மீசை பாடல்

#மீசை (பாடல்)
கட்டபொம்மன் வச்சது போல்
மீசை பெரிய மீசை - அந்த
மீசை அழகை காட்டித்தானே
மயக்கிப்புட்டான் என் மாமன்..!
மல்லு வேட்டி மடிச்சு கட்டி
மீச முறுக்கும்போது - அவன
கட்டிக்கத்தான் நெஞ்சுக்குள்ள
ஆச வந்து மோதும்..!
கம்பளிபோல் மீசை வெச்ச
கரும்பு பேச்சுக்காரன் - அவன்
குறும்பு செய்யும் போதிலதான்
நானும் கூசிப் போறேன்..!
ஆசையாக மீசையத்தான்
பிடிச்சிழுத்து பார்ப்பேன் - அவன்
"ஆ"வென்ற அலறல் சத்தம்
கேட்டு நானும் ரசிப்பேன்..!
ராஜாதி ராஜன போல்
கம்பீரத் தோற்றம்
மீசையால வந்ததுதான்
விடலைப் பருவ மாற்றம்..!
ஆசையாக வளர்த்து வெச்சான்
அடர்த்தியான மீசை
மழிச்சிபுட்டான் நாவிதனும்
பாட்டன் இறந்த நாளும்..!
அழுத்துப்புட்டேன் நானுந்தான்
பாட்டனுக்கா இல்ல - மாமன்
மீசை போன காரணந்தான்
இன்னும் சோகம் தீரவில்லை..!
#சொ.சாந்தி-