காதல் பழக வா-31

காதல் பழக வா-31

கரம்பிடித்து உன்னை
என் வீட்டிற்கு அழைத்துச்செல்ல
படையெடுக்க போகிறேன்...
பயந்துவிடாதே கண்மணியே
படைத்தலைவனாய் நானிருக்கேன்
விரைவில் வந்து உன்னை
மணமுடிப்பேன்...


"ஹலோ, ராதி மது இருக்காளா, அவகிட்ட கொஞ்சம் பேசணும், பக்கத்துல இருந்தா பேச சொல்லுமா"

"அம்மா, மது பக்கத்துல தான் இருக்கா, இதோ போன் குடுக்கறேன்மா, பேசுங்க..மதி உன் அம்மா தான் லைன்ல இருக்காங்க பேசு"

"அம்மா, எப்படி இருக்கீங்க, சொல்லுங்கம்மா, அதிசயமா அக்கா போனுக்கு கூப்பிட்டு இருக்கீங்க ?"

அடுத்த ஐந்து நிமிடமும் மதுவின் அம்மாவே பேச மதுவின் முகம் வாடி மௌனமாக போனை வைத்தாள்...

"என்ன மது, அம்மா என்ன சொன்னாங்க, எதுக்கு இப்படி முகத்தை சோகமா வச்சிருக்க?"

"அம்மா உடனே என்ன கிளம்பி வர சொன்னாங்க அக்கா"

"இதுக்கு தான் இத்தனை சோகமா"

"இது மட்டும் இருந்தா பரவாலேயே"

"என்ன மதி சொல்ற, எதுக்கு இப்போ அவசரமா உன்ன வரசொன்னாங்க, என் ரிஷப்ஷன் வரைக்குமே இங்க இருக்கறதா தானே சொல்லிட்டு வந்திருக்க, அங்க எதாவது பிரச்சனையா"

"ஆமாக்கா, பிரச்சனை தான், ஆனா அங்க இல்ல, இனி எனக்கு தான்"

"என்னடி சொல்ற, ஏதாவது புரியற மாதிரி சொல்லு"

ராதி அதட்டியதும் மது முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்..

"என்ன மது, எதுக்கு இப்படி அழற , ஏதேதோ சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியலடி, என்னனு சொல்லிட்டு அப்புறம் அழு... என்ன டென்சன் பண்ணாத மது, என்ன ஆச்சி"

"அக்கா, எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்களாம்"

இந்த விஷயம் ராதிக்கே கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது, இப்போது தான் ராம்க்கும், மதுவுக்கும் பேசிமுடிக்கலாம் என கனவுக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தவளுக்கு இந்த செய்தி அதிர்ச்சியாகவே இருந்தது, தனக்கே இப்படி என்றால் மதுவின் நிலையை நினைத்தால் இன்னும் பாவமாக தான் தோன்றியது, இருந்தாலும் இப்போது மதுவை சமாதானம் செய்தாக வேண்டி இருப்பதால் தன் அதிர்ச்சியை காட்டிக்கொள்ளாமல் பேச ஆரம்பித்தாள்...

"அடியே மக்கு, மாப்பிள்ளை தானே பார்த்துருக்காங்க, அதுக்கு ஏன் இப்படி அழுமூஞ்சியாட்டம் அழுதுவடியற, அம்மாகிட்ட நான் பேசறேன், உன் மாமாவை விட்டு பேசவைக்கிறேன், அவங்க எல்லாரும் ஓகே சொல்லுவாங்க, நீ அழறத நிறுத்து முதல்ல"

"அக்கா அப்படி இல்ல, ஏற்கனவே என்னை என் சொந்தக்காரங்க பொண்ணு கேட்டுட்டே இருக்கறதா அம்மா சொன்னாங்க, ஆனா நான் படிக்கணும்னு சொல்லிட்டு இருந்தேன், அவங்க நல்ல இடம், சரினு சொல்லு, பேசிமுடிச்சிரலாம், மாப்பிளை வீட்ல அவசரப்படறாங்கனு போன வாரம் கூட சொன்னாங்க, நான் பதில் சொல்லாமலே இருந்துட்டேன்,மாமா என்ன வீட்டுக்கு கூப்பிட்டப்போ தான் நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கலைனா எங்கயும் போக வேண்டாம்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க, மாமாகிட்டயும் இத சொல்லி திருப்ப அனுப்பறதா மிரட்டினப்போ தான் எங்க என்ன விட்டுட்டே போய்டுவாரோன்னு பயத்துல வீட்ல சம்மதம் சொல்லிட்டு வந்துட்டேன், அவங்களும் இப்போ பேசி முடிச்சிட்டாங்களாம்...இப்போதைக்கு நிச்சயம் பண்ணிரலாம்னு அவசரப்படுத்தறாங்களாம், அதான் வீட்ல என்ன வர சொல்ராங்க...எல்லாம் என் தப்பு தான்க்கா, எங்க உன்னை பார்க்கமுடியாம போய்டுமோனு அவசரத்துல சம்மதிச்சிட்டேன், இப்போ இவ்ளோ தூரம் விஷயம் வந்தப்புறம் என்னனு சொல்லி வேண்டாங்கறது, ஆனா ஒன்னுக்கா இத்தனை வருஷத்துல ராமை பார்த்தப்புறம் தான் என் மனசுல இப்படிலாம் தோணிருக்கு, என்னால இன்னொருத்தரை அவர் இடத்துல வச்சி பார்க்கவே முடியாதுக்கா"என்று ராதியை கட்டிக்கொண்டு அழுத மதுவை எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் ராதி கலங்கி நிற்க பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டதும் இருவரும் ஸ்தம்பித்து நின்றனர்...

