சுதந்திரம்
கடை-இந்தியா
கிடைக்கும் பெருள்-சுதந்திரம்
இங்கு கூறுகட்டி விற்கப்படும்
இருளில் கிடைத்த சுதந்திரம்!
இருள் உள்ளத்தோர்க்கு முதல் உரிமை!
பொருள் உள்ளோர்க்குத் தனி உரிமை!
ஊழல் செய்து ஊர் கெடுத்தால்
கறுப்புப்பூனை படையுடன்
களிப்பு மிக்க சுதந்திரம்!
ஈவ்டீசிங் எனும் பெயரில்
ஈவிரக்கமின்றி பெண்ணினத்தை
மரிக்கும் வரை வதைப்பினும்
ஈனமான இளைஞர்க்கெல்லாம்
இங்கு ஈயப்படும் சுதந்திரம்!
வங்கி கொள்ளை அடிப்பினும்
நங்கை நகை பறிப்பினும்
பங்கம் நேரா வகையிலே
அங்கம் நோகா சுதந்திரம்!
கள்ளவோட்டு போடினும்
கள்ளநோட்டு அடிப்பினும்
கிடைக்கும் சுதந்திரத்துடன்
காவல்துணை இலவசம்!
லஞ்சத்தால் கொழுப்போருக்கும்
வஞ்சத்தால் பிழைப்போருக்கும்
கெஞ்சலின்றி கிடைத்திடும்
நெஞ்சம் மகிழ சுதந்திரம்!
நல்லோரை ஏய்த்து வாழும்
தீயோர்க்கு உகந்த இடம்!
உடன் வாரீர் இவ்விடம்!