இதயத்துடிப்பு

இதயத்துடிப்பு

என்னிதயம் துடிக்கின்றது ஏதிலிகளை எண்ணியெண்ணி
பன்மடங்கு பெருகியுள்ள பாரதத்தின் மக்களினம்
நன்றெனவே வாழ்வதற்கு நலம்பேண மனிதரில்லை .
மன்றினிலே ஏழையென்றே மனிதநேயம் காட்டவில்லை .


காண்பீரோ அவலநிலை கண்ணீரும் கவிசொல்லும்
மாண்புடைய மக்களினம் மங்கியதோ மனிதநேயம்
ஆண்டவனும் தந்திட்ட அன்பான உயிர்களெல்லாம்
தீண்டுவாரும் ஏதுமில்லை தீர்ப்புகளில் திருத்தமில்லை .


தீர்ப்புகளும் வழங்குகின்ற திறமையான நீதிமன்றம்
பார்ப்பாரோ இவர்களையும் பாரினிலே மிகக்கொடுமை
வார்ப்புகளும் கொண்டுள்ள வகையான உருவங்கள்
தேர்கொண்டு போகிறதோ தேடுகின்றார் மனிதத்தை .


தேடுகின்றேன் எதிர்காலம் தேகமுமே வாடிடவும்
பாடுகின்றேன் மௌனராகம் பலர்நோக்கப் பார்க்கின்றேன்
ஓடுகின்றேன் இவ்வுலகில் ஓய்ந்திடவும் மனமில்லை
வாடுகின்றேன் வாசமிலா வாழ்வுதனை இவ்வுலகில் .


வாழ்வினிலே சுகமில்லை வருத்தமுடன் சொல்லுகின்றேன்
ஏழ்மையாகப் பிறந்ததுவே என்குற்றம் என்பதுபோல்
கீழ்நோக்கிப் பார்க்கின்றார் கீழ்சாதி என்கின்றார்
பாழ்பட்ட என்நிலைமை பாருங்கள் மானிடரே !

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (22-Sep-17, 1:36 pm)
பார்வை : 129

மேலே