அப்பா
காயப்பட்ட மண்வெட்டியும் அந்த இரும்பு சைக்கிளும் முள்ளுப்போட்ட கறுப்பு செருப்பும் அப்பாவின் ஞாபகங்களை அடையாளப்படுத்தி விடும். வலிகளிம் வேதனைகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டு வருந்தும் நாட்களும் முதுகு வலியால் அவஸ்தைப்படும் நேரங்களும் கண்ணை கலங்க வைத்திருக்கின்றன. பல தடவைகள் அப்பாவை பார்த்து கஸ்டமாக இருக்கும்..நான் என்னதான் செய்ய முடியும். பள்ளிப் பருவம் படிக்கத்தானே வேணும்.நான் உயிரோடு இருக்கும் வரை உங்களுக்கு எந்த கஸ்டமும் வராது என்று அடிக்கடி சொல்லுவார். காலமும் கடந்து செல்ல பதினாறு வயது தன் இருப்பிடத்தை உறுதிப்படுத்த முற்படும் காலம். மனங்களில் மாயை கொட்டிக் கிடக்கிறது. வீட்டு நிலமைகள் கொஞ்சமாக விலக எத்தனிக்கின்றது.
பொழுது புலர்வதற்கு முன்பே விழித்துக்கொள்ள பழக்கப்படாத என் விழிகள் அன்று மட்டும் சில மணி நேரங்கள் முன்பு தாண்டி விழித்துக் கொண்டது.மறுமடியும் நேரத்தை அந்த குப்பி விளக்கின் ஒளியில் பார்க்கும் போதுதான் தெரியும் மூன்று மணியாகிக்கொண்டிருக்கிறது. விளக்கை அணைத்துவிட்டு முன் வாசல் நிலவின் வெளிச்சத்தில் அண்ணாந்து பார்த்தவாறு அப்படியே உறங்கி விட்டேன். அன்று வழக்கத்திற்கு மாறாக வீட்டினுள் இருந்து நாய் என்னை முட்டிக்கொண்டு வெளியே வர விழித்துக்கொண்டேன். எனக்கு முன்பே அப்பா விழித்துக்கொள்ளும் பழக்கம் அவருடன் கூடவே பிறந்திருக்கிறது.ஆனால் இன்று வேளைக்கு விழித்துக் கொண்டது எனக்கு கொஞ்சம் ஆச்சரியம் தான். சில வேளை எங்க வீட்டில் காலைச் சாப்பாடு பெரும்பாலும் மதியச் சாப்பாடாத்தான் இருக்கும். இது ஒன்றும் புதியவையில்லை. அன்று பழஞ்சோற்றுக் கஞ்சிதான் அதை குடித்துவிட்டு நானும் அப்பாவும் குசினியை விட்டு வெளியே வந்தோம். அப்பா வேலைக்கு புறப்பட்டார். நானும் மச்சானும் கதைச்சுக்கொண்டு பாடசாலைக்கு போறம். சைக்கில்ல ஒருவன் நிறைய பிரம்பு வெட்டிக்கொண்டு பள்ளிக்கூடம் போறான். அப்போதுதான் விளங்கிட்டு நான் வீட்டு வேலை செய்யல எண்டு. சமாளிப்பம் எண்டு நினைச்சுக்கொண்டு போறன்.ஆனால் அந்த பிரம்பை நினைக்கும் போதுதான் மனம் திக் திக் எண்டது. அதுவும் ஆங்கிலம் எப்பவுமே அதற்கு போக வேண்டும் படிக்க வேண்டும் என மனம் உறுத்தியது கிடையாது. அதன் வலிமையும் புரியாத நேரம். ஆனால் நாங்க எவ்வளவு வெறுத்தமோ...