"என் மருமகளை எப்படிம்மா இன்னொரு வீட்டுக்கு தாரை வார்த்து குடுக்க விட்ருவேன், இந்த அத்தையை மறந்துட்டு அழுதுட்டு இருக்கியேமா"

இந்த குரலுக்கு உரியவரை பார்த்ததும் மதுவின் கண்ணீர் காய்ந்து போய் கன்னத்தில் கோடாகி நின்றது...

இருவரும் அதிர்ச்சியில் அசையாமல் நிற்க ராமின் அம்மாவே மீதியையும் பேசிமுடித்தார்...

"நீயும் ராமும் நேசிக்க ஆரம்பிச்சிட்டீங்கனு எனக்கு நல்லாவே தெரியும், அத உங்க வாயால சொல்லணும்னு தான் காத்துகிட்டு இருந்தேன், இப்போ நீ சொல்லலானாலும் உன் கண்ணீரே நீ எந்த அளவுக்கு என் பையனை விரும்பறேனு சொல்லிடுச்சி, இனியும் இந்த அத்தை அமைதியா இருப்பேனா, சட்டுபுட்டுனு உன் வீட்டுக்கு போய் பேசிமுடிச்சிற மாட்டேன், இதுக்கு போய் சின்ன குழந்தை மாதிரி அழறயே, கண்ணை துடைச்சிக்கோமா, இன்னைக்கே உன் வீட்டுக்கு போவோம், ராம்க்கு உன்னை நிச்சயம் பண்ணிட்டு கையோட கூட்டிட்டு வந்துடறேன் உன்னை, நீ போய் கிளம்பு..."

"அத்தை அது வந்து"

" அதான் உன் வாயில அத்தைனு வந்துடுச்சுல்ல, இனி என்னமா, எல்லாத்தையும் இந்த அத்தை பார்த்துக்கறேன்..நீ வீட்டுக்கு போன் போட்டு உன்கூட ராதி வீட்டுல இருந்து வறோம்னு மட்டும் சொல்லு, அங்க போய் மீதியை பேசிக்கலாம்"
இப்படி ஒருவர் துணையாக இருக்கும் தைரியத்தில் ராதியும், மதுவும் தங்களின் மனப்பாரத்தை மறந்துவிட்டு அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தனர்...

மொத்த குடும்பமும் ஹாலில் கூடி நிற்க ராம், மதுவின் காதல் எல்லார் முன்னிலையிலும் அரங்கேறியது...எல்லாருக்கும் ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் சந்தோசம் தான், இருவரும் பொருத்தமான ஜோடி என்பதே அத்தனை பேரின் கருத்தும்....

அத்தனை பேர் முன்னிலையிலும் தன் காதல் பேசப்பட்ட தால் மது வெட்கத்தால் உடல் சிலிர்த்து நிற்க, ராமோ சின்னதாய் வருத்தத்தில் இருந்தான்...அவன் முகவாட்டத்தை கண்டுகொண்ட கண்ணன் ராமை விசாரிக்க ராம் சொன்ன பதிலில் அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரித்து சோகம் போன இடம் தெறியாமல் வீடே கலகலப்பானது...

"என்னடா ராம், உன் லவ் பத்தி தான் இத்தனை பேரும் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம், நீ என்னடானா, உம்முனு நிக்கறியே, ஒரு வேளை நீ மதுவை லவ் பண்ணலையோ, நாங்க தான் தப்போ நினச்சிட்டோமோ"

இந்த கேள்வியில் மது சற்று தடுமாறி தவித்து நிற்க, மதுவின் முக வாட்டத்தை உணர்ந்த ராம் பரிதவித்து பதில் சொன்னான்..

