பொன் பசுபதி ஐயா முத்துவிழா வாழ்த்து

புதுவையிற் பூத்த பொன்பசு பதியார்
புகழ்மணம் வீசிடக் கண்டேன் !
மதுரமாய் மரபில் கவிதைக ளியற்றி
மாட்சிமை பெற்றிடக் கண்டேன் !
முதுமையை வரமாய் ஏற்றிருப் போரின்
முகத்தினில் கனிவினைக் கண்டேன் !
விதுலனாய்ப் புவியில் விளங்கிடு மவர்தம்
வெற்றியின் மகத்துவம் கண்டேன் !

சுந்தரத் தம்மை துணையுடன் நாளும்
சுகமுடன் பணிகளை முடித்துக்
கந்தனி னருளும் கைவரப் பெற்றுக்
காசினி வியந்திட வாழி !
அந்தமிழ்ப் பேணும் சோலையில் மூத்த
ஐயநின் ஆசிகள் வேண்டி
வந்தனை செய்தேன் அன்புட னேற்று
மகிழ்வுடன் வாழ்த்திடு வீரே !

எண்பதை எட்டும் நாளினி லும்மை
எண்டிசை வாழ்த்திட முந்தும் !
பண்பினிற் சிறந்த பாவல ரெனவே
பைந்தமிழ் தேன்மழை சிந்தும் !
கண்ணிய மான காவல ராகக்
கவியுமைப் பெற்றதெம் பேறு !
வண்டமி ழாலே வையகம் போற்ற
வாழிய ஆண்டுகள் நூறு !

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Oct-17, 12:29 pm)
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே