அவளும் நானும்

அது ஒரு நிலவில்லா இரவு....
உறவுகள் எல்லாம் ஊருக்குப் போன
அவள் வீட்டு பின் வாசலில்
அமர்ந்திருந்த என் மடியில்
ஒரு பவுர்ணமி ...!

அந்த சிவப்பு சுடிதார் அழகூட்டியதுஅவளுக்கு
துப்பட்டாவை தொலைத்து விட்டாள் போலும்

அவள் தான் மெளனம் கலைத்தாள்
" என் மீது அவ்வளவு விருப்பமா....?"
"நிறைய "... எனச் சொல்லி
நெற்றியில் முத்தமிட்டேன் ,

"நான் உன்னை விரும்புகிறேன்" என காதோரம் இதழ் பதித்து
கவ்வி கடித்துச் சொன்னாள் ஆங்கிலத்தில்
அதையே நானும் கூற
அன்பை பொழிந்தாள் இதழோடு இதழாக ....

"எவருக்கும் தெரியாமல்
எத்தனை நாள் இன்னும்
இருளில் இரவில்
யாருக்கும் தெரியாமல்
மறைந்து சந்திப்பது ....?"

"என்னடி இது .. .?
சங்க காலத்து தலைவி மாதிரி
புலம்புகிறாய் ...."

" எந்தக் காலமாயிருந்தாலென்ன
எங்கள் ஏக்கம் என்றும் ஒன்றுதான் ...."

"கவலை எதற்கு கட்டாயம் மாலையிடுவேன் பெற்றவர் உத்தரவோடு ... "

"பயமாயிருக்கு ... "
"எதற்கு ..?"
"பிரித்து விடுவார்களோ . .?"
"நல்லது தானே ...."
"என்ன ... "

"அப்பொழுது தானே
நல்ல பெண் கிடைக்கும் எனக்கு ... "

உடனடியாய் அந்த பவுர்ணமி அமாவாசையானது ,
என் கைகளுக்குள் பிண்ணி ... என்னை
பிணைந்திருந்தவள்
விடுபட்டு வெளியேறி
வீட்டுக்குள்ளோடினாள்
தொடர்ந்து நான் .

படுக்கையறை பஞ்சு மெத்தை கட்டிலுக்கு - அவள்
படுத்திருந்த போது தான்
பாவங்கள் அத்தனையும் கழியப்பட்டிருக்க வேண்டும் ...!

நீண்ட பெருத்த
கருநாகம் போல பின்னல் தெரிய
முதுகெனக்குக்காட்டி முகம்மூடியிருந்தவளின்
கரம் விலக்கிப் பார்த்தேன்
கண்களில்நீர்வீழ்ச்சி ...

"விளையாடினேன் ... "
" என் வாழ்க்கையில் ... "
"பொய்யடி அது ... "
"அன்பாயிருந்தது தானே"
அந்த கள்ள மற்ற பெண்மை கலங்கியது ,
கட்டிலேறி கட்டியணைத்தபடி முகந்திருப்பி

"பார் என்னை _ இது
பாவம் செய்யும் முகமா ...?
உன்னை விட ஒருத்தி
எப்படி கிடைப்பாள் எனக்கு ,
நீ ... என்னுயிர் ...
நீங்கினால் பிணமாகிப் போவேனே தவிர - எவள்
பின்னாலும் போக மாட்டேன் ... நம்பு ..."

"சிரி"
"சிரித்ததும் சின்னக்குழி விழும் உன் கன்னத்தை ....
எட்டாவது அதிசயமாய் அறிவிக்கப் போகிறது ஐ .நா ...சிரி ... "

கண்களை தொடைக்காமலே சிரித்தாள்
வைகை நதி
இராமநாதபுரம் பெரிய கண்மாய் நோக்கி வருவது போல
அழகாயிருந்தது அவள் முகம்
அந்தப் பகுதி விவசாயி மாதிரி
மகிழ்ந்திருந்தது என் மனம்.

எழுதியவர் : பூப்பாண்டியன் (18-Aug-17, 1:37 pm)
சேர்த்தது : பூப்பாண்டியன்
Tanglish : avalum naanum
பார்வை : 994

மேலே