பறவையின் மனசு

பறவையின் மனசு..!
===================


கற்றால்தான் உலகுபயன் மிகுமென்பதை மக்களும்..
..........கற்றபின்தான் உணர்ந்தறிய முடிகிறது.!...ஆனால்
கற்காமலேயுலகில் வாழுமரிய உயிரினங்கள் பலவும்..
..........கற்றவருக்கு தன்செயலால் மேலும்கற்க வைக்கிறது.!

பரந்துதிரியும் பறவைமனசை ஆராய்ந்து பார்த்தால்..
..........பாடம்பல சொல்லுமது...ஆறறிவுபெற்ற மனிதனுக்கே.!
பரபரப்பான இயற்கைச் சூழலில் அழகுகொஞ்சும்..
..........பறவைக் கூட்டத்தைக் கண்டால்மனம் அமைதியுறும்.!

பெற்றவள் ஒருவளிருக்க மற்றொரு பறவையதற்கு..
..........பெருமையுடன் உணவீந்தும் உயர்ந்த குணமுண்டு.!
வேற்றுமை நிறமிலிருப்பினுமது ஒற்றுமையாகக் கூடிப்..
..........பற்றுடன் வாழ்வதற்கு பறவையெங்கே கற்றனவோ.!

பகுத்துண்ணும் குணம்கொண்ட பறவையைப் பார்த்து..
..........படித்த மாந்தர்கள் கற்கவேண்டியது பலவுண்டாமதை..
தொகுத்துப் பார்க்கின் புரியாதபல ஆச்சரியங்களதில்..
..........தொக்கி நிற்குமது மனிதனுக்குச் சாத்தியமில்லையாம்.!

உச்சாணி மரக்கிளையிலோரம் ஒடிந்துவிழும் நிலையில்..
..........உறுதியுடன் தொங்கியாடும் தூக்கணாங் குருவிக்கூடும்.!
பச்சிலையைச்சேர்த்து பசையிலாமலே இலைக்கூட்டை..
..........பசுஞ்சிட்டால் கட்டுமாற்றலு மிவைநமக்குச் சாத்தியமா.?

உண்ணாமல் வெகுதூரம் பறக்கும் தன்னினத்துடன்சேர..
..........ஓராயிரம் மைல்கடக்கு மபாரசக்தி அதனிடமுண்டு.!
உண்ணத்துடிக்கும் தன்குஞ்சுகளுக்கு ஓயாமல் இரை..
..........ஊட்ட உண்டதையுமிழ்ந்து தரும் பெரியமனசுண்டு.!

பறவைத்தேடல் என்பதொரு வாழ்க்கைத் தேடலாகுமாம்..
..........பிரபஞ்சத்தில் பிரமிக்குமொரு படைப்பே பறவையினம்.!
பறவைமனசு மிகப்பரந்த மனசாக அமைந்ததினாலந்தப்..
..........பறவையைத்தன் வாகனமாகக் கொண்டானோ இறைவன்.!

===========================================================

நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::24-09-17

நன்றி படம்:: கூகிள் இமேஜ்
=============================================

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (15-Oct-17, 1:26 pm)
பார்வை : 105

மேலே