"என்னடா நீ வேற என் காதல்ல குண்டை தூக்கி போடற, மது அப்படிலாம் இல்ல, நான் உன்னை தான் லவ் பண்றேன், உன்னை மட்டுமே தான் லவ் பண்றேன், என்ன நம்பு மது"

இந்த பதிலில் மது சற்று தெம்பாகி , இத்தனை பேர் முன்னிலையில் அவன் காதலை சொன்னதால் வெட்கத்தில் கால் விரலால் தரையில் கோலம் போட இந்த அருமையான காட்சியை அத்தனை பேரும் ரசித்துக்கொண்டிருந்தனர்...

"என்ன ராம், அப்புறம் என்ன பிரச்சனை உனக்கு, நீ மதுவை தான் லவ் பண்றா, அதே மாதிரி மதுவும் உன்னை தான் லவ் பண்றா, அப்பறம் என்ன பிரச்சனை உனக்கு, எதுக்கு முகத்தை உம்முனு வச்சிட்டு இருக்க"

"உங்களுக்கு தெரியுது, ஆனா இன்னும் எங்களுக்கு தெரியலையே அதான்"

"என்னடா சொல்ற"

"நாங்க இன்னும் ப்ரொபோஸ் கூட பண்ணிக்கலடா, அதுக்குள்ளே நீங்களே ஹால்ல கூட்டம் போட்டு எங்க லவ் பத்தி பேசிட்டீங்களே, அதான்"

"இது தான் விஷயமா, அதான் இப்போ நீ ப்ரொபோஸ் பண்ணிட்டயே, உன் குறை தீர்ந்துருக்கணுமே"

"நான் சொல்லிட்டேன், ஆனா மது இன்னும் சொல்லலையே"

"இப்போ சொல்ல வச்சிட்டா போச்சி, மது நீயும் அவனை லவ் பன்றேன்னு சொல்லிடுமா'

"இல்ல நான் அப்புறமா சொல்றேனே மாமா, எனக்கு வெட்கமா இருக்கு"

"அதெல்லாம் முடியாது, நீ இப்போ சொல்லித்தான் ஆகணும், அதான் மாமா சொல்றங்கள்ல, பாவம் ராம் கூட பீல் பன்றாரு, சொல்லேன் மது" என்று ராதி சீண்டி விட, கொஞ்ச நேரம் அடம் பிடித்த மது சரி என்று தன் காதலை சொல்ல ஒத்துக்கொண்டாள்..

"என்னை தாயாக்கும் தகுதியும்
என் சேயாகும் தகுதியும்
உனக்கே உனக்கென்று
மனபுத்தகத்தில் எழுதி வைத்து
காத்திருக்கிறேன்…
நீ என்னை மணமுடிக்கும் நாளுக்காய்
எதிர்பார்த்திருக்கிறேன்...
ஐ லவ் யூ ராம்
சீக்கிரம் என் கழுத்தில் மாலையிடு " என்று மது தன் காதலை சொல்லி முடிக்க அங்கிருந்த அத்தனை பேரும் இந்த காதல் பந்தத்தில் சிலிர்த்து மது காதல் சொன்ன விதத்தில் மகிழ்ந்து கைதட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்...

மது காதல் சொன்ன விதத்தில் ராமிற்கு மது குடித்ததை போல் காதல் போதை தலைக்கேற மதுவை தனிமையில் சந்திக்க வேண்டுமென்று அவன் மனம் துடித்து கொண்டிருந்தது..

"என்னடி மது, இப்படி கூட காதலை சொல்லலாமோ, என்னவோ பால் குடிக்கற பச்சை குழந்தை மாதிரி நின்னுட்டு எப்படி கலக்கிட்ட, சூப்பர்டி."
"சரி சரி, சீக்கிரம் எல்லாரும் ரெடி ஆகுங்க, இன்னைக்கு சாயந்தரம் மது வீட்டுக்கு போய் சம்மந்தம் பேசிட்டு வந்துருவோம், மது நீயும் போய் ரெடி ஆகு"

"கண்ணா நான் மதுகிட்ட கொஞ்சம் பேசிக்கிறேண்டா"

"நோ வே..ஒழுங்கா போய் ரெடி ஆகு, அவங்க வீட்ல என்ன பேசலாம்னு யோசி, மதுகிட்ட அப்புறம் பேசிக்கலாம், சொல்றேன்ல முதல்ல கிளம்புடா"

மதுவிடம் தனியாக பேசமுடியாத வருத்தத்தில் ராம் கிளம்ப அடுத்ததடுத்த பிரச்னையை சந்திக்க தயாரானார்கள் கண்ணனும் ராதியும்...

எழுதியவர் : ராணிகோவிந் (22-Aug-17, 1:11 pm)
பார்வை : 637

மேலே