்களையே - நீ
ஆழ்ந்தே படித்திடு நாள்தோறும்
அறிவுக்கு விதைகள் அதிலுண்டு - மன
ஆழத்தில் நடுஅதை குணம்சேரும்

ஆயிரம் செல்வங்கள் இருந்தாலும் - அது
அறிவுக்கு நிகராய் நின்றிடுமோ?
பொன்னும் பொருளும் நவமணியும் - இந்த
பூமியில் அறிவினை வென்றிடுமோ?

அறிவால் உயர்ந்த மனிதர்களால் - இந்த
அகிலமும் இயங்குது இன்றுவரை
அரைக்கா சற்ற ஏழையையும் - அது
ஆல்போல் வளர்க்கும் என்றுஉரை

செல்லும் இடமெங்கும் உடன்வந்து - தினம்
வெல்லும் ஆற்றலை அதுவழங்கும்
நல்லோர் நிறைந்த அவைதனிலே - உன்
நாமத்தை பலபேர் வாய்முழங்கும்

திறமையின் மறுபெயர் அறிவன்றோ? - அது
திகட்டா மகிழ்ச்சியின் வேரன்றோ?
நெஞ்சை நிமிர்த்தி நடக்கயிலே - பொட்டு
நெற்றியில் வைத்திடும் ஊரன்றோ?

கல்வியில் கரையைக் கண்டவரை - இந்த
காசினி இதுவரைக் கண்டதில்லை
கல்வியின் கடவுள் சரஸ்வதியும் - தினம்
கற்பதை இன்னும் நிறுத்தவில்லை

எனவே, மனிதா எப்போதும் - உன்
கனவை நனவாய் மாற்றிடவே!
நூல்கள் பலவும் கற்றிடுவாய்! - இந்த
நூதன வாழ்வில் வென்றிடுவாய்!

பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (26-Jul-17, 3:07 am)
பார்வை : 130

மேலே