நினைவுகளின் தூறல் நீ

காற்றுவெளியில் நுழைந்த
எரிநட்சத்திரம் போல
உன்
கண்களில் நுழைந்து நான்
காணாமல் போகிறேன்

காட்டில் தவறிய
கன்றுக்குட்டியைப் போல
உன்
காதலில் தொலைந்து நான்
திகைத்துத் தவிக்கிறேன்

என் கவிதைகளின் விதை
நீயாகிப் போகிறாய்
என்
கனவுகளை வரையும் தூரிகை
உன்னிடம் இருக்கிறது

என்
நிலாக்காலப் பாடல் நீ
நினைவுகளின் தூறல் நீ
நிரந்தரமாய் பூத்திருக்கும்
நேசத்தின் வாசம் நீ

உன் நெருக்க விசையில்
நான்
நிலைகுலைந்து போகிறேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்
உலைக்களத்தில் சருகாக
உயிர்பொசுங்கித் தீய்கிறேன் !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (26-Aug-17, 8:07 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 287

மேலே