அன்பின் பாதை
தித்திக்கும் வசந்த காலமதிலொரு காலை வேளை.
சோலையில் பூத்துக்குலுங்கும் பூக்களின் நடுவிலே வசந்தத்தின் ஸ்பரிசத்தில் மெய்மறந்து நினைவுகளிலிருந்து விடுபட்ட நிலையில் இதயத்தினுள்ளிருந்து எழுந்த உந்துவிசையினால் கால்களெழுந்து நடை பயில சோலைகடந்து மரச்சாலைகளுக்கு நுழைய மலையின் உச்சியிலொரு வெள்ளொளியைக் கண் நோக்க ஒளியின் ஈர்ப்பு இதயத்தைப் பற்றியிழுக்க மூளையிலிருந்தொரு கட்டளை பிறக்க கரடுமுரடான பாதையில் ஏறத் தொடங்கிவிட்டேன் என்னையறியாமலே.
பாதங்களில் கற்கள் குத்தி இரத்தம் சொட்ட சிறிது சிறிதாக வலியின் தாக்கம் தடுமாற வைக்க, சிந்திய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவ்வொளியை நோக்க அதுவோ முன்பைவிட அதிகமாகக் கவர்ந்திழுத்தது காந்தமாய்.
அடுத்த அடுத்த காலடிகள் இடற கிழே விழுந்தேன் சுயவுணர்வின்றி.
கண்கள் மூடிய போதிலும் அகத்துள்ளே அவ்வொளியின் தரிசனமே கிட்ட கண் விழிக்க மனமின்றி கண்களைத் திறந்து பார்த்தேன் அந்த ஒளி அங்குள்ளதா? என்று.
அவ்வொளி அங்கே தான் இருந்தது அதே ஈர்ப்புடன்.
கரடுமுரடனான பாதை படிகட்டுகளாய் வடிவமுற கற்களெல்லாம் பூக்களாக என் காயங்களெல்லாம் காணாமல் போகிவிட எழுந்து தொடர்கிறேன் முடிவில்லா பயணமாய் அன்பாலான அவ்வொளியை நோக்கி...