மாற்றுதற்கே ஒன்றாவோம்

மாற்றுதற்கே ஒன்றாவோம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

சேர்த்துவைத்த கனவொன்று தொலைந்த தம்மா
செவ்வானம் விடியாமல் கருத்த தம்மா
பார்த்துபார்த்துப் படித்தகல்வி பயனே இன்றிப்
பாடையிலே ஏறியின்று புதைந்த தம்மா !
கார்முகில்தான் மழையாகப் பெய்யு மென்று
காத்திருக்கக் காற்றுவந்து கலைத்த போல
ஊர்மெச்ச மதிப்பெண்கள் பெற்றி ருந்தும்
உதவாமல் நீட்டுயிரைக் குடித்த தம்மா !

வீட்டிற்குள் அடைத்திருந்த பெண்கள் மெல்ல
வீதியிலே தலைதன்னைக் காட்டு தற்கே
நாட்டினிலே சிறிதளவு சுதந்தி ரந்தான்
நல்கியதால் பள்ளிமுகம் கண்டார் பல்லோர் !
போட்டியிட்டு நகரமொடு கிராமப் பெண்கள்
பொறுப்புடனே படித்தவர்க்கே இணையாய் நின்றார்
வேட்டுவைத்துத் தகர்த்ததுபோல் நுழைவுத் தேர்வால்
வேரறுத்தார் கனவுகண்ட மருத்து வத்தை !

தாழ்ந்தசாதி எனஒடுக்கப் பட்டோர் நன்றாய்
தழைப்பதற்கே ஒதுக்கீடு கொண்டு வந்தார்
பாழ்செய்யும் நுழைவுதேர்வை நீக்கி விட்டுப்
பள்ளிதரும் மதிப்பெண்ணே போது மென்றார் !
வீழ்த்திட்டார் நீட்டென்னும் நுழைவுத் தேர்வால்
விளைவதற்குக் காத்திருந்த வித்தை யின்று
வாழ்வதற்கோ உதவுமென்னும் கல்வி ; சாவை
வழங்குவதோ ! ஒன்றாவோம் மாற்று தற்கே !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (13-Sep-17, 7:17 pm)
பார்வை : 543

மேலே