இன்பத்துப்பாலின் காமச்சுவை விஷ்ணுபுரம் --- வாசகர் கடிதம்

வெளிஉலகிற்கு நான் அப்பாவியான பிரம்மசாரி. உள்ளே பித்து பிடித்து அலைந்து கொண்டிருந்தேன். விழித்திருக்கும் நேரமெல்லாம் அந்த உதடுகளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பேன். அவ்வெண்ணத்தை எனக்குள் மீட்டுவதற்காக தனிமையை எப்போதும் விரும்பினேன்”

(பிங்கலனின் மனக்கூற்று)

அன்பு ஜெயமோகன்,

ஒரு ஆணால் காமத்தைக் கடந்துவிடவே முடிவதில்லை. அதேசமயம், அதை ஒப்புக்கொள்ளவும் அவனுக்குத் தயக்கம். இல்லறம் துறவறம் எனும் பகுப்புகளில் இல்லறத்தானுக்கு காமம் அனுமதிக்கப்படுகிறது; துறவறத்தானுக்கு காமம் வலுவாக மறுக்கப்படுகிறது. துவக்கத்தில் இல்லறத்தான் காமத்துக்காக மகிழ்கிறான்; பிற்பாடு அதன்பொருட்டே துயருமுறுகிறான். துறவறத்தானும் காமத்தைப் புறக்கணித்ததற்காக துவக்கத்தில் மகிழ்கிறான்; பிற்பாடு அதன் நினைப்பினாலேயே துன்பமுங்கொள்கிறான். ஒன்றை உறுதியாகச் சொல்லலாம். இரண்டிலுமே ஆணால் நிறைவுற முடிவதில்லை. காமத்தின் மாயக்கரங்களில் இருந்து விடுபட முடியாமல் ஆண்சமூகம் தவித்துக் கொண்டே இருக்கிறது. அப்படியானால் காமம் கொடியதா?

காமத்தை ஆணுக்கு மட்டுமே உரியதாகச் சொல்வதில் சமூகம் தெளிவாக இருக்கிறது. தன் காமத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு ஆணுக்கு வாய்ப்பளிக்கும் சமூகம் பெண்ணுக்கு அவ்வாய்ப்பைத் தருவதே இல்லை. இரண்டு உடல்கள் சேர்வதையே காமம் எனச்சொல்லி நம்மை நம்பவும் வைத்திருக்கின்றனர். உண்மையில் காமம் என்பது இரண்டு உடல்களின் வழியாக இரண்டு அகங்கள் சந்தித்துக் கொள்வது. ஆண் எனும் புறத்தைக் கடந்து பார்க்கும்போது அவன் ஆண் பெண் அகங்களாக இருப்பதைப் புரிந்து கொள்ளமுடியும். அதேபோன்று, பெண் எனும் புறத்தைக் கடந்து பார்க்கும்போதுதான் அவள் பெண் ஆண் அகங்களாக இருப்பதை விளங்கிக் கொள்ள முடியும். ஒரு ஆணுக்குள் இருக்கும் பெண்ணின் விருப்பமே அவனின் காமமாக இருக்கிறது. ஒரு பெண்ணுக்குள் இருக்கும் ஆணின் விருப்பமே அவளின் காமமாக இருக்கிறது. காமம் மானுட இயல்பு. அதிலிருந்து ஒருவனால் இயல்பாக விலகிவிடவே முடியாது. பிங்கலனின் நிலையும் அதுதான்.

உலகப்பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறளில் இன்பத்துப்பாலுக்கென இருபத்தைந்து அதிகாரங்களை ஒதுக்கி இருக்கிறார் வள்ளுவர். விஷ்ணுபுரத்தில் பிங்கலனின் மனநிலையைக் கண்டபொழுதில்தான் அக்குறட்பாக்களை படிக்க வேண்டும் எனும் ஆசை தோன்றியது. புணர்ச்சி மகிழ்தல், படர்மெலிந்திரங்கல், கண்விதுப்பழிதல், உறுப்புநலனழிதல், நிறையழிதல், புணர்ச்சிவிதும்பல், புலவி நுணுக்கம், ஊடலுவகை என அதிகாரத்தலைப்புகளிலேயே நம்மை ஈர்த்து விடுகிறார் அவர்.

காமத்தை வள்ளுவர் விவரிக்கும் அழகே தனி. எவ்வித உளவியல் சிக்கல்களுக்கும் ஆளாகாத மனநிலையோடுதான் அவரின் வார்த்தைகள் அமைந்திருக்கின்றன. காம அனுபவங்களைக் கொஞ்சமும் தயங்காமல் சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறார். முலைகளே காமத்தின் துவக்கமாக இருக்கிறது என்பதை நாம் வியாக்கியானங்களால் மறைக்க முயன்று கொண்டிருக்கிறோம். அவரோ ”கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் / படாஅ முலைமேல் துகில்” என நேரடியாகவே பேசிவிடுகிறார். பிறிதொரு இடத்தில் “அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம் / செறிதொறும் சேயிழை மாட்டு” என அதிர வைக்கிறார்.

”கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் / நோக்கமிம் மூன்றும் உடைத்து”, “உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் / கண்டார் மகிழ்செய்தல் இன்று”, ”இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு / நோய்நோக்கொன் றநோய் மருந்து”, “உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் / கள்ளுக்கில் காமத்திற் குண்டு”, “மலரினும் மெல்லிது காமம் சிலரதன் / செவ்வி தலைப்படு வார்”, “கனவினான் உண்டாகும் காமம் நனவினான் / நல்காரை நாடித் தரற்கு” என்பன போன்ற குறட்பாக்களில் நான் பிங்கலனையே பார்க்கிறேன்.

முருகவேலன்,

படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,

கோபிசெட்டிபாளையம்.

எழுதியவர் : (6-Oct-17, 6:11 am)
பார்வை : 63

சிறந்த கட்டுரைகள்

மேலே