கண்ட நாள் முதலாய்-பகுதி-25

....கண்ட நாள் முதலாய்....

பகுதி : 25

பல்கனியில் நின்று தேநீரை சுவைத்துக் கொண்டிருந்தவனின் முதுகை சிறிது நேரம் வெறித்துப் பார்த்தவள்...தனக்கான தேநீரை மேசையில் வைத்து விட்டு கீழே செல்லத் தயாரானாள்...அப்போது..

"துளசி ஒரு நிமிசம்..."என்ற அரவிந்தனின் குரலைக் கேட்டு என்ன என்ற கேள்வியோடு அவனைத் திரும்பிப் பார்த்தாள்...

"உன்கிட்ட கொஞ்சம் பேசனும்...இப்படி உட்காரு..."என்று அருகே இருந்த சோபாவைக் காட்டியவன்..அவள் இருந்ததும் அவளின் இருக்கைக்கு எதிராக அமர்ந்து கொண்டான்...

"சொல்லுங்க அரவிந்தன்..."எனும் போதே அவளுள் லேசான பட படப்பு...

"ம்ம்...நேத்து நைட் நீ உன் மனசில இருக்கிற எல்லாத்தையும் வெளிப்படையா சொன்னதுக்கு முதல்ல ரொம்ப தாங்ஸ் துளசி...நேத்து அந்த சூழ்நிலையில என்னால எதுவுமே பேச முடியல...அது உனக்கு ரொம்ப கஸ்டமா இருந்திருக்கும்...ஆனால் அப்போ நான் ஏதாவது சொல்லியிருந்தன்னா அது உன்னை இன்னும் வேதனைப்படுத்தியிருக்கும்..முதல்ல நீ சொன்னதை என் மனசு ஏத்துக்கலைன்னாலும் இப்போ நான் தெளிவா இருக்கேன் துளசி..."

"நீ நம்ம கல்யாணத்துக்கு முதலே இதை என்கிட்ட சொல்லியிருந்தா நிச்சயமா நம்ம கல்யாணம் நடந்திருக்காது...ஆனால் நடந்தது நடந்ததாவே இருக்கட்டும்...இனி அதைப்பத்தி எதுவும் நாம பேச வேண்டாம்...உன் மனசு என்னைக்கு முழு மனதோடு என்னை ஏத்துக்குதோ அன்னைக்கு நாம நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்...அதுவரைக்கும் உனக்காக நான் காத்திட்டு இருப்பேன்...ஆனால் இது நமக்குள்ள மட்டுமே இருக்கட்டும்...நம்ம இரண்டு குடும்பத்துக்கும் எந்த சந்தேகமும் வந்திடக்கூடாது...தெரிஞ்சா எல்லாருமே ரொம்பக் கவலைப்படுவாங்க..."

"நீ இங்க நீயாவே இருக்கலாம்...எதுக்காகவும் நீ உன்னை மாத்திக்க வேண்டிய அவசியமில்லை...நாம நல்ல நண்பர்களாக நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்...நமக்கிடையேயான நல்ல நட்பு நம்ம இரண்டு பேருக்கிடையேயும் நல்ல புரிதலை ஏற்படுத்தும்னு நம்புறன்..."என்று முடித்தவன்,அவளை இன்னும் கூர்மையாக நோக்கினான்...

"நான் என்னோட பதிலை சொல்லிட்டேன் துளசி...இனி நீதான் சொல்லனும்..."

அவன் சொன்ன அனைத்தையும் அதுவரை நேரமும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவளின் மனதில் என்னவென்றே சொல்ல முடியாத ஓர் அமைதி உருவாவதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது...அவனது பேச்சில் அவளது தயக்கம் காணாமல் போக அவளும் தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்...

