நட்பென்றால் நட்பு தான் அதில் ஆண் என்னபெண் என்ன

மாலைநேரம்..
சாலையோரம்..
தனிமையில் நடக்கையில்
துணை வரும்
பூங்காற்றினைப்போல
உன் நட்பு..
கணமூடி அமைதியாய்
ரசிக்கும்
ராஜாவின் இசை போல
உன் நட்பு..

சொல்ல வருவதை விட
நான் சொல்வதை கேட்பதில்
ஆர்வம்
கொண்ட உன் நட்பில்
அதிகப் பற்று கொண்டேன்..!

உன்னை
என் நண்பன் என்று
அறிமுகம் செய்யும் போதெல்லாம்
நெருடல் கொண்டிருக்கும்
அவர்களுக்கு மத்தியில்
நாம் நாமாக
கடந்து சென்ற தருணங்கள்
சுகமான நினைவுகள்..!

'நட்பென்றால் நட்பு தான்..
அதில் ஆண் என்ன...
பெண் என்ன'
என்று நம் வீட்டு ஐயத்திற்கு
முற்றுப்புள்ளி வைத்தாய்..
தலைவணங்குகிறேன்!

பெண் என்றாலே
ஆளுமை செலுத்தும் சமூகத்தில்..
சுமுகமான தோழமை கொண்டாய்..
ஆச்சர்யம் தான்...!

நெடுந்தூர நடை பயணம்..
மொட்டைமாடி ஊஞ்சல்..
எதிர்வீட்டு மாமரம்..
சுமதி அக்கா வாசல் கோலம்..
உன் அம்மாவின் பாயசம்..
உன் கபடமற்ற பேச்சு..
இன்னும் பசுமையாய்
என்னுள்!

கல்லூரி வளாக ஆலமரம்
நம் நட்பின் பல அத்யாயம் பார்த்திருக்கிறது!
நமது மனதில் புதைந்து
கிடந்த இருள்ளெல்லாம்
ஒளியாய் மாறியதும்
இங்கே தான்..
அம்மரமும்
நம் பிரிவை சுமந்து
மௌனமாய் அழுவது போல்
பல நாள் எண்ணியதுண்டு!

கல்லூரி இறுதி நாளில்
நினைவேட்டில் கையொப்பமிட்டு
ஒரு காட்புள்ளி
வைத்தாய்..
உன்னை அதிசயித்து பார்த்தது
நினைவில் உள்ளது...

திருமண அழைப்பிதழ்
கொடுக்கையில்
பெண் தோழனா..
மாப்பிளை தோழனா
என்று கேட்டு
திருமணத்தின் போது
இருவரையும் இணைக்கும்
பாலமாய் நின்றாய்..!

உன் திருமணத்தின் போது
என் பெண்
உனக்கு தோழியாய்
நின்றாள்..
அழகிய நினைவுகளின்
சுரம் இன்னும் சுகமாய்..!

கதைகள் கேட்டு அடம்
செய்யும்
நம் பிள்ளைகளுக்கு
சொல்வதற்கு நிறையவே
கதைகள் இருக்கின்றன..!

கல்லூரி நாட்கள் முடிந்தும்
இன்றும் நம்மை நாமாகவே
நட்பாகவே இருக்கச் செய்யும் என்னவனும்..உன்னவளும்..
நமக்கு கிடைத்த
வரம் தான்!!!!

நட்பென்றால் நட்பு தான்..
அதில் ஆண் என்ன....பெண் என்ன?!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (5-Oct-17, 6:18 am)
பார்வை : 331

மேலே