ஓமரமே

என் எச்சக் காற்றில்
உடல் வளர்த்த நீ
நின் உயிர்க் காற்றால்
உயிர்ப்பிக்கின்றாயே என்னை....

கால் ஊண நிலந்தந்த
நிலமகளை
நின் காலடிக்குள்
நிழல் போர்த்திப்
பேணுகின்றாய்...கைமாறாய்......


வதனமெங்கும் மலர் சூடி
மணம் வீசி மனம் கொய்த
நின் அழகிற்குள் எனை
ஆழப் புதைத்து
மீள வழியறியா
ஓர் பேதையாய் .....


என் பார்வைகளை
உறிஞ்சிய
நின் பிம்பங்கள்
இமை இரண்டும் கொட்டாது
பசுமையை தேக்கி வைத்து
அணை போட்டு நிற்கின்றன

உன் அங்கமெல்லாம் பங்கமாக்கி
வேய்ந்து விட்ட
என் குடியிருப்பில்
உலை ஏற்ற அழைக்கின்றேன்
தீக்குளித்தும் தீர்க்கின்றாய்
தினந்தோறும் என் பசியை....


நன்றி மறவாதே என
சிதை மூட்டும் முன்னே
ஞாபக மூட்டி வருகின்றாயே
நீயே கொள்ளியாக......

எழுதியவர் : சு.உமாதேவி (1-Nov-17, 5:31 pm)
பார்வை : 130

மேலே