கண்ணால் காண்பதும்

கண்ணால் காண்பதும்..!
=====================


அண்டஞ் சூழேழுலகை அற்புதமாய்ப் படைத்தாங்கே..
..........அரியயுயிர் வகையனைத்தையு முயிர்ப்பித்தாய்...அதை
உண்டாயுன் வாயினால் பிரளயமெனும் செயலால்.!
..........உருவாக்கும் அழிக்கும்காக்கு மனைத்துமுன் செயலே
அண்டமுழுதும் அற்புதங்கள் நிகழ்த்தி ஆச்சரியமிகு..
..........அரியதிரு விளையாடலால் வியனுலகை இயக்குகிறாய்.!
கண்ணுக்குத் தெரியாத கருப்பொருளே.! அற்புதமே.!
..........கடவுளுனைக் கண்ணால் காண்பதும் முடியுமா..?


கண்ணில் தெரியும் காட்சிகளுலவும் புவியில்யாவும்..
..........கடவுள் படைத்ததனைத்தும் மெய்யெனும் அதிசயமே.!
கண்ணையும் மனதையும் கவருகின்ற மலையருவி..
..........கடந்துவரும் நடையழகில் கடல்சேர்வதும் அற்புதமே.!
வண்ண வண்ணக் கோலம்கொண்ட மயில்தன்தோகை..
..........விரித்து கருமேகம் கண்டவுடனாடுவதும் ஆச்சரியமே.!
எண்ண எண்ண இனிக்கும் இறைவனின் ஆலயமென..
..........எதுவும்கண்ணால் காண்பதும் கவிதையாகும் கவிநெஞ்சில்.!


பாக்கும்கமுகும் தேக்கும் தென்னையும் நிறைந்த..
..........பசுமைமிகு தோட்டமதின் மேல்வளைந்த வானவில்லும்..
நாக்கில் தேனைச்சேகரிக்க நாடிடும் வண்டினத்தின்
..........நல்லதொரு கூட்டமங்கே ஓரிடத்தில் அழகாய்க்கூட..
பூக்கும்பூமலர்த் தோட்டத்தில் வீசும்பூமண ஈர்ப்பால்
..........புலவர்கள் கவிஞர்கள் கூட்டமங்கே நிரம்பி வழியும்..
பாக்கள் புனைய தகுமிடம்தானது...பாவலர்களங்கே
..........பார்க்கும் கண்ணால் காண்பதனைத்தும் கவிதையாகும்.!

==============================================
நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு:: 27-08-17

நன்றி:: கூகிள் இமேஜ் பிக்ஸாபே

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (7-Oct-17, 10:18 pm)
பார்வை : 112

மேலே