ஒருபக்க காதல்கதை பாகம்-33

அன்புள்ள டைரி,


நான் என்ன சொல்லப்போகிறேன் என உனக்குத் தெரியும்..சில மாதங்களாக உன் பக்கங்களிலும்..என் மனதிலும் நிறைந்த எண்ணங்கள் அனைத்தும் அவனை சுற்றியே வட்டமடிக்கின்றன..அவன் யார் ?..ஏன் என்னை மனதிற்குள் பின்தொடர்கிறான்..அவனுக்கு ஒரு விபத்தென்றதும் மனம் துடித்தது...அது எந்த உயிருக்கு நேர்ந்தாலும் துடித்திருக்கும்..ஆனால் என்னை அறியாமல் ஏதோ ஒன்று எனக்குள் நேர்ந்ததே டைரி..என் மூளைக்கு விளங்கவில்லை..அவனை எந்த சக்தி கொண்டு தூக்கி வந்தேன் என்றும்..ஆம்புலன்ஸில் என் மடியில் அவன் தலை இருந்தது..இவை அனைத்தும் எனக்கு அப்போது உரைக்கவில்லை...இதுகூட அந்த நிமிடங்களில் ஏற்பட்ட பதட்டமென ஏற்றுக்கொள்ளலாம்..அவன் விபத்திற்கு முன் பேசியது அனைத்தும் என்னுள் கோவத்தை தூண்டியது..நான் எதை அவனிடமிருந்து மறைக்க பாடாய் படுகிறேனோ அதையே துளைக்கிறான்..ஒருவேளை அவனிடம் அதனை கூறினால் என்ன?...

வேண்டாம்..அவன் ஒரு ஆண்..ஆண் பாலினம்..அந்த உடலுக்கு என்னுடைய கதையும்..விளக்கங்களும்..காரணங்களும் விகாரமாய் மட்டுமே எடுத்துக்கொள்ளும் ..இந்த ஆண்களை ஒருபோதும் நான் நம்ப மாட்டேன்..ஆனால் அவன் சற்று மனித குணங்கள் கொண்டவனாய் தெரிகிறான் ..அடுத்த உயிர் பற்றி அவனிடம் கொஞ்சம் மழை நாளில் மரத்தில் ஒட்டும் ஈரம் போல்..அவன் மனதில் ஈரம் எஞ்சியுள்ளது..ஆனால் சற்று வெயில் அடித்தால் காய்ந்து எரிக்கத் தயார் ஆகிவிடுவான்..அதுவே பயமும்..டைரி என்னுடைய மனம் முன்புபோல் அமைதி இல்லை..அவனை இழப்பதா இல்லை என்னை இழப்பதா ..அல்லது அவனுக்காக என்னை இழப்பதா..குழப்பிக் குழப்பி சரியாய் தூங்க முடியவில்லை..எதாவது உடல் வேலை செய்யவேண்டும்..தோட்ட வேலை..சாக்கடை அள்ளுவது போல் ..அப்போதுதான் அடித்துப் போட்டாற்போல் தூக்கம் வரும்

அவன் உடல் என் வயதின் காரணமாய் ஈர்ப்பை பெற்றாலும்...மனதில்..உனக்குத் தெரியும் என்னால் அவனை நெருங்க முடியாது ..நெருங்கவும் கூடாது..எல்லோரும்போல் வாழும் குடுப்பனை எனக்கு வாய்க்கவில்லை ..முடிந்தால் அடுத்த ஜென்மத்தில்..வேண்டாம்..அடுத்த ஜென்மமும் வேண்டாம்..அதில் எனக்கு நம்பிக்கை இல்லை..அவன்மேல் எனக்கு இந்த எண்ணங்கள் அவ்வப்போது எழுவதுண்டு ..ஆனால் இவை இவ்வயதின் காரணமாய் தவிர்த்துவிடுவேன்..ஆனால் இன்று நடந்தது..இது என்னை மீறியது..என் கண்களில் அவனுக்காக வந்தக் கண்ணீர்...என்னை மன்னித்துவிடு டைரி..நான் அவன்மீது கொண்டிருக்கும் அன்போ..அல்லது அவன் படும் பாடை பார்த்து உள்ளெழும்பிய வலியோ ..அல்லது யாருமே இல்லாமல் தனியாய் அவனுக்காக கிடக்கும் அவன் அம்மாவின் நிலையோ..எது என் ஆழ்மன ஈரத்தை தூண்டியதென தெரியவில்லை.எதுவாய் இருந்தாலும் அவை அவனுக்காக அரும்பிய கண்ணீர் துளிகள் தான்..என்னை மன்னித்துவிடு டைரி.. இந்தத் தவறை ஒருபோதும் நான் அறிந்து செய்யவில்லை

இனி அவனை ஒருபோதும் பார்க்கப் போவதில்லை..முதலில் என் கர்பப் பையயை தானமளித்துவிட வேண்டும்..எனக்கு இது வேண்டாம்..இது இல்லாமல் போனால் தான் நானாய் அவனை நெருங்கினாலும் ..இந்த உலகம் என்னை அவனிடம் நெருங்க விடாது..ஆம்..அவன் மயக்கம் கலைவதுற்குள்..அவன் உடல்நிலை சீராவதற்குள் ..இதை செய்துமுடித்தாக வேண்டும்..அவன் எழுந்தால் நிச்சயம் இதற்கு வழிவிட மாட்டான்..என்னுடைய ஓரே பலவீனத்தை.ஏன்..பெண்களின் பலவீனமென்றும் கூறலாம்..நூற்றாண்டுகளாய் பெண்களை அடிமை படுத்திய கருவியை..கிழித்தெறிந்து .. தானமளித்துவிட்டு உன்னை சந்திக்கிறேன் டைரி

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (2-Sep-17, 10:32 am)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 200

மேலே