உயிரின் இசை
கேட்பதனைத்தும் சத்தம்
உணர்வதே இசை...
என் உயிரின் இசையை
உன்னுள் கேட்கிறேன்...
என் இசையை நான் கேட்கட்டுமா...
உனக்கில்லாததா...
இதை நீ கேட்க வேண்டுமா..
என்று
அணைத்துக்கொண்டாள்
நெஞ்சோடு
கேட்கிறதா...
கேட்கிறதடி...
ஹா ஹா
எனை நோக்கி புன்னகைத்தாள்...
அவளை கட்டிக்கொண்டு சிரித்தேன்...
உன் உயிரின் இசை ஓய்ந்துவிட்டால்
என்று கேட்க ஆரம்பிக்கும் பொழுதே
புரிந்து கொண்டு வாயை பொத்தி
என்னை மீறி ஓயுமா...
கொன்னுடுவன்..
என்று கூறிய தருணம்
கண் மெல்ல மூட
கரத்தை இறுக்கமாய் கோர்த்து
எனை போர்வையாய் போர்த்திக்கொண்டாள்.
முகத்தில் புன்னகை சற்றும் குறையாமல் பூத்திருக்க...
இருவரும் மனதால் மாத்திரமின்றி
உடல்களாலும் இடைவெளியற்று
இருக்க...
அவளின் இதயத்துடிப்பு நின்று விட்டதை உணர்ந்து
நெஞ்சில் பலமாக குத்தினேன்...
கை கால்களை தேய்த்து விட்டேன்...
பல போராட்டங்களுக்கு பிறகு மெல்ல கண்விழித்து சிரித்தாள்.
என் மனதில் ஒரு யுகப் போராட்டம் சில நிமிடங்களில்...
இறுக்கி அணைத்துக் கொண்டேன்.
கண்ணில் இருந்த கண்ணீரை துடைத்து
என்ன அழுதாயா..
என்று கேட்கிறாள்...
எனக்காக அழுதாயா
முறைக்கிறேன்...
ஹா ஹா...
சும்மா...
என்று எனையே பார்க்கிறாள்.
(எனக்காக அழுகிறாய் என்பது என்றுமே சந்தோசம்...
நீ அழுகிறாயே என்பது
என்றும் உயிரை பிசையும் வலி...)
என்ன
உன் உயிரின் இசை நின்னுடுச்சா...
உன் வாயில வசம்ப வச்சி தேய்க்க.
உத படுவடி...
ஹி ஹி...
~ பிரபாவதி வீரமுத்து