வாழ்க்கையே நீ என்ன வண்ணங்களின் கலவையோ

வாழ்க்கையே! நீ என்ன வண்ணங்களின் கலவையோ!
நிறங்களின் அணுக்களால் புதுப்புது ரவிவர்மாக்கள் பிறக்கிறார்கள்.
எம். எஃப்.ஹூசைன்களால் கற்பனை எல்லைகள்
'கடவுளர்களின்' பால் வேற்றுமைக்கு
பங்கம் விளைவிக்கின்றன.
பிக்காஸோக்கள் யதார்த்த வடிவங்களுக்கு வெளியே
தங்களது வண்ண சிம்மாசனத்தை
வடிவமைத்துக் கொள்ளுகிறார்கள்.
இரட்டை பரிமாணம் கடந்த
முப்பரிமாண ஓவியங்கள்
நமது உணவறையில் நுழைந்து
தட்டு முட்டுகளை தாங்கி நிற்கின்றன.
எங்கெங்கு காணினும் வண்ணங்களின் விளையாட்டு.
டீப்பாய்கள் தொடங்கி தெருமுனை சுவர்கள் பேசும் வெற்று விளம்பரங்கள் வரை.
வண்ணங்களின் சாம்ராஜ்யம்.
நமது சிகையில், சிரிப்பில்.
உடையில், விரிப்பில்.
... ... ....
(அப்பாடா, மேற்குத்திய புள்ளிகள் காப்பாற்றிவிட்டன எனது விளக்க வியாக்கியானங்களை.)
சரி. இந்த வண்ணங்களின் பிறப்பிடம் எதுவோ? நமது எட்டாங்கிளாஸ் அறிவியல் துணைக்கு வருகிறது.
ஆங்.. அந்தக் கண்ணாடி பிரமிடு....
கதவுகளை மூடி டார்ச் ஒளி வெள்ளம்(!) பாய்ச்சியது....
எதிரில் வெள்ளைக்காகித அட்டையில் நிறப்பிரிகை அறிவை பெற்றது...
ஏழு வண்ணங்களை ஏழு கோடி(?) நிறத்துகள்கள் படம்பிடித்து காட்டியது....
வெள்ளொளி ஏழு வண்ணங்களை தன்கரங்களால் படைக்கிறது என அறிந்து கொள்கிறோம்.
கேள்வி: வெள்ளொளி வண்ணங்களின் மாதா என்றால் பிதா யார்?
சொல்லுங்கள் பார்ப்போம்.
பதில்:
இருட்டறை.
அண்டங்காக்கையின் நிறமொத்த யதார்த்தம்.
வெள்ளை நிறப்பிரிகை செய்கிறது என்றால்
கருப்பு நிறச்சேர்க்கை செய்ய வேண்டுமல்லவா?
வெள்ளை கருப்பு: மாதா பிதா.
அடிப்படையில் தங்களுக்குள் 'கலவி'ட முடியா எதார்த்தங்கள் இவ்விரண்டும்
வண்ணங்களில்
புது ஜனனம் படைக்கிறார்கள்.
இருளை உள்வாங்கி... உள்வாங்கி
ஒளி புது வண்ணங்களை பிரசவிக்கிறாள்.
வண்ணங்களில் மட்டுமல்ல
வாழ்க்கையிலும்.
கருப்பு
புதிய வரலாற்றின் பூபாளம்.
புரட்சித் தாயின் 'பிதா' மகன்.
ஏனோ நானும் கருப்பு பிரியன்.
இக்கணம் முதல்.
-ஜான் பிரான்சிஸ்.

எழுதியவர் : (3-Oct-17, 6:14 pm)
பார்வை : 89

மேலே