சகல கலா வல்லவன் யார் – பார்வதியின் தீர்ப்பு

சகல கலை முழுதும் வல்ல பெருமாள்

சகல கலைகளிலும் வல்லவர் யார்?

முருகனே என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார் அருணகிரிநாதர்.

அளகநிரை குலையவிழி என்று தொடங்கும் பாடலில்,

“தரளமணி வடமிலகு குறவர்திரு மகள்கணவ

சகலகலை முழுதும் வல பெருமாளே”

என்று கூறுகிறார்.

ச.நாகராஜன்





பார்வதியின் தீர்ப்பு

அல்லசலடைந்த என்று தொடங்கும் பாடலில்,

“கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த

கல்விகரை கண்ட புலவோனே

கள்ளொழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று

கல்லலற வொன்றை யருள்வோனே

என்ற அற்புதமான சொற்களால் ஒரு ரகசிய வரலாற்றை அவர் விவரிக்கிறார்.

கல்–அசலம் என்றால் இமயமலை என்று பொருள். கல்லசல மங்கை இமயமலை மங்கையான பார்வதியைக் குறிக்கும்.

பார்வதி தேவியின் எல்லை மட்டும் எட்டின கல்வி விஷயம் பற்றிய சுவையான வரலாறு உண்டு.



ஒரு முறை சகல கலைகளிலும் வல்லவர் யார் என்ற கேள்வி எழுந்தது. முதலில் அனைவரும் ஔவை பிராட்டியே அனைத்தும் அறிந்தவர் என்று தீர்மானித்து அவரை அணுகி வித்யா தாம்பூலத்தை அளித்த போது அதை அவர் வாங்க மறுத்து விட்டார்.



ஐந்திர வியாகரணம் இயற்றிய இந்திரனைப் போய்ப் பாருங்கள். அவனிடம் இதை அளியுங்கள் என்றார் அவர்.



இந்திரனோ அகத்தியரே இதை வாங்குவதற்குத் தகுதியானவர் என்றான்.



அகத்தியரோ சகலகலைகளிலும் வல்ல சரஸ்வதி தேவி அல்லவா இதைப் பெறுவதற்குத் தகுதி உள்ளவள். அங்கு செல்லுங்கள் என்றார்.

சரஸ்வதி தேவியோ, அன்னை பார்வதி தேவி இருக்க இதை நான் வாங்குவது முறையல்ல. நான் கற்றது கைம்மண் அளவே என்றாள்.

அனைவரும் அன்னை பார்வதியை அணுகி விஷயத்தைக் கூறினர்.



அன்னையோ புன்முறுவல் பூத்து இதை வாங்கும் தகுதி படைத்தவன் என் செல்வன் குமரனே என்று அருளினார். பார்வதியின் இந்தத் தீர்ப்பால் அனைவரும் மகிழ்ந்தனர்.

அனைவரும் முருகப் பெருமானிடம் சென்று தாம்பூலத்தை அளிக்க அவன் புன்சிரிப்புடன், “இந்த வரிசையை யாம் ஏற்றுக் கொள்கிறோம்” என்று அருளினார்.



சகலகலா வல்லவன் யார் என்பது இப்போது நன்கு நிரூபணமானது.

கல்லசல மங்கை – இமவான் மகளான பார்வதி

எல்லையில் – வரைக்கும்

விரிந்த – மேலே சென்ற பெரும் விவாதத்தில்

கல்வி கரை கண்ட புலவோன் – அனைத்துக் கலைகளிலும் வல்ல புலவோன் என்ற தகுதி பெற்ற ஒரே ஒருவன் முருகனே என்பது உலகினரால் அறியப்பட்டது!

இந்த அற்புதமான சுவையான சரிதத்தையே அருணகிரிநாதர் அழகுற திருப்புகழ் பாடலில் சுருக்கமாகத் தந்து விட்டார்.



வள்ளிபடர்கின்ற வள்ளிமலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே என்று முடியும் இந்தத் திருப்புகழை அருணகிரிநாதர் வள்ளிமலை சென்ற போது அருளியிருக்கிறார்.

சகலகலா வல்லவனான குமரனைக் கும்பிடுவோம். அனைத்திலும் வல்லவனாகி ஆனந்த வாழ்க்கை பெறுவோம்!

எழுதியவர் : (28-Aug-17, 3:19 pm)
பார்வை : 484

மேலே