நிலைமாறும் பருவம்

நிலைமாறும் பருவம்

தீயினால் சுட்டப்புண் தீவினைகள் மாறியதும்
நோயின்றி நீங்கிடுமாம் நோகாமல் மனத்தினிலே .
பாயினுள்ளே சுருண்டிடுவர் பாவங்கள் நாவினாலே
வாயினால் தீக்கக்கும் வரிகளுமே சுட்டுவிடும் !!


வடுவாகி நின்றுவிடும் வாசமிலாப் பேச்சினாலே
கெடுதல்கள் மிகவதிகம் கேட்டவர்கள் அறிவார்கள்
மடுவதனில் தள்ளாதீர் மாசான சொற்களினால்
தொடும்நெஞ்சைச் சுட்டெரிக்கும் தோல்விகளே உண்டாகும் !!


அன்பாலே மாற்றுங்கள் அகிம்சையுடன் வாழுங்கள்
வன்முறைகள் தீச்சொற்கள் வடுதனையே உருவாக்கும் .
தன்னலத்தை விட்டொழித்தால் தரணியினை ஆண்டிடலாம் .
நன்னெறியைப் பற்றுங்கள் நவிலுங்கள் ஆன்றோர்சொல் !!


பொய்யான வார்த்தைகளும் பொய்த்துவிடும் இவ்வுலகில்
மெய்யான வார்த்தைகளே மெய்ப்பிக்கும் உண்மைநிலை
வெய்யோனின் சீற்றம்போல் வெற்றுரையாய்ப் பேசிடுவார்
உய்வில்லை எந்நாளும் உணர்ந்திடுவோம் எல்லோரும் .


வாக்கினிலே உண்மையிலை வழக்கிற்கே இடமுண்டாம் .
காக்கின்ற கல்வியையும் கணப்பொழுதில் காழ்ப்புணர்ச்சித்
தீக்கதிரால் கக்கிடுவார் தீச்சொற்கள் ஈங்கிவரே .
சாக்குகளும் பலசொல்வார் சங்கடங்கள் செய்திடுவார் .

மொத்த சொற்கள் -- என்பது .
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Oct-17, 9:19 pm)
பார்வை : 126

மேலே