வந்து சேர்ந்திடு அன்பே

உன் விழிகளை சந்தித்த பின்
என் விழிகள் எனக்கு முன்
தேட தொடங்குகிறது உன்னை

தேரடி திருவிழா யானையாய்
ஊர்வலம் வந்தவன் நான்
உரியடியில் உடைந்த பானையாய்
துண்டுதுண்டாக போனேன்

நேரிடையாக உன்னிடம் பேசாமல்
தள்ளியே ஏனோ நான் நிற்கிறேன்
பேரலையாக எனக்குள் எழும்பும் தயக்கத்தின்
அலைகளை என்ன தான் செய்வேன்

எதிரி போல நீ என்னை பார்க்கும்
ஒற்றை பார்வையில் கரைந்து போகிறேன்
உதிரி பாகங்களாய் நீ கடந்தபின்
இந்த சாலையில் விழுந்து கிடக்கிறேன்

என் மனம் அறியாமல்
உதறி தான் போகிறாய் நீ
உன் மனம் புரியாமல்
சிதறி தான் போகிறேன் நான்

வலி தாங்கிடாமல்
கதறி அழும் குழந்தையாகிறேன்
வலி துடைத்திட
பதறி நீவருவாயென பார்த்திருக்கிறேன்

சிதறிய பாகங்களை சேர்க்க
நீ வருவாயா
சிறு புன்னைகை முகமதில்
நீ தருவாயா

சிந்தும் புன்னைகள் போதுமே
முந்தும் கண்ணீர் பின்போகுமே

கொதிகலன் கொண்ட அனல்மின் நிலையமாய்
உருமாறி என்னில் எரிகிறேன்
விதியின் சேட்டைகள் தரும் காயங்கள் புரியாமல்
குழம்பி எனக்குள் தவிக்கிறேன்

மதி சொல்லும் பதிலால்
நான் கோபம் கொள்கிறேன்
சதியா இது வயசின் விளையாட்டா
எனக்குள் மருகி மாய்கிறேன்

மறக்க சொன்ன மதியிடம்
இறக்க சொல்லு செய்கிறேன் என்கிறேன்
துறக்க சொன்ன விதியிடம்
மறக்க முடியவில்லை என போர் செய்கிறேன்

கற்க கசடற உன் விழிகளை கற்றபின்
நிற்க மட்டும் தோன்றுகிறது
உனக்காக உனக்காக
ஒற்றை கால் கொக்காக

உன்னிலிருந்து வெளியே வர வழி தெரிந்தும்
வர விரும்பாமல் நான்
என் கேள்விகளுக்கு விடை தெரிந்தும்
உன் நினைவுகளுக்கு விடை கொடுக்க
முடியாமல் நான் ..

முற்றும் துறந்த முனியாய்
உனக்காக நான் காத்திருக்க
உடனே வராவிட்டாலும் கூட
சற்று யோசித்தேனும்
வந்து சேர்ந்திடு அன்பே ....

உற்று பார்த்தால்
என் விழிகளை உற்று பார்த்தால்
தெரியும் உனக்கும்
உனக்காக காத்திருக்கும்
என் கனவுகளும்
என் வலிகளும் ...


அன்புடன்
யாழினி வளன்
தவறு கண்டால் தவறாமல் சுட்டி காட்டுங்கள் ... என் எழுத்துக்களை இன்னும் வளர்க்க ...
நேரமிருந்தால் என் google blog பக்கம் செல்லுங்கள்.... என் எழுத்துக்களோடு இன்னும் பேச ....

எழுதியவர் : யாழினி வளன் (17-Aug-17, 2:06 am)
பார்வை : 301

மேலே