"நீங்க இதை இவ்வளவு சுலபமா எடுத்துக்குவீங்கன்னு நான் நினைக்கல அரவிந்தன்...நேத்து உங்களோட மௌனம்...இன்னைக்கு காலையில எழுந்ததிலிருந்து நீங்க காட்டிய பாராமுகம்,இது எல்லாமே என் மனசில ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது...ஆனால் இப்போ உங்களோட பேச்சு என் மனசில இருந்த எல்லா கலக்கத்தையும் காணாமல் செஞ்சிடுச்சு...என்னோட வார்த்தைகளுக்கு மதிப்பளிச்சு....என்னோட உணர்வுகளை புரிஞ்சிக்கிட்டது உண்மையிலேயே ரொம்ப தாங்ஸ் அரவிந்தன்..."என்று கூறிக்கொண்டே அவன் முன்னே அவளது கரமொன்றை நீட்டினாள்...

அவன் அவளை புரியாமல் பார்க்கவும்,

"நட்போடு நாம ஆரம்பிக்கப் போகிற நம்ம வாழ்க்கைக்கு கைக்குலுக்களோட பிள்ளையார் சுழி போட்டுக்கலாம்..."என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் துளசி...

அவளது பதிலில் தானும் லேசாக முறுவலித்தவன்,அவளது கரத்தோடு தனது கரத்தை குலுக்கிக் கொண்டான்...அங்கே நட்போடு இணைந்து காதலும் மலர்வதற்கான தொடக்கப்புள்ளி அழகாக வரையப்பட்டது...

அவளது விரல்கள் தந்த ஸ்பரிசத்தில் அவனும்...அவனின் தீண்டல் உணர்த்திய கவிதையில் அவளும்.. ஒருவரை ஒருவர் மறந்து விழிகளை மோதவிட்டுக் கொண்டிருந்தனர்....முதலில் தன்னிலைக்கு வந்தது துளசிதான்...

"இனி நான் கீழே போலாமா...??"

அரை மயக்கத்திலிருந்த அவனோ "ம்ம்" என்று முணுமுணுத்து வைத்தான்...

"கீழே போலாம்னு சொல்லிட்டு என்னோட கையை இப்படி இறுக்கமா பிடிச்சிட்டு இருந்தா...நான் எப்படிப் போறதாம் அரவிந்தன்...?.."

அவன் தான் இந்த உலகத்திலேயே இல்லையே...அப்புறம் எப்படி அவனுக்கு அவள் சொன்னது புரியும்...அவன் அவளையே புரியாத பார்வை பார்த்தான்...

அவன் மலங்க மலங்க விழித்ததை பார்த்து பெரிதாகச் சிரித்தவள்,அவன் முன்னே சொடக்குப் போட்டு..

"ஹலோ சேர்...என்ன பகலிலேயே கனவா...??.."

அவளது சொடக்குச் சத்தத்தில் விழித்துக் கொண்டவனுக்கு...உண்மை உரைக்க...அசடு வழிந்தபடியே அவளது கையிற்கு மனதே இல்லாமல் விடுதலையளித்தான்...

அவன் கையை விட்டதும் சிரித்துக் கொண்டே அங்கிருந்து கிளம்ப எத்தனித்தவளை மீண்டும் தடுத்து நிறுத்திய அவன்..

"ஹேய் டீயைக் குடிச்சிட்டுப் போ..."

"இதுக்குமேலயும் அதை குடிக்க முடியுமா சேர்...நான் வேற போட்டுக்கிறேன்..."

"ஓஓ...ஆறிடுச்சா...ரொம்ப சொரி...பேசிட்டிருந்ததில நீ டீ குடிக்கலை என்றதையே மறந்திட்டேன்..."

"ம்ம்...யாரோ நேத்து சொரி,தாங்ஸ் எல்லாம் நமக்குள்ள வேண்டாம்னு சொன்னதா ஞாபகம்..?இப்ப என்னடான்னா காலையிலிருந்து எல்லாத்தையும் வரிசையா சொல்லிட்டு இருக்காரு...?.."

