பைசாசம்

அவளுக்கு பேய் பிடித்துவிட்டதென
சாமியாடி சொன்னான்
விரட்டுவதற்கு திருநீற்றை
முகத்தில் அடித்து
மேனியில்
வேப்பிலையால் அடிக்க ஆரம்பித்து
முடிவில் சவுக்கால்
சவட்டி எடுத்தான்
பிசாசு பிடித்திருப்பதாக
சொல்லப்பட்டவள் தன்
சுயநினைவு இழந்து
தரையில் வீழ்ந்தாள்
சாமியாடி அவளை
தெளியவைத்து அடிக்கும்
முஸ்தீபுகளில் ஈடுபட்டான்
எதுவுமே சாத்தியப்படாமல் போகவே
வேறு வழியில்லாமல்
தெய்வத்திடம் உத்தரவு கேட்டான்
கடவுளின் கட்டளை
இன்னும் கொடூரமானதாக இருந்தது
முள்கம்பிகளால் அவள் உடலை
சுற்றிக் கட்டினான்
அவள் உடம்பிலிருந்து வழிந்த
உதிரத்தின் வாடையில்
மரணத்தின் சாயல்
மெல்ல மெல்லத் தெரிந்தது
சாமியாடி இன்னும்
உக்கிரம் கொண்டு
ஆட ஆரம்பித்தான்
ஊர்சனம் ஒன்றும்
செய்யாமல்
வேடிக்கைப் பார்த்தபடி
கையைக் கட்டிக் கொண்டு நின்றது
அவளுக்கு விடியலில் விடிவு
பிறக்காதா என
இளகிய மனம் கொண்டவர்கள்
பிரார்த்தித்துக் கொண்டனர்
இவை எல்லாவற்றையும்
காணச்சகிக்காமல்
கருவறையில்
கையறு நிலையில்
கடவுள் அமர்ந்து கொண்டிருந்தார்.

எழுதியவர் : ப.மதியழகன் (24-Jul-11, 5:51 pm)
சேர்த்தது : ப.மதியழகன்
பார்வை : 390

மேலே