மயான மணம்

ஆண்டாண்டாய் அடுக்கடுக்காய்
மாறுது மாற்றம்..
ஆவியோடு உறவாடும்
கூட்டம் நாங்க
வாராதோ ஏற்றம்?


பக்குவமா பள்ளம்தோண்டி
சித்திரமா அலங்கரிச்சி கச்சிதமா வைக்கச்சொல்லு
வெட்டியான் வெட்டியா இருக்கப்போறானு
கூவுறீகளே!
வெட்டி வெட்டி அலுக்கும்போதும்
வியர்வைத்தண்ணி
ஒழுகும்போதும்
பக்குத்துல நின்னு பழுதுசொல்லி
பாக்குறீகளே நாங்க பாவம்'முன்னே தோனலையா?

வெரசா காத்து வீசுச்சுன்னா மேல்கூற மேகத்துக்கு சொந்தமப்பா! அட சிறுசா காத்து அடிச்சாலும் காகிதம்போல கோவணம் காத்துல பறக்குமப்பா!

நெத்தியில வச்ச காச வெட்டியாந்தான் எடுப்பானு அஞ்சுரூவா துட்ட மாத்தி ஒத்தரூவா
வைப்பீகளே,
அட நாலு நாளு போச்சுதுனா நாய்கூட தின்னாது நாறிப்போகும் பூதவுடல் நெனப்புல வச்சிக்கோக நடமாடும் ராசாக்களா!

பொத்தி வச்சி வளத்துவரும் பொக்கிஷமா கொஞ்சிவரும்
கொற வயசுப்புள்ளைக்கு
பொரையேறிப்போச்சுதுன்னா அடியே கெட்ட ஆவிப் புடிச்சிருக்கு கெளம்புடி கோவிலுக்குன்னு
குரல ஒசத்தி கூவும் சீமான்களா!
கொஞ்சம் எம்மக்களையும் நெனச்சி பாருமையா, விளையாட வீதியில்லை உறவாட யாருமில்ல வெட்டவெளிக்காட்டுக்குள்ள வெகுளியாத்தான் வாழுறோம்.. நாங்க பெத்த புள்ளைங்கள வெட்டியாத்தான் வளர்க்குறோம்..
பொணத்துக்கு வாழ்க்கையரிசி போடும் மக்காவே!
நடமாடும் எங்களுக்கும் வாயிவயிறு இருக்குறத மறந்தேதான் போனீகளா?

அரசாளும் நியாயமாரே.. கையக்காட்டி ஆசைகாட்டி போஸ்ட்டர் ஒட்டி
காசுக்கு நூறுபேரை சேத்துக்கூட்டி எங்க ஓட்டுக்களை வக்கனையா வாங்குறீகளே, நீங்களும் மறந்தேதான் போனீகளா? உங்களசொல்லி குத்தமில்ல, செத்துப்போன பொணத்தவச்சி அரசியல்பண்ணும் உங்களுக்கோ
பொணத்தோடவே வாழுற எங்க வேதனை வெளங்காதப்பா!

அறிவ வளர்த்துக்க பல ஏடுகள புரட்டுறாக
கலாச்சாரம் கத்துக்கொள்ள பல நாடுகள சுத்துறாக
சாதிய சாயம்பூசி சர்க்காருக எங்கள சாக்கடையா பாக்குறாக ...
நீதி'ன்னு இங்க ஒன்னு இல்லாம போச்சே ராசா! காத்துல பறக்குதே எங்க வாழ்க்க சிதறிப்போன தூசா?!

அம்பேத்கர் இருந்திருந்தா ஆதிக்கவானுக்கு அணைகட்டியிருப்பாரு..
தாடிவச்ச பெரியாரும் இருந்திருந்தா பெருவாரியா நம்ம துயர துடைச்சிருப்பாரு..
இப்போ எங்க குறை தீர்க்க யாருமே இல்ல ராசா! தொண்டத்தண்ணியே வத்திப்போச்சி கொஞ்சம் தண்ணிக்கொடும்மா ரோசா..

நாலுமணிக்குள்ள
மயானமே பூமணக்கனுமாம்
ஊர்த்தலைவரு உத்தரவு..
மயானத்துக்குள்ள மாயமா போகுதே
எப்போ விடியும்
நம் நீண்ட இரவு?

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (23-Aug-17, 10:31 pm)
பார்வை : 215

மேலே