தையலின் கிழிசல்கள்

கைத்தொழில் ஒன்றைக்
கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை
ஒற்றுக்கொள் - இது
நாமக்கல் கவிஞர்
நமக்குத் தந்த பாடல்.
பொய்த்தொழில்ப்
பெற்றவன் வாழ்கிறான்
கைத்தொழில்க்
கற்றவன் வீழ்கிறான் -இதற்கு
நாங்கள்தான் ரோல் மாடல்.

எத்தனையோ மாந்தர்க்கு
எத்தனையோ வடிவங்களில்
அவரவர் ஆசைக்கு
அளவெடுத்து அழகாக
தையல்காரர்கள்
சட்டை செய்கிறார்கள்.
அரைசட்டை,
முழுச்சட்டை, - என
பல வித சட்டைகள் தைக்கும்
அவர்கள் வாழ்க்கை
கால்ச்சட்டை அளவுகூட
கால்வைத்து நகர்வதில்லை
இதை யார்தான்
சட்டை செய்கிறார்கள்?.

எங்களுக்கு
காஜா எடுக்கும்
காலத்திலிருந்தே
ராஜாவாகும் கனவு
தொடங்கிவிடுகிறது.
ஆனால் - இவ்வுலகில்
கூஜா எடுப்பவர்தான்
ராஜாவாக முடியும்
என்பதை உணர்ந்த் பிறகு
எங்களின் கனவு அதோடு
முடங்கிவிடுகிறது.

கழுத்திலுள்ள இன்ச் டேப்பில்
வானளக்க விரும்புகிறோம்
கையிலுள்ள ரேகை சொல்லும்
வயிரளக்கத்தான் அது என்று.
தையற்சக்கரம்போல் ஒரே இடத்தில
சுழல்கிறது வாழ்க்கை
வண்டிச்சக்கரம்போல் நகர்ந்து
சுழலும் என்றே நம்புகிறோம்
ஆனால் - அது என்று?

எத்தனை உழைத்தாலும்
எங்கள் வாழ்வில்
கிடைப்பதில்லை பணநிறைவு
அழகாகத் தைக்கும்போது மக்கள்
மனமுவந்து தரும் புன்னகையும்
அலுப்பறியாமல் பணிபுரியக் கேட்கும்
இளையராஜாவின் இன்னிசையும்தான்
எங்களின் ஒரே மனநிறைவு

தையல்காரன் இருப்பதை
உலகிற்கு நினைவுகூரும்
ஒரே நாளான தீபாவளிக்காக
நாங்கள் காத்திருக்கிறோம்
திருநாளைக் கொண்டாட அல்ல
துணிகளைத் துண்டாட மட்டும்
எல்லோருக்கும் தீபாவளி
எமக்குமட்டும் தீராவலி

எங்களுக்கு எங்காவது
மச்சமிருந்தால் - நாங்கள்
தைக்கும் துணிகளில்
கொஞ்சம் மிச்சமிருக்கும்.
அது தரும் எங்களுக்கு
அங்கவஸ்திரம்.
துணியைத் தைக்கும் கைகளுக்கு
துவண்டுபோன இதயத்தில்
துணிவைத் தைக்கும்
துணிவைக்கொடு இறைவா
அதுதான் எங்களுக்கு
துயர் துடைக்கும்
தங்க அஸ்திரம்

கத்திரியால் எங்கள்
கவலைகள் வெட்டப்படுவதில்லை
ஊசி, நூலால் எங்கள்
உறவுகள் ஒட்டப்படுவதில்லை
வசதி கொஞ்சம் வந்தால்
அசதி கொஞ்சம் போகும்
அதற்காகத்தான் வேண்டுகிறோம்
முருகா!
எல்லாநாளும் எங்களுக்கு
வேலை கொடு
இல்லையா - உன்
வேலைக் கொடு
அனுதினமும் அதை வணங்கி
வழிபடுகிறோம்
அதன்பிறகாவது
வழி திறக்கட்டும்
உன் சந்நிதிக்கு
ஒளி பிறக்கட்டும்
எம் சந்ததிக்கு.

எழுதியவர் : விஜயகுமார் NAATRAYAN (20-Oct-17, 11:51 am)
பார்வை : 264

மேலே