ஆதிகேசவப்பெருமாள் ஆலயம்- திருவட்டாறு கோயில் வரலாறு’ ஆசிரியர் முனைவர் அகாபெருமாள்

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

கலாச்சாரம், மதம், வரலாறு, வாசிப்பு, விமர்சனம்
--------------------------------------------------------------------------------

நமது பண்டைய ஆலயங்கள் வழிபாட்டுமையங்கள் மட்டுமல்ல, அவை கலைக்கூடங்களும் வரலாற்றுக் களஞ்சியங்களும்கூட. சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற நமது பேராலயங்கள் முக்கியமான அதிகாரமையங்களாக இருந்தன. அவற்றை அச்சாகக் கொண்டு அன்றைய பொருளியல் கட்டுமானமும், சமூக அடுக்குமுறையும் உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வாலயங்களில் பல்லாயிரம் கல்வெட்டுகளும் பிற ஆவணப்பதிவுகளும் உள்ளன. ஒரு நவீன வரலாற்றாசிரியனுக்கு ஒவ்வொரு ஆலயமும் ஒரு மாபெரும் வரலாற்று நூல்போல.

பொதுவாக வரலாற்றாய்வின் இன்றைய காலகட்டத்தை நுண்வரலாற்றெழுத்தின் காலம் எனலாம். பொதுவாகவும் ஒட்டுமொத்தமாகவும் தமிழக வரலாறு எழுதப்பட்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது வரலாற்றுக்கு ஒரு கோட்டுச் சித்திரத்தை வரையும் பெருவரலாற்றெழுத்துப் பணி நிறைவுற்றுவிட்டது. இனி அதன் உட்கூறுகளை ஆழமாக கவனித்து அவற்றை மேலும் மேலும் செம்மைப்படுத்தி அந்தக் கோட்டுச்சித்திரத்துக்கு வண்ணமும் நுண்மையும் அளிக்க வேண்டும். அதற்கு நம் ஆலயங்கள் பெரிதும் உதவக்கூடியவை

அந்நோக்கில் பொதுவாக இன்னும் நம் வரலாறு விரிவாக எழுதப்படவில்லை. நமது பேராலயங்கள் எதைப்பற்றியும் விரிவான வரலாற்றாய்வு நூல்கள் இல்லை. பக்தி நோக்கிலும் வழிபாட்டு நோக்கிலும் எழுதப்பட்ட மேலோட்டமான பதிவுகளே காணக்கிடைக்கின்றன. அவ்வகையில் முன்னோடியான நூல் கே.கே.பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய ‘சுசீந்திரம் டெம்பிள்’ என்ற பெருநூல். பதினேழு வருட உழைப்பின் விளைவாக உருவான அந்த ஆய்வுநூல் சுசீந்திரம் ஆலயத்தின் கல்வெட்டுகள், அதைப்பற்றிய ஆவணப்பதிவுகள், அவ்வாலயத்து நம்பிக்கைகள் ,சமயச்சடங்குகள், அங்குள்ள பல்வேறு சிற்பங்கள், அவ்வாலயத்தைச் சார்ந்து உருவான நிலமானிய முறை, வரலாற்றில் அதன் இடம் என அனைத்தையும் ஆய்வாளருக்கு இன்றியமையாத விருப்புவெறுப்பற்ற , முன்முடிவுகளற்ற நோக்கில் விரிவாகப் பதிவுசெய்வது. இவ்வகையில் இன்றும் அது ஒரு ‘கிளாசிக்’ ஆகும்.



தமிழில் அதற்கு இணையான நூல்கள் இல்லை என்றாலும் முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியது தொ.பரமசிவனின் ‘அழகர்கோயில்’ என்ற ஆய்வு நூல். ஆய்வாளரின் முனைவர் பட்ட ஆய்வேடு இது. விரிவாக அழகர்கோயிலை ஆராய்ந்து பதிவுசெய்யும் பரமசிவம் காலந்தோறும் அந்த ஆலயம் வளர்ந்தும் கைமாறியும் வந்த வரலாற்றை நுட்பமாக உருவாக்குகிறார். குறிப்பாக அழகர்கோயிலைச் சுற்றி உருவான நிலமானிய அமைப்பையும் சாதிக்கட்டுமானத்தையும் அவை திருவிழாக்களில் அடுக்கதிகாரமாக வெளிப்படும் முறையையும் விரிவாக வரைந்து காட்டுகிறார். தமிழில் இவ்வகையில் இன்றும் இதுவே செவ்வியல்தன்மை கொண்ட முதல்வழிகாட்டி நூல்.

