அவளுக்கும் சில கனவுகள்
அவளது பாதங்கள் தரையில் பதிய மறுத்தன. மகிழ்ச்சியில் உள்ளம் துள்ளியது. குதிக்க வேண்டும் போல. ஆட வேண்டும் போல ஏதேதோ எண்ணங்கள் ஊடாடின. காட்டாற்று வெள்ளம் போல் பொங்கிய மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள்.
அந்தக் கடிதத்தை மீண்டுமொரு முறை வாசித்தாள்.
"அவர் வந்த உடனே இதைக் காட்ட வேண்டும்."
நினைத்து முடிவதற்குள் அவளது தொலைபேசி சிணுங்கியது. திரையைக் கண்டவளது கண்கள் அகல விரிந்தன.
"ஹலோ... "
அவளது குரலோசை கேட்டது தான் தாமதும் எதிர் முனையில் பாய்ந்து விழுந்தான் ரோஷன்.
"வேலைல ஈக்கிற நேரம் கோல் பண்ண வாணம் என்டு சொல்லி இருக்கன் தானே.. எத்துன மிஸ் கோல் அப்டி என்ன தல போகிற வேல?"
கண்ணீர் கண்களை நிறைக்க வார்த்தைகள் தொண்டையை அடைத்தன.
"அது வந்து ... ஒரு முக்கிய.. மான விஷயம்.. "
" எல்லா முக்கியமான விஷயத்தையும் வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்.. இப்ப எனக்கு வேல இரிக்கி.. சும்மா கோல் பண்ணி டிஸ்டர்ப் பண்ண வாணம்.. பை.."
பதிலை எதிர்பாராது தொலைபேசியை துண்டித்தான்.
கண்களில் கண்ணீர் துளிர்த்து ஸஹீனாவுக்கு . உடனே,
"பாவம் அவர் ஏதாவது முக்கிய வேலை ல இருந்திருப்பார். நான் தான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்." என்று தன்னைத் தானே கடிந்து கொண்டாள்.
இரவு உணவு வழமை போல் ரோஷனின் விருப்பப்படியே தயாரிக்கப் பட்டிருந்தது. உணவின் பின்னர் தனக்கு வந்திருந்த கடிதத்தை நீட்டினாள் ஸஹீனா.
"என்ன இது?"
"படிச்சுப் பாருங்களே...''
அது ஒரு அழைப்புக் கடிதம். சர்வதேச இலக்கிய விழாவுக்கானது. சிறந்த எழுத்தாளர்களை கெளரவிப்பதற்காகவும் இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதாகவும் அமையும் இவ் விழா ஸஹீனாவின் கனவாக இருந்தது. அது நனவாகப் போகும் மகிழ்ச்சியில் அவனைப் பார்த்தால் ஸஹீனா.
அவனது முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.
தயக்கத்துடன் வார்த்தைகளை கோர்த்தாள் ஸஹீனா.
"இந்த ஃபங்ஷனுக்கு என்னோட நீங்களும் வாறிங்க தானே...?"
"என்ன ஸஹீனா ஒங்களுக்கு பைத்தியமா? எனக்கு எவ்வளவு வேல? அத உட்டுட்டு இந்த கண்ட கண்ட ஃபங்ஷனுக்கெல்லாம் வர ஏலா." கூறி முடித்தான் ரோஷன்.
"என்ன இப்படி சொல்றீங்க? இது கண்ட கண்ட ஃபங்ஷன் இல்ல. எவ்வளவு பெரிய விழா தெரியுமா? பெரிய பெரிய ரைட்டர்ஸ் எல்லாம் வருவாங்க... " தன் பக்க நியாயத்தை நிரூபிக்கத் துடித்தாள் ஸஹீனா.
"பெரிய ரைட்டர்ஸா? எங்க இருக்காங்க அவங்கெல்லாம் ? இப்ப மூலைக்கு மூலை எழுத்தாளர் எண்டு சொல்லிட்டு திரியிறாங்க... பேஸ்புக்க ஓபன் பண்னி பாக்கணுமே.. கவிதையும் கட்டுரையும் எழுதிக் கிழிக்கிறானுகள்.. இவங்க எழுதல்ல எண்டு யார் அழுதாங்க? சும்மா பொய்க்கி நீங்க போறண்டா போங்கோ.. எனய கூப்புட வாணம் .." முடிவாய்ச் சொன்னான் ரோஷன் .
அப்படியே இடித்து போய் விட்டாள் ஸஹீனா.
விழாவுக்கான நாளும் நெருங்கிக் கொண்டிருந்தன. ரோஷனின் எண்ணத்தில் மாற்றமில்லை. செய்வது அறியாது யோசித்தாள் ஸஹீனா.
அன்று மாலையில் பரபரப்பாக எதையோ தேடிக் கொண்டிருந்தான் ரோஷன்.
" என்ன தேடுறீங்க?" வினவினாள் மனைவி .
" கம்பனி பைல் ஒன்டு வெச்சிருந்தேன். அத தான் தேடிட்டு இருக்கேன்..." என்றான் அவன்.
"ப்ளு கலர் பைலா?"
"யெஸ்.. யெஸ்"
"நான் தான் எடுத்து வெச்சேன். நீங்க டைனிங் டேபல்லயே அத விட்டுட்டு போய்ட்டீங்க.." என்றவாறு அந்த நீல நிற ஃபைல் கவரை எடுத்துக் கொடுத்தாள் ஸஹீனா.