"அப்படியா...?எனக்குத் தெரியாம யாரு துளசி உன்கிட்ட அப்படி சொன்னது...?.."

அவனது கேள்விக்கு அவனை விளையாட்டாக முறைத்துப் பார்த்தாள் துளசி...அவளது முறைப்பைக் கண்டு வாய்விட்டுச் சிரித்தவன்...

"ஓகே...ஓகே...கூல் துளசி...கூல்...என்னதான் இந்த வோர்மாலிட்டி எல்லாம் வேண்டாம்னு சொன்னாலும்..நீ தான் எல்லாத்தையும் அடுக்கடுக்கா சொல்ல வைச்சிட்டு இருக்கியே...போக போக குறைச்சுக்கிறேன்..."

"ஹா...ஹா....ஓகே...ஓகே...சரி நான் கீழே போறேன்..."

"ம்ம்.."

அவள் சென்றதும் அவனது மனநிலையை நினைத்து அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது...நேற்று இரவிலிருந்து இன்று காலை அவளோடு கதைக்கும் வரை அவனது மனம் பட்ட பாடு என்ன...இப்போது அனைத்தும் ஓர் நொடியில் மாறிப் போன விந்தை என்ன... அவனுக்கே அவனை நினைத்து வியப்பாக இருந்தது...

இனி எல்லாம் சரியாகிப் போகும் என்பதில் மகிழ்ச்சி அடைந்தவன்,வெளியில் செல்வதற்காய் தயாராகத் தொடங்கினான்...

கீழே வந்த துளசி...

"குட் மார்னிங் அத்தை....குட் மார்னிங் மாமா..."

"வெரி வெரி குட்மார்னிங் மா....அரவிந் பய எந்திரிச்சிட்டானா இல்லையா...?.."

"அவரு அப்பவே எழும்பிட்டார் மாமா..."

"என்ன வந்ததும் வராததுமா என் மருமகளை நிறுத்தி வைச்சு கேள்வி கேட்டிட்டு இருக்கீங்க...?.."

"இதோ பார்டா...மருமகளுக்கு மாமியார் சப்போர்ட் பண்ணிட்டு வாறதை..."

"அப்பாக்கும் பொண்ணுக்கும் வேற வேலையில்லை...ஒரே மாதிரியே கேள்வி கேட்டுகிட்டு...என்ன உங்களுக்கும் மாமியார் மருமகள் சண்டையைப் பார்க்கனுமா...??.."

"பின்ன அதெல்லாம் நான் எப்போத்தான்டி பார்க்குறது..."

"வேணும்னா இறந்து போன உங்க அம்மாவை மறுபடியும் கூப்பிடுங்க...ஒரு கை பாத்துக்கலாம்..."

"அடியாத்தி...காலங் காத்தாலேயே எதுக்குடி எங்க அம்மாவை இழுக்கிற...??.."

"நீங்க தானே லைவ்வா சண்டையை பார்க்கனும்னு ஆசைப்பட்டீங்க...?"

பார்வதி போட்ட போட்டில்..

"அம்மா தாயே...தெரியாமக் கேட்டுட்டேன்...ஆளை விடு சாமி..."என்று ஓர் கும்பிடை போட்டு விட்டு பத்திரிகையில் தீவிரமாய் தனது கவனத்தைச் செலுத்திக் கொண்டார் சங்கரன்...

அவர்களுக்கிடையே நடந்த சம்பாஷைனைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த துளசிக்கோ ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தாலும்,இந்த வயதிலும் அவர்களுக்கிடையே இருந்த புரிதலையும் காதலையும் எண்ணி வியந்தவள்,தானும் அரவிந்தனும் கூட இப்படித்தான் இருப்போமா என்று நிகழ் காலத்தை மறந்து கற்பனையில் எதிர்காலத்திற்குத் தாவிக் கொண்டாள்....


இனிமைகள் தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (8-Oct-17, 9:40 pm)
பார்வை : 623

மேலே