நுண்வரலாற்றை உருவாக்கும் ஆய்வுகளில் முன்னணியில் நிற்பவர்களில் ஒருவர் அ.கா.பெருமாள். ஏற்கனவே இவர் பறக்கை மதுசூதனப்பெருமாள் ஆலயத்தைப்பற்றி சிறிய நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். குமரிமாவட்டத்தின் வரலாற்றை ‘தென்குமரியின்கதை’ என்றபேரில் எழுதியிருக்கிறார். குமரிமாவட்ட வரலாற்றாய்வின் முக்கிய ஆவணங்களாக விளங்கும் முதலியார் ஓலைச்சுவடிகளை விரிவான குறிப்புகளுடன் பதிப்பித்திருக்கிறார். இவ்வரிசையில் அவரது முக்கியமான நூல் ‘ஆதிகேசவப்பெருமாள் ஆலயம்- திருவட்டாறு கோயில் வரலாறு’



*

திருவட்டாறு ஆலயம்பற்றிய இந்நூலுக்கு என்னைப்பொறுத்தவரை ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. என் அப்பாவின் முன்னோர்கள் இந்த ஆலயத்தின் ஊழியர்கள். ஆனால் வைணவர்கள் அல்ல, பகவதியை வழிபடுகிறவர்கள். தொன்மையான இந்தப் பேராலயம் திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வமாக விளங்கியிருக்கிறது. பின்னர் இதன் வடிவிலேயே திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசாமி ஆலயம் கட்டபட்டது. இவ்வாலயத்தின் வரலாறென்பது ஒருவகையில் நான் வாழும் நிலத்தின் வரலாறும் கூட. ‘விஷ்ணுபுரம்’ நாவலுக்கு கருவாக அமைந்த கோயிலும் இதுவே.

இங்கே ஆதிகேசவன் ஒன்றில் பாதம், இன்னொன்றில் உந்தி, பிறிதில் மணிமுடி என மூன்று கருவறைகளை நிறைத்து மல்லாந்து மகாயோக நிலையில் படுத்திருக்கிறார். இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற எல்லா பெருமாள் சிலைகளையும் நான் கண்டிருக்கிறேன். ஆதிகேசவப்பெருமாள் அளவுக்கு பேரழகு கொண்ட சிலை ஏதுமில்லை. இருளுக்குள் பளபளக்கும் கன்னங்கரிய திருமேனி. நாசியின் கூர்மையும் புன்னகை இருக்கிறதா இல்லையா என்று தெரியாத உதடுகளும், குவிந்து மூடிய கண்களும் ஒருபெரிய கனவு போல் நம் கண்முன் விரியக்கூடியவை.

அ.கா.பெருமாள் அவர்கள் ஒன்பது அத்தியாயங்களிலாக இந்நூலை அமைத்துள்ளார். ‘வளநீர் வாட்டாறு’ என்ற முதல் அத்தியாயத்தில் இவ்வாலயத்தின் தொன்மையான வரலாறு குறிப்பிடப்படுகிறது. ‘வளநீர் வாட்டாறு’ என்ற சொல்லாடி புறநாநூறில் உள்ளது. [பாடல் 396] வாட்டாற்றை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட எழினியாதன் என்ற மன்னனைப்பற்றிச் சொல்கிறது இப்பாடல். தொடர்ந்து தொல்சேரர் வரலாற்றிலும் பின்னர் சோழர் வரலாற்றிலும் கடைசியாக திருவிதாங்கூர் [வேணாட்டு] மன்னர்களின் வரலாற்றிலும் இவ்வூர் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை விரிவான ஆய்வுகளுடன் அ.கா.பெருமாள் ஆராய்கிறார்

‘வானேற வழிதந்த வாட்டாறு’ என்ற இரண்டாம் அத்தியாயம் ஒரு தலமாக இவ்வாலயத்தின் இடத்தை விளக்குகிறது. அவ்வாறு இவ்வூரை வாழ்த்திய நம்மாழ்வார் இத்தலத்தை மங்களசாசனம் செய்திருக்கிறார். ‘மலைமாடத்து வாட்டாற்றான்’ என்ற மூன்றாம் அத்தியாயம் இக்கோயிலின் கட்டுமான அமைப்பையும் சிறப்பையும் விளக்குகிறது. கேரள பாணி கட்டிடக்கலையின் தலைசிறந்த உதாரணங்களில் ஒன்றான இந்தக் கோயில் சிறு குன்று ஒன்றை உள்ளடக்கி அமைக்கப்பட்டதனால் உயரமான அடித்தளம் கொண்டது. நான்குபக்கமும் கேரளபாணி நாலம்பல முகடுகள் கொண்டது. செம்பு வேயப்பட்ட கூம்புவடிவ கருவறை. விரிந்த சுற்றுப்பிராகாரம்.

‘அரவணைமேல் பள்ளி கொண்டான்’ என்ற நான்காவது அத்தியாயம் ஆலயத்தின் கருவறையையும் மூலச்சிலையான ஆதிகேசவனையும் மற்ற பரிவார தேவதைகளையும் விரிவாக விளக்குகிறது. 16008 சாலக்கிராமங்களால் கட்டப்பட்டு மேலே கடுசர்க்கரைப்பூச்சு கொண்ட இத்திருமேனி 6.60 மீட்டர் நீளம் கொண்டது. சமசயன நிலையில் மும்மடிப்பு கொண்ட ஆதிசேடன் மீது பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.