"இந்த பைல்ல என்ன இருக் தெரியுமா?"
விளையாட்டாய் வினவினான் ரோஷன்.
"ஹ்ம்... தெரியும் " தலை சரித்து கண் சிமிட்டினாள் மனைவி ஸஹீனா.
"எப்டி? என்ன இருக்கு ? சொல்லுங்க பாப்போம்." என்றான் அவன்.
"உங்கட கம்பனியில புதிதாக உருவாக்கப் போற கார் சம்பந்தமான ப்ரொஜக்ட். இந்த ப்ரொஜக்ட உங்க கம்பனில எக்ஸெப்ட் பண்ணிட்டாங்க எண்டால் சீப் மெக்கானிக்கா இருக்கிற நீங்க பெரிய போஸ்ட்க்கு போகலாம். கிட்டத்தட்ட மனேஜர் லெவல்க்கு. இது உங்க திறமைக்கு விட்டிருக்கிற சவால்.. " கூறிக் கொண்டே போனாள் ஸஹீனா.
"ஓ.. ஹ் மை கோட் ... இதெல்லாம் எப்படி உனக்கு ...." பேச்சு வராது திக்குமுக்காடிப் போனான் ரோஷன்.
"நான் உங்க ப்ரொஜெக்ட படிச்சு பார்த்தேன். உங்க மெக்கானிக் கோட் வேர்ட் எல்லாம் புரியல.. சும்மா இங்க்லிஷ்ல இருந்த விஷயங்கள மட்டும் பார்த்தேன். கண்டிப்பா உங்களோட இந்த புரொஜக்ட் பெஸ்ட்டா வரும். குட் லக் . " மதிமுகம் மலர வாழ்த்தினாள் ஸஹீனா.
அன்று இரவு ரோஷனால் உறங்க முடியவில்லை. ஸஹீனாவைப் பார்த்தான். அவள் குழந்தையைப் போல் உறங்கிக் கொண்டிருந்தாள். ஒரு நொடி அவனுக்கே அவனை நினைத்து வெறுப்பாயிருந்தது. உள்ளத்தை ஒரு நெருஞ்சி முள் தைத்தது போல் வலித்தது.
அவன் உள்ளம் கேள்வி கேட்டது. உறக்கம் பிடிக்காமல் எழுந்து நடந்தான். ஸஹீனாவின் புத்தக அலுமாரி கண்ணில் பட்டது. திறந்து பார்த்தான். நிறைய புத்தகங்கள். எல்லாம் அவள் திருமணத்திற்கு முன்பு வாங்கியவை. சில நோட்டுப் புத்தகங்கள். ஸஹீனா எழுதிய பதிக்கப்படாத புத்தங்கங்கள் அவை. கூடவே ஒரு பை நிறைய வாசகர் கடிதங்கள்.... அவற்றில் ஒரிரண்டை வாசித்தவன் உரைந்து போனான். ஸஹீனாவின் எழுத்துக்கள் வாசகர் மனதை இவ்வளவு ஈர்க்குமா ? என்று யோசித்தான்.
அலுமாரியின் ஒரு புறத்தில் ஸஹீனாவால் எழுதி வெளியிடப்பட்ட சில நூல்கள்.. ஒன்றைக் கையில் எடுத்தவன் வாசிக்க ஆரம்பித்தான். சில நிமிடங்களில் தன்னையே மறந்தான். அந்த எழுத்துக்கள் அவனை ஈர்த்தெடுத்த விதம் அவனுக்கே ஆச்சரியமாய் இருந்தது.
"ச்சே... ஸஹி என்னை பத்தி எவ்வளவு தெரிஞ்சு வெச்சிருக்கா? ஆனா நான் அவளுக்கு என்ன பிடிக்கும் எண்டு கூடத் தெரியாம இவ்வளவு நாள் இருந்திருக்கேன். கல்யாணம் முடிச்சி ரெண்டு வருஷத்துக்கும் அவள் எனக்கு எந்தக் குறையையும் வெச்சதில்லை.. பட்.. நான்..." அவன் மனசாட்சி கேள்வி கேட்டது.
"ஸஹீ .. ஸஹீ ... " மாலை வெகு சீக்கிரமாகவே வீடு வந்த ரோஷன் மனைவியை அழைத்தான். கனவனின் குரல் கேட்டு ஓடி வந்தாள் ஸஹீனா .
"நீ இன்னம் ரெடி ஆகல்லயா?.."
எனக் கேட்டான் ரோஷன்.
"எங்க போக ..?" வினாத் தொடுத்தாள் ஸஹீனா .
"மறந்துட்டியா? சரி சரி ரெடி ஆகு. அதோட இதயும் போட்டுக்கோ" என்றவன் ஒரு பெட்டியை நீட்டினான்.
அதைத் திறந்தாள் ஸஹீனா, உள்ளே இரண்டு தங்க வளையல்கள் கண் சிமிட்டின.
"எதுக்கு இதெல்லாம்.."
"பெரிய பெரிய ரைட்டர்ஸ் வார ஃபங்ஷன்ல எண்ட வைஃப் ரைட்டர் ஸஹீனா வெறும் கையோட இருந்தா நல்லாவா இருக்கும்..? சரி சரி அவசரமா ரெடி ஆகுங்க மேடம். டைம் சரி" என்று கூறி முடித்த கனவனின் முகத்தை மறைத்தது ஸஹீனாவின் ஆனந்தக் கண்ணீர்.
நுஸ்ரா அமீன்