அவ்வளவு நேசிக்கிறவங்களும் இருந்தாங்க. எங்க வகுப்பிலயே முதல்ல பிடிக்காதவங்கையெண்டா அவங்கதான்........ அன்று மட்டும் நிருவும் நிஸாந்தியும் எனக்கு ஆங்கில பாடத்திற்கான விடைகளை காட்டித்தந்தார்கள். அவர்கள் மீது எனக்கொரு ஈர்ப்பு எற்பட்டது. நிஸாந்தியும் கொஞ்சம் பழக ஆரம்பித்தாள். என்னுடைய எண்ணத்தில் பல மாற்றங்களை என்னால் உணர முடிந்தது.ஆனால் என் வீட்டுத்தேவைகள் மிகத் தூரத்தில் என் அப்பாவின் வேர்வைகள் நனைத்துக்கொண்டிருந்தன.நாட்கள் நகர மாற்றங்கள் புதுசு புதுசாக முளைவிடத்துவங்கின.அப்பா வேறொருவருடன் கதைத்துக்கொண்டிருப்பது படலையைத் தாண்டி கேட்டது. என்ர பிள்ளைகளுக்கு படிக்கிற வயசு அவங்க படிக்கணும். அதுதானே முதல்ல தேவ. அவங்க படிப்பாங்க.என்ர நிலம அவங்களுக்கு தெரியும். என்று பக்கத்து வீட்டுக்காரருடன் கதைப்பது என் மனதில் கொஞ்சம் பயத்தை உண்டு பண்ணியது. சரி இண்டையில இருந்து படிப்பில் கவனம் செலுத்தணும்.அப்பா சொன்ன மாதிரி அவர் நிலமையும் எனக்கு தெரியும். என்று நினைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் புறப்பட்டன். அந்த குச்சி ஒழுங்கையை தாண்டி பெரிய வீதிக்கு வந்த பிறகு சற்று நிமிர்ந்து நடக்க துவங்கினன் . யாரோ எனக்கு பின்னால் வருகிற மாதிரி ஒரு உணர்வுடன் திரும்பிய போது நிஸாந்தி தனக்குள் சிரித்தவாறு சைக்கிளை ஓட்டி வந்தாள். நான் சட்டேன நகர்ந்து வழி விட்டேன். என்ன சேர் யோசிட்டு வாறிங்க. என்று கேட்டாள். அப்படி ஒண்ணுமில்ல சும்மாதான் என்றேன். ஓ... அதுதான் சைக்கிள் வாறதும் தெரியாம வந்திங்களாக்கும் என்றாள். எனக்கு பேச இடமில்லாமல் ஒரு புன்னகையுடன் முடித்துக்கொண்டன். ஆனால் அவள் கொஞ்சம் வசதியானவள்.இருந்தும் அவள் ஏன் என்னுடன் பழகிறாள் என்று தெரியவில்லை. யாருடனும் இப்படி கதைத்ததை பார்த்ததில்லை. நிஸா இப்போ முன்ன மாதிரி இல்லையடி என அவளது தோழிள் கதைத்ததை கேட்டிருக்கிறன். அப்பாக்கு முன்பு மாதிரி வேலைகளின் விளைவுகள் அவர் உடம்பை சீண்டிப்பாக்கத்தொடங்கின. கடவுள் இப்படியும் சோதிப்பாரோ..என்று நான் வருந்தியதும் உண்டு.கடவுளே...அப்பாவுக்கு எந்த வருத்தமும் வரக்கூடாது என ஒவ்வொரு முறையும் வேண்டிக் கொண்டே இருப்பன். எனக்கு வீட்டில் இருப்பவங்களை விட அப்பாவில்தான் அதிக பாசம். என் கண்களில் இருந்து அதிக தடவை கண்ணீர் வந்ததென்றால் அது அப்பாவுக்காகத்தான் இருக்கும்.
