மாண்புள்ள செயல்புரிவாய்

சும்மா இருந்தால் வாழ்வில் உன்னால்
சுடர்விட முடியாது - நீ
வீணாய் கழிக்கும் நாட்கள் எல்லாம்
விருத்தியைக் கொடுக்காது

உடலின் வியர்வைத் துளிகள் உந்தன்
உயர்வுக்கு வழிகோலும் - நீ
உறையுள் உறங்கும் வாளாய் இருந்தால்
உள்ளதும் கெடக்கூடும்

ஓடாய்த் தேய்ந்து உழைத்தால் உன்னிடம்
ஓடிவரும் பெருமை - நீ
ஓய்ந்து நித்தம் படுத்துக் கிடந்தால்
ஒண்டவரும் வறுமை

தாண்டிச் தாண்டிச் செல்லும் போதில்
தடைகளும் படிக்கல்லே - நீ
தெண்டச் சோறாய் சுற்றித் திரிந்தால்
அண்டிடும் பழிசொல்லே

அல்லும் பகலும் அயரா துழைத்தால்
வெல்லும் உன்வாழ்வு - அந்த
ஆதவன் ஒளிக்கு அஞ்சிக் கிடந்தால்
ஆட்கொள்ளும் பெருந்தாழ்வு

கூட்டுப் புழுவாய் குமைந்து கிடந்தால்
குறுமுயல் உனைமிரட்டும் - நீ
வேட்டை நாயாய் வெறிகொண்டு எழுந்தால்
வரிப்புலி உனக்கஞ்சும்

உழைப்பை உந்தன் கற்பாய் எண்ணி
பிழைத்திடும் வழிதேடு - இந்த
உருளும் உலகம் உனக்கே சொந்தம்
உறுதியுடன் ஓடு

தானாய் வாழ்வில் உயர்ந்தால் இந்த
தரணியுன் புகழ்பாடும் - உன்
தந்தையின் உழைப்பில் பிழைத்தால் உன்னை
தறுதலை எனச்சாடும்

இன்றே எழுவாய் இருவிழி திறப்பாய்
இளமையின் திறனறிவாய் - மண்ணில்
மறைந்த பின்னாலும் உன்பெயர் நிலைக்க
மாண்புள்ள செயல்புரிவாய்.

பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (21-Oct-17, 8:55 am)
பார்வை : 50

மேலே