விரக்தியின் விளிம்பில்

நேற்று நீ கொடுத்த
ஒருநாள் திடீர் விருந்தில்
அடங்கித்தான் போயிருக்குமென
நினைக்கிறேன்
ஊடகங்களின் பசி...!

ஊடக மேடைகளில்
வியாபித்துக்கிடக்கும்
விவாத பஞ்சாயத்துகளில்
இனி பஞ்சமொன்றும் இருக்காது...
உன்னைப் பற்றியல்லாத
வெட்டிக் கோள்பேச்சுகளுக்கு....!

கனவுகளை காற்றில் கரைத்துவிட்டு
காற்றுகூட வேண்டாமென
சரிந்துகிடக்கும் உன்
தியாகச் சடலத்தின் மீது
"அரசாங்க வேலை"
"ஒரு சில இலட்சங்கள்" என்ற
அறிவிப்பு மண்கள் தூவி
மூடிவிடுவர் ஜனநாயகவாதிகள்...!

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றுதான்....
அடியில் அடிபட்டால்
முடியில் கவசமிடுவர்...
அரியலூரில் நீ செத்தால்
மெரினாவில் கவசமிடுவர்....!

"ஏழைகளுக்கு எதற்கு
ஏம்பிஷன்"...?....
எத்தனைமுறை உன்
காதுகளை பதம்பார்த்திருக்குமோ...?
இந்த கேலிப்பேச்சுகள்..
கலைக்கமுடியாத உன்
இப்போதைய மிக
அடர்த்தியான மௌனவிரதத்திற்கு முன்புவரை...!

எங்களை நம்பியா உன்
உயிர்துறந்தாய் சகோதரி...?
உண்மையில் தாழ்த்தப்பட்டவள் நீயல்ல...
உன் தியாகச் சாவையும்
ஒரு செய்தியாய் பார்த்துவிட்டு
சற்று சத்தமாக
"உச்சும்" கொட்டிவிட்டு
மறுநாள் வழக்கமாக
மற்ற வேலையைப் பார்க்கும்
நாங்கள்தான் உண்மையில்
"தாழ்த்தப்பட்டவர்கள்"....!

"ஸ்டெதஸ்கோப்" விரும்பிய அவள்
கழுத்திற்கு
தூக்குக் கயிறே பரிசு...!
எனத் தவணைமுறையில்
தீர்ப்பு வழங்கிய
நீதிதேவதையே...!
இனியேனும் திறந்துபார்
உன் கண்களை...
எண்ணற்ற அனிதாக்கள்
விரக்தியின் விளிம்பில்...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (2-Sep-17, 10:46 pm)
பார்வை : 99

மேலே