திணிப்புகளை வெட்டி சாய்ப்போம்
நீர்த்துப்போன தீர்ப்புகளாய் நீதித்துறை
கடற்கரைக்கே தடுப்பாய் நிற்கும் காவல்துறை
குருத்துகளை கருக வைக்கும் கல்வித்துறை
கணக்கின்றி போராட்டத்தில் நிரம்பியது சிறை
அண்ணாவின் நாமம் சூட்டிய ஆளுங்கட்சி
அடகு வைத்தது அவரின் மாநில சுயாட்சி
பதவிக்காய் மோடிமந்திர ஆசி வேண்டி
புறங்கடையை திறந்துவிட்ட புழைவேசி
இருதேசங்களின் ஆட்சிபீடம் ஏறிய எம்மொழி
இந்திய தேசத்து ஆட்சியருக்கோ தலைகழி
மனசாட்சி விற்று மழுங்கி கூவும் தொங்கல்கள்
பெற்றத் தாயையே விற்கத் துடிக்கும் பங்கங்கள்
வேடிக்கையாய் சுற்றித் திரியும் சிட்டுக்குருவிகள் அல்ல
வாடிக்கையாய் பிணமாமிசம் உண்ணும் வல்லூறுகள் அல்ல
அடைகாத்த தமிழன்னை அடிவயிற்றின் வெப்பக் கனலில்
வெடித்துப் பிறந்த ஃபீனிக்ஸ் குஞ்சுகள் நாங்கள்
கொட்டகை மாக்களாய் கூனிக்குறுகி அடங்கிட மாட்டோம்
வெட்ட வெட்ட வீறு கொண்டு தழைப்போம்
எட்டிப் பறித்த உரிமைகளை தட்டிக் கேட்போம்
ஒண்ட வந்தத் திணிப்புகளை வெட்டி சாய்ப்போம்...!
கவிதாயினி அமுதா பொற்கொடி