நிஸாவின் நெருக்கங்கள் என்னை அவளுடன் பழகத்தூண்டியது. வருட விளையாட்டுப் போட்டி இன்னும் சந்திப்புக்கள் அதிகமாயின. இருந்தாலும் என்னுள்ளே ஒருவித பயம் இருந்துகொண்டுதான் இருந்தது. நான் காதலிக்கிறேனா...அல்லது காதலிக்கப்படுகிறேனா...என்று தெரியவில்லை. காதல் என்றால் என்ன என்று தெரியாத வயதில் எப்படி காதலிப்பது... அப்பாவும் பல வேலைகளை தொடர்ச்சியாக செய்ததால் காயப்பட்ட காலில் எற்பட்ட காயங்கள் மாறுவதாக இல்லை. சித்தாலேப தைலங்கள் இரவு நேரங்களில் நலம் விசாரித்தன. வீட்டு நிலமைகள் வீட்டை அடைந்த பின்தான் இப்போது எழத்துவங்கியது. ருசியான உணவை ருசிபாக்க விருப்பம் இல்லை. பள்ளிக்கூடம் அருகில் இருப்பதால் நடந்துதான் செல்வோம். அதுவும் ஒருவகையில் நன்மையாகத்தான் இருந்தது. கடவுள் எல்லா செல்வங்களையும் எல்லாருக்கும் கொடுப்பதில்லை. படிப்பதற்கு கொஞ்சம் அறிவைக் கொடுத்திருந்தான். அதுவும் இழக்கப்படுவதுபோல் இருந்தது. முதலாம் தவணைப் பரீட்சைகள் ஆரம்பமாகியது. வழமை போல பரீட்சை என்றால் நம்மவர்கள் சமயக்குரவர்களாகிவிடுவர். நெற்றியில் பட்டையும் சந்தனமும் காதில் பூவும் அப்பிடியே ஒளிர்ந்து கொண்டிருப்பர். நானும் இதற்கு விதிவிலக்கல்ல. எனக்கு போட்டியாக நிஸாவும், நிஸாவுக்கு போட்டியாக நானும் இருந்தாலும் ஆங்கில பாடத்தால்தான் அவளுக்கு அடுத்ததாக வரவேண்டியிருந்தது. ஆனால் இந்த தடவை பல படிகள் தாண்டி பின்னுக்கு தள்ளப்பட்டிருந்தேன். ஆனால் அவளோ அதே நிலையில் இருந்தாள். காரணம் காட்டி யாரையும் குற்றம் சொல்ல மனம் இடம் தரவில்லை. வீடு போகும் வரையும் எந்த சங்கடமும் இல்லாது இருந்த மனம் வீடு வந்தவுடன் பரீட்சை புள்ளிகள் கண்முன்னே ஓடத்துவங்கியது. சரி எப்படியோ பேசி சமாளிப்பம்... என்ற வைராக்கியத்துடன் கால்கள் எத்தனிக்கின்றன. ஆனால் வீட்டில் யாரும் இல்லை. அதுவும் கொஞ்சம் திருப்தியளித்தது. வீட்டை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் நேரத்தை பார்த்து விட்டு நாற்காலியில் உட்கார்ந்த வேளை நண்பனின் குரல் வாசல் தாண்டி வருகிறது.... டேய் நான் பாக்கிற பிள்ளை இப்ப அதால போறாள்டா..... வாவன்டா கொஞ்சம் போய் பார்ப்பம். எனக்கும் போக மனம் சம்மதித்தது. எனென்றால் நிஸாவின் வீடும் அப்பாதையை அப்படியே இருக்கிறது. பசி வயிற்றை பதம் பார்த்தாலும் நண்பனுடன் செல்லும் அவா அதை மறைத்து விட்டது. காணும் ஆசையில் என் மனம். தேடும் நோக்கில் அவன் கண்கள்.ஆனால் இரண்டும் அங்கு நிறைவேறியதாக இல்லை. சைக்கிள் வீட்டை நோக்கி திரும்பியது. ஆனால் வீட்டில் இப்போதும் யாரும் இல்லை. பக்கத்து வீட்டை விசாரித்த போதுதான் அப்பாவின் காலில் கல் விழுந்திட்டாம் ஆஸ்பத்திரி கூட்டிக் கொண்டு போய்ட்டினம் என்று தெரிய வந்தது எனக்கு மனம் திக் என்றது. எப்படியோ ஆஸ்பத்திரி போக வேணும்.. ஆறு மணியாச்சு கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் போகணும் பக்கத்து வீட்டில சைக்கிள் வேண்டி கொண்டு புறப்பட்டு விட்டேன். அங்கு போனால் காலில் பெரிய