மூர்க்க மனதுக்கு மறதியே தாழ்ப்பாள்

சாத்தான் புகுந்ததோ
ஆத்திரம் என்னுள்ளே
உச்சத்தில் சூடேறி
உஷ்ணமென் நரம்பிலே!
புயலாய் ஆடினேனோ-ஆழிப்
பேரலையாய் பாய்ந்தேனோ
ஓய்ந்தபின்னே உணர்ந்தேன்
ஒழிந்தது நானென்றோ?

சத்தியம் வெல்லும்
நித்தியம் நம்பினேன்
வித்தகர் பொய்யாட
தகித்து பொங்கினேன்..!
அமைதியாய் கொன்றேன்
ஆர்ப்பரித்து நின்றேன்
அனலென எரிந்து-பல
அன்பரை இழந்தேன்..!

இரத்த சொந்தத்தில்
இரணகளம் ஆவதும்
ஈன்ற செல்வத்தை
இலகுவாய் இழப்பதும்
தாங்கிய நண்பன்
நீங்கியே பிரிவதும்
கொதிக்கும் கோவத்தை
குளிர்க்க மறந்ததாம்..!

பெற்றிட்ட புகழெல்லாம்
தூற்றலாய் ஆகிடும்
நிம்மதி போயெல்லாம்
நிற்கதி ஆவதும்
துர்மதி போதையில்
துன்பத்தில் நிற்பதும்
அனல்கக்கும் சினத்தை
அடக்க முடியாததாம்..!

செய்வினை செய்தவனை
ஓய்வின்றி கொல்லும்
கோவத்தில் சிக்கினால்
பாவமே மிஞ்சும்...!
மூர்க்க மனதுக்கு
மறதியே தாழ்ப்பாள்
தர்க்கத்தை நிறுத்த
தன்மையே வழிகோல்...!

எழுதியவர் : காசி.தங்கராசு (11-Nov-17, 2:59 am)
பார்வை : 68

மேலே