மழை நீர் போல

மழை நீர் போல..!
================

ஞாலத்தே பெறுஞானமும் சிந்திக்கும் திறனும்..
..........தானாகவந்து உன்னிடத்தில் சேர்ந்திடாது தம்பி.!
காலத்தே பெய்யும் மழைநீர் போல..யெக்
..........கலையுமெதுவும் இயல்பாய் நம்மிடத்தே வாராது.!
காலமாற்ற மென்பதெல்லாமே நம்கையில் தான்..
..........கனவுகள் நனவாவதும் நம்செய்கை யினால்தான்.!
பலமான சிந்தனையும் எழுத்தும் பாருலகிலுன்..
..........பிறந்தஊர் பெருமை பாடவும் கைகொடுக்கும்.!

கொஞ்சம் மழைநீர் பூமியில் விழுந்தாலேபோதும்..
..........நஞ்சைபுஞ்சை நிலமெலாம் வளம் கொழிக்கும்.!
பஞ்சம் பட்டினியால் பரிதவிப்போர் ஆருமிலை..
..........நான்கு திங்கள் மழைநீரின் கொடையருளாலே.!
அஞ்சிட வேண்டா ஆருமிங்கே..எங்களூர்..
..........அயலாருக் கடைக்கலம் கொடுப்பதற் கஞ்சாது.!
பஞ்சுக்கிடங்கும் பருத்தி அரிசி ஆலையோடு..
..........பஞ்ச அருவியின் பெருமைபுகழை நீரறிவீர்.!

குயிலாடும் மரம்செடி கொடியினை வருடியே..
..........குழலோசை போலவே ஒலியெழுப்பி வரும்.!
மயிலாடும் உயர்மலைப் பாறைதனில் எழுந்தே..
..........மணம்பரப்பி வயல்வெளியில் துள்ளியோடும்.!
ஒயிலாக மழைநீர்போலத் தவழ்ந்து வந்துமனம்..
..........ஒன்றிச் செயல்படவும் வைக்குமது.!அதிகாலைத்
துயிலெழ வைக்குமந்த மலையருவியின் சாரலது..
..........தழுவிடும் பாறைக்கு மட்டுமேயது சொந்தமாகும்.!

செழிப்பான சோலைகள் சூழ்ந்த எம்மூரைச்..
..........சிறப்புடனே கண்டுகளிக்க அயலார் வருவர்.!
வழிமுழுதும் நிழல்தரும் அடர்ந்த மரமுண்டதில்..
..........விழும் நிழலில் விலங்கினங்கள் இளைப்பாரும்.!
பொழிகின்ற மழைநீர் போலேகாண்பர் உள்ளத்துள்..
..........பொங்கு மின்பத்தாலே ஆடிப்பாடவும் தோன்றும்.!
விழிகளிலே ஆனந்தம் தாண்டவ மாடுவதால்..
..........வாழியவென்றே எம்மூரை எவரும் வாழ்த்துவர்.!

=========================================

நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::12-08-2017
நன்றி:: கூகிள் இமேஜ்..

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (17-Sep-17, 7:53 pm)
பார்வை : 206

மேலே