கட்டுப்போட்டு கட்டிலில் படுத்திருக்கிறார். கட்டுப்போட்ட காயத்தின் மேலே ரத்த கழிவுகள் படர்ந்திருக்கிறது. அப்பா நல்ல உறக்கத்தில் இருப்பதை எழுப்ப தோன்ற வில்லை. மூன்று மாதத்திற்கு நடக்க முடியாத நிலை ஆயிற்று. காலில் பலமாக கல் விழுந்ததால் நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டருக்கிறது என டொக்டர் வந்து சொன்னார். அப்பாவும் காலை நிமிர்ந்து பார்த்தவிட்டு அப்படியே படுத்து விட்டார். அந்த பார்வை எனக்குள் ஓராயிரம் அர்த்தங்களை கொடுத்தது. வீட்டில் கவலைப்படவும் பரிதாபப்படவும் மட்டுமே சொந்தங்கள் வந்து சென்றன. அன்று என்னோடு படிக்கிறவங்களும் வந்தாங்க... என்னால் நம்பவே முடியவில்லை. அவள் நிஸாவும் வந்திருந்தாள். முதன் முறையாக வீட்டுக்கு வருபவர்களை வரவேற்கும் மனநிலையில் நான் இல்லை.. ஆனாலும் மனத்தில் புதுவித மாற்றத்தை தந்தது அன்று...... தொடரும். அந்த கணம் என்னால் புது விதமாக அவர்களை வரவேற்க முடியவில்லை. மனத்தில் உள்ள காயத்தை என் மாறுபட்ட புன்னகை அவர்களுக்கு அடையாளம் காட்டிவிட்டது. அதே புன்னகை எனக்கும் அவர்களிடம் இருந்து வந்தது. இப்போ.... எப்படி இருக்கு அப்பாக்கு.... ஒரு வித பரிவோடு கேட்டாள். நிஷா மூன்று மாதத்திற்கு பிறகு தான் தெரியும் என்று டாக்டர் சொல்லி இருக்கிறார் நானும் அதற்கான பதிலை கூறிவிட்டேன். சில மணிநேரம் அங்கு மௌனங்களால்தான் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தன. நேரமும் ஐந்தை தாண்டி ஆறாகிக்கொண்டிருந்தது. அவர்கள் செல்வதற்கு தயாராகி விட்டார்கள். மறுநாள் காலையில் வழமை போல் பள்ளிக்கூடம் செல்வதற்கு மனம் இடம் தரவில்லை. இருந்தாலும் போவதற்கு அரை மனம் சம்மதித்தது. ஒரு தரம் அவளும் என் நினைவில் வந்து போனாள். நிஷா முதல் தடவை தான் வீட்டை வந்தவள். அன்று அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. அவள் என்னுடன் பழகும் விதங்கள் விலகிச் செல்வதை எனக்கு காட்டிக் கொண்டிருந்தது. அவள் அந்த கடையையும் தாண்டி வேகமாக வந்துகொண்டிருந்தாள். என்னவாக இருக்கும்...என்ற ஆவலில் கூப்பிட்டு விட்டேன். நிஸா.... கொஞ்சம் நில்லுங்க. திரும்பி பார்த்தவள் சற்று வேகத்தை குறைத்து என்ன வேணும் என்று கேட்டாள். சற்றும் எதிர்பாராத இந்த பதில் அவள் என்னுடன் பேச விரும்பும் மனநிலையில் இல்லை என்பதை உணர்ந்து கொண்டன். ஏன் இப்போ முன்பு போல கதைக்கிறதில்ல. கண்டாலும் காணாத மாதிரி போறிங்க. சிரித்தாலும் சிரிக்கிறதில்ல... அதற்கு அவள் ஒன்றுமில்லை நான் எப்பவும் ஒரே மாதிரித்தான் என்ற வார்த்தையுடன் போய்விட்டாள். என்னால் அவள் போவதைப் மட்டும் தான் பார்க்க முடிந்தது. அன்றிலிருந்து அவள் கொஞ்சம் கொஞ்சமாக கதைப்பதை நிறுத்தி கொண்டாள். வீட்டில் போகப்போக பணத்தின் அருமை தலைகாட்ட முற்பட்டது. தீடிரென வேலைக்கு போவதென்றால் எப்படி... யார் வேலை கொடுப்பார்கள். என்ன வேலை தெரியும் என்ற பல கேள்விகள் மாறி மாறி விடைகள் தேட முற்பட்டன. அப்பாவோட வேலைக்கு போற முருகண்ணை அன்று அப்பாவ பார்க்க வந்திருந்தார். அப்பாவுக்கும் ஏலாது. அதனால் அவருடன் வேலைக்கு போவதற்கு சரி என்று சொல்லி விட்டேன். அடுத்த நாள் பாடசாலையும் இல்லை. அதனால் வேலைக்கு போவதற்கு தடையேதும் இருக்கவில்லை. அடுத்த நாள் காலையில் முருகண்ணை வந்து தம்பி போவோமா..? என்றார் சரி அண்ணை. என்ன வேலைக்கு போறம்.என்று கேட்டன். அதற்கு அவர் ஒரு கிணற்றை சுற்றி மதில் கட்ட வேணும் என்றார். ஓ... சரி அண்ணை மீண்டும் யாருக்கு கட்ட வேணும் என்று கேட்ட தோணியது. ஆனாலும் நான் கேட்கவில்லை. அவரும் சொல்ல வில்லை. சற்று தூரம் சென்று அந்த புளிய மரத்தை தாண்டி மதில் கட்டிய இரும்பு கேற்றில் சைக்கிள் நின்றது. எனக்கு ஒரே அதிர்ச்சியாகி விட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. நெஞ்சு படபடக்க தொடங்கியது. தம்பி இங்கதான் வேலை என்றார். எனக்கு தூக்கி வாரி போட்டது. அது அந்த வீடு நிஸா வீடு. அதுவரைக்கும் அவள் வீட்டுக்கு சென்றதே இல்லை. அவர்களுக்கு என்னை தெரியாது. ஆனால் அவர்களை எனக்கு தெரியும். நான் இங்கே வந்தது வேலையின் நிமித்தம். ஏன் பயப்பட வேணும் என்ற வைராக்கியத்தை நானே எற்படுத்தி கொண்டேன். என் கையில் இப்போ புத்தகமோ.. கொப்பியோ.. பேனையோ... இல்லை. இருப்பது சவலும் மண்வெட்டியும் தான் இப்போது நான் நினைப்பதெல்லாம் அவள் கண்ணில் தென்படக்கூடாது என்பதுதான். அது எப்படி சாத்தியமாகும்.முடியுமா... இல்லை. காண்பது உறுதி. கேற்று திறப்பது கேட்கிறது. நிஸாதான் வருகிறாள். கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தேன். அவள் அவளேதான். பார்வை சிறிய நேரம் அவளை நோக்கி தான் இருந்தது. ஆனாலும் வெட்கம் முகத்தை மூப்படைய வைத்து விட்டது. ஏன் அவள் கதைக்காமல் விலகிச் செல்கிறாள் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக விளங்கத்தொடங்கியது.வீட்டுக்கு வந்த நாளில் இருந்து தான் அவள் பேசுவதை நிறுத்தி கொண்டவள். இருந்தும் அவளின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு அதை பெரிதாக எடுத்துக் கொள்ள எண்ணவில்லை. ஆனால் அவள், அவள் குடும்பம் பணத்தின் மீது அதீத ஈர்ப்பு கொண்டவர்கள் என்பதை அன்றுதான் உணர முடிந்தது. எனென்றால் அவர்களை விட நாங்கள் வசதி கொண்டவர்கள் இல்லை. மரணம் கூட பணம் உள்ளவன். பணம் இல்லாதவன் என்றா வருகிறது. என் மனமும் அவ்வாறு தான் தடுமாறிக் கொண்டது. அந்த ஒருநாள் வேலை செய்த அனுபவம் எனக்கு ஏற்பட்டதை விட அப்பாவின் மூலம் அறிந்திருக்கிறேன். ஒவ்வொரு அங்கங்களும் வலியையும் ஏமாற்றங்களையும் தான் தந்திருந்தன. எனக்கு என்ன பொறுப்பு இருக்கிறது என்பதையும் யாரையும் தாராதரம் தெரியாமல் சொந்தங்கொள்ளக்கூடாது என்பதையம் அந்த காலங்கள் உணர்த்தி விட்டன. அப்பாவின் கால்களும் இப்போது ஓய்ந்து விட்டன. அவரின் கால்களுக்கு பதிலாக என் கால்களை கொஞ்சம் கொஞ்சமாக எத்தனிக்க முயற்சிக்கிறேன்.
இது என்னுடைய சிறுகதைக்கான முதல் முயற்சி . சிறுகதை வரம்பிற்குள் உட்பட்டதா... உட்படவில்லையா என்று தெரியவில்லை.