கண்கள் மட்டுமே பேசி கொண்டன ஏனோ- காதல் கதை - பாகம் 2

எழுந்து போன மினு சர சர என பல்லை துலக்கி சாப்பாடு மேசைக்கு வந்திருந்தாள். அம்மா அவள் வரும் நேரம் சரியாக சுட்டு வட்ட தோசையை சூடாக நீட்டினாள். அந்த வாழை இலை வடிவ அழகிய தட்டில் தோசை நிலவாய் அவளை பார்த்து அழகாக சிரித்தது.

அந்த தட்டு ஒருநாள் ஊரில் போட்ட பொருட்காட்சியில் அப்பா வாங்கி வந்தது.வாழை இலையில் சாப்பிட்ட பாதி திருப்தியைத் தருவதால் என்னவோ அந்த தட்டு பிடித்துப் போய் அது மினுவின் தட்டு என்று ஆனது.அது அவளுக்கு மட்டும் என்று சொல்லிக்கொள்வாள். போட்டிக்கு தங்கை ஜெனி திராட்சை கொத்துகள் வரைந்த தட்டை அவளது என சொல்லி கொள்வாள் . பசி அதிக நேரம் அவளை ரசிக்க விடாமல் சாப்பிட சொன்னதால் தோசையைப் பிய்த்து தின்னத் தொடங்கினாள்.

அவள் அண்ணன் கெவின் அடித்து கொள்ளும் இரு தங்கைகளுயும் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு நான் எந்த தட்டில் கொடுத்தாலும் சாப்பிடுவேன் . எதுவென்றாலும் சாப்பிடுவேன் . ஏன்னா நான் கெவின் சன் ஆப் மேரியம்மாள் என்று எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி ஜெயம் ரவி பாணியில் சொல்லிவிட்டு நகர்ந்தான். கிண்டலாக சொன்னாலும் நிஜம் அது தான்.

அவன் அம்மா பிள்ளை. அம்மாவை அக்கறையாக கவனிக்கும் மகனாக மட்டுமல்லால் அப்பா என்றாவது எதாவது கோபத்தில் அம்மாவை திட்டி விட்டாலும் வக்காலத்து வாங்க முதலில் நிற்பவன் இவன் தான். தங்கைகள் அண்ணன் முகத்தை மவுனமாக பார்ப்பதை தவிர வேற எதுவும் இதுவரை பேசியதில்லை.

தோசையை விழுங்கி கொண்ட மினுவின் வயிறு மெல்ல பிசையத் தொடங்கியது.காரணம் அவள் இப்போது வரும் தேர்வு முடிவுகள் எப்படி இருக்கும் என நினைக்க தொடங்கியிருந்தாள். எப்போதெல்லாம் அதை பற்றி நினைப்பு வருகிறதோ அப்போதெல்லாம் இது தான் நடக்கிறது. அவள் வயிற்றுக்குள் நுழைந்து யாரோ தோசை கல்லில் தோசையை பிரட்டி போட்ட மாதிரி ஒரு உணர்வு அவளுக்குள் வந்து ஒட்டிக் கொள்ளும்.

இப்படியான தருணங்களில் எல்லாம் சடாரென அடுப்பங்கரைக்கு சென்று இரண்டு மடக்கு தண்ணியை குடித்து தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தன் வீட்டு தோட்டத்து பக்கம் சென்று விடுவாள். அந்த தென்னை மரமும் மாமரமும் தான் நீண்ட நாள் தோழர்கள். அவர்களோடு என்றும் போல இன்றும் பேசத் தொடங்கினாள்.

நினைத்தது போல டாக்டர் ஆகிடுவேனா. அதற்குரிய கட் ஆப் மதிப்பெண் வந்து விடுமா.. எத்தனை மதிப்பெண் வரும் முக்கியமான பாடங்களில் என மண்டையை குழப்பும் கேள்விகள் எல்லாவற்றையும் அந்த மரங்களிடமே கேட்பாள். அவை ஒன்றும் பதில் சொல்லா விட்டாலும் மெல்ல இலையை ஆட்டி அவள் மனதை மெல்ல வருடும். அந்த தென்றல் சுகத்தில் தன் குழப்பங்களை கரைத்து விட்டு மெல்ல வீட்டிற்குள் வருவாள். கார்பன் டி ஆக்ஸிடே உறிஞ்சி ஆக்ஸிஜன் திருப்பி தருவது மட்டுமல்ல இந்த மரங்கள். விவரம் அறிந்த வயதில் இருந்தே அவள் கவலையை எடுத்துக் கொண்டு அவளுக்கு புன்னகையை பரிசளித்து அனுப்பும் அன்பு கூட்டம் அவை.

விவரம் அறியா வயதில் அதே மரங்களை டீச்சர் விளையாட்டு விளையாடுவதாய் நினைத்து கொண்டு தினம் அடிப்பதே அவள் வேலை கம்பு கொண்டு அடிப்பதும் அதற்கு பாடம் சொல்லி கொடுப்பதுமாய் கழிந்த காலங்களின் இனிமை இன்று நினைத்தால் சிரிக்க தோன்றும். விவரம் வந்த பின் ஒருவேளை மரத்திற்கு வலித்திருக்குமோ என நினைத்திருக்கிறாள். ஆனால் அந்த கேள்விக்கு அவளுக்கு என்னும் பதில் தெரியவில்லை. இலைகளின் நடனத்தை ரசிக்கும் பருவம் வந்த பின்பே அவள் அந்த விளையாட்டை நிறுத்த தொடங்கியிருந்தாள்.

மாம்பழ சீசன் என்பதால் மாம்பழம் பழுத்து கிடக்கவே அது அவள் கண்ணை உறுத்த தொடங்கியது. மெல்ல களையை தேட சென்றாள். கூடவே சாக்கு கொண்டு பிடிக்க தங்கையை துணைக்கு அழைத்தாள். தொலைக்காட்சியில் மூழ்கி இருந்த தங்கை அலுத்துக்கொன்டே "விளம்பரம் போடட்டும் பொறுடி" என்று சத்தம் கொடுத்தாள். "அதற்குள் நான் பறித்தால் எனக்கு மட்டும் தான் பார்த்துக்கோ. அப்பறம் எனக்கு கொஞ்சம் என்று வர கூடாது " எண்டு பதில் கொடுத்தாள் மினு. அப்படி சொன்னாலும் அடிபடாமல் கனியை பறிக்க தங்கைக்காக காத்திருந்தாள் அம்மரத்தில் சாய்ந்தபடி.

தேர்வு முடிவுகள் வர என்னும் இரண்டு வாரங்கள் இருக்க அவளுக்கு மட்டும் அது இரண்டு மணி நேரம் போல திகிலைக் கிளப்பி கொண்டிருந்தது ....

காதல் புத்தகத்தின் பக்கங்கள் விரியும் ..
கனவுகளின் முகவரி அதில் நுழையும் ...

எழுதியவர் : யாழினி valan (5-Aug-17, 10:07 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 326

மேலே