அன்புள்ள அப்பா
அன்புள்ள அப்பா...
இதுவரை எமது பேனா சிந்தியது
ஊதா நிறத்தில் வெறும் தண்ணீர்
இன்று உங்களுக்காக உதிர்க்கிறது
உதிரம் கலந்த கண்ணீர்
பெற்றோருக்குப் பிள்ளை
பிள்ளைகளுக்குப் பிதா
மனைவிக்கு மணாளன்
மருமக்களுக்கு மாமனார்
குழந்தைகளுக்குத் தாத்தா
உடன்பிறந்தோர்க்கு சகோதரன்
உறவினருக்கு உறவினர்
நண்பர்களுக்கு நண்பர்
மக்களுக்கு அன்பர்
தொழிலாளிக்கு முதலாளி
வியாபாரிக்கு வியாபாரி - இவை
அத்தனை அவதாரங்களுக்கும்
நீங்கள்தான் முன்னோடி
எங்கள் கால்களுக்குப்
பாதை தந்த காலக்கண்ணாடி
புண்ணியத்தின் பலனாய்
நீங்கள் சேருமிடம் சொர்கமே
புனிதரான உங்களை பிரிந்து
நாங்கள் வாழுமிடம் நரகமே
எவருக்கும் கேட்காத உமது மென்குரல்
எமனுக்கு மட்டும் எப்படியப்பா கேட்டது?
கருணை இல்லாமல்
காலம் கருதாமல் அந்தக்
காலன் உங்கள்மீது தொடுத்த கயிறு
பாசக்கயிரல்ல மோசக்கயிறு
ஆஸ்தியையும், அன்பையும் கைகளில் தந்தபோது
மகிழ்ச்சியில் மயங்கினோம்
அஸ்தியை எடுத்துக் பைகளில் தந்தபோது
அதிர்ச்சியில் கலங்கினோம்
பிள்ளைகளின் வாழ்வில்
ஒளி ஏற்றிவிட்டோம் எனச் சென்றீரா?
நீங்கள் அறியவில்லையே அப்பா
உங்கள் கண்ணொளிதான்
எங்கள் பொன்னொளியென்று.
ஆதவன்கூட அஸ்தமித்ததும்
அந்தி நிலவொன்றை விட்டுச்செல்வானே
ஆலமரம்போல் உம்முடன் வாழ நினைத்த - எங்கள்
அம்மா ஆசை அமாவாசையானதே!
கடலளவு கடமை தீர்த்த உங்களுக்கு
கடுகளவும் கடன் தீர்க்கக் கதியற்றோமா?
நெஞ்சம் இதை எண்ணுகையில்
நெருப்பால் எரிகிறது
நெறிஞ்சி முள்ளால் கிழிகிறது
முதன்முதலாய்
எங்கள் மனம் வெந்து உருகியது
ஒரு மலர் தீயில் கருகியதால்.
தெய்வத்தை நீங்கள் தேடிச் சென்றபோது
பக்தியை எண்ணிப் பெருமைப்பட்டோம் - அந்த
தெய்வம் உங்களைக் கூட்டிச் சென்றபோது
சக்தியை இழந்து வெறுமைப்பட்டோம்.
எங்களைப் பிரிந்த - உங்கள்
ஆத்மா சாந்தியடைய அனைத்தும்
செய்வோம் முறையாக
உங்களை இழந்த - எங்கள்
இதயம் சாந்தியடைய நீங்களே
அருள் புரிவீராக.
குறிப்பு: இது எங்கள் சித்தப்பாவின் மரணம் ஏற்படுத்திய காயங்கள்