‘இரணியனை மார்பு இடந்த வாட்டாறு’ என்ற ஐந்தாம் அத்தியாயம் தலபுராணத்தை விளக்குகிறது. இந்த தலபுராணம் ஒப்புநோக்க அண்மைக்காலத்தையதாகும். ஆறாம் அத்தியாயத்தில் இவ்வாலயத்தின் பூசை முறைகள் பூசகர்கள் மற்றும் ஊழியர்களின் வரலாறு விளக்கப்படுகிறது. முற்காலத்தில் நம்பூதிரிகளால் பூசை செய்யப்பட்ட இவவலயம் மார்த்தாண்டவர்மா மகாராஜாவுக்குப் பின்னர் துளு பிராமணர்களால் பூசை செய்யப்படுகிறது. தலைமை பூசாரி நம்பி எனப்படுகிறார். அவர் மூன்று வருடங்கள் பதவியில் இருப்பார். பதவிக்காலத்தில் அவர் பூசையல்லாத நேரத்தில் தனிமையில் துறவு வாழ்க்கை வாழ வேண்டும். இங்கு தாந்த்ரீகமுறைப்படி பூசை நடந்துவருகிறது. இங்குள்ள சிறப்பு தாந்த்ரீக பூஜைகளைச் செய்பவர்கள் தந்த்ரிகள் எனப்படுகிறார்கள். மணலிக்கரை போத்தி, அத்தியறைப்போத்தி என்ற இரு துளுபிராமண இல்லங்கள் தந்திரிகளாக உள்ளனர்

ஏழாம் அத்தியாயத்தில் இவ்வாலயத்தின் நித்யபூஜைகளையும் திருவிழாக்களையும் விரிவாக குறிப்பிடுகிறார் அ.கா.பெருமாள். எட்டாம் அத்தியாயம் இங்குள்ள சிற்பங்களைப்பற்றியது. இங்குள்ள முக மண்டபத்தில் உள்ள மரச்சிற்பங்கள் மிக நுட்பமானவையும் அபூர்வமானவையுமாகும். தமிழகத்தில் இதற்கிணையான சிற்பங்கள் வேறு இல்லை, கேரளத்திலும் குறைவே. இங்குள்ள ரதிமன்மத கற்சிலைகளும் அர்ஜுனன் கர்ணன் சிலைகளும் மிக எழிலார்ந்தவை கருவறையைச்சுற்றியுள்ள சுவரோவியங்களும் அபூர்வமானவை


அ.கா பெருமாள்
ஒன்பதாம் அத்தியாயத்தில் கோயில் கல்வெட்டுகளை வரலாற்று நோக்கில் ஆய்வுக்கு உள்படுத்துகிறார் அ.கா.பெருமாள். விரிவான பின்னிணைப்புகளில் கோயிலைப்பற்றிய அசல் ஆவணங்கள் விரிவாக அளிக்கப்பட்டுள்ளன. தனிப்பகுதியாக கோயிலின் கிட்டத்தட்ட நூறு புகைப்படங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

வரலாற்றாய்வாளர்களுக்கு ஒரு முதன்மையான மூலநூலாக அமையும் தன்மை கொண்டது இது. பெருமாள் அவர்களின் நோக்கி மதம் சாராத வரலாற்றாய்வாளரின் நேரடியான நோக்கு என்பது இந்நூலின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. இதன் முக்கியமான குறை என்பது இவ்வாலயத்தை ஒட்டி இருந்த சமூக அமைப்பையும் நிலமானிய முறையையும் இன்னும் விரிவாக ஆராய்ந்திருக்கலாம் என்பதே. ஏழாம் அத்தியாயத்தில் கோயிலின் நிர்வாக முறையும் ஊழியர்மரபும் தொட்டுக் காட்டப்படுகின்றன. அவற்றை மேலும் விரிவாக்கி அந்த குடும்பங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி ஒரு சித்திரத்தை உருவாக்கியிருக்கலாம்.

தமிழகத்தில் உள்ள முக்கியமான ஐம்பது ஆலயங்களைப்பற்றியாவது உடனடியாக இத்தகைய ஆய்வுநூல்கள் எழுதபப்டவேண்டியது இன்றியமையாததாகும். நாம் காணும் தமிழக வரலாற்றின் சித்திரம் மேலும் துலக்கமுற அது உதவும்

ஓர் ஆய்வுநூலில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு அழகுடன் இந்நூலை உருவாக்கியிருக்கிறது தமிழினி. சென்றவருடத்திய மிக அழகான அட்டைப்படங்களில் ஒன்று இந்நூலுக்குரியது.

*

‘ஆதிகேசவப்பெருமாள் ஆலயம்- திருவட்டாறு கோயில் வரலாறு’ .ஆசிரியர் முனைவர் அ.கா.பெருமாள். தமிழினி பிரசுரம். 67,பீட்டர்ஸ் சாலை,ராயப்பேட்டை சென்னை 14

ஜெயமோகன்

எழுதியவர் : (6-Oct-17, 5:54 am)
பார்வை